For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழம்: சவக்குழிக்குப் போன "13வது அரசியல் சாசன" திருத்தத்துடன் மல்லுக்கட்டும் புதிய அரசு!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஈழத் தமிழர் பிரச்சனையில் கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பே சவக்குழிக்குப் போய்விட்ட இலங்கையின் 13வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்துதலையே புதிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசும் கூட ஈழத் தமிழரின் பிரச்சனைக்கு தீர்வாக முன்வைத்துக் கொண்டிருப்பது பிழையான அணுகுமுறை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமையுடனும் கண்ணியத்துடனும் வாழ வகை செய்ய வேண்டும்; அரசியல் சட்ட திருத்தம் 13வது பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தியதாக கூறியிருக்கிறார்.

அதாவது இலங்கையில் வாழும் ஈழத் தமிழரின் பிரச்சனைக்கு ஒற்றை தீர்வாக ராஜிவ் காந்தி காலத்தில் இருந்து இத்தனை ஆண்டுகாலமும் முன்வைக்கப்படுகிற இலங்கையின் 13வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பல்லவியைத்தான் புதிய மோடி சர்க்காரும் கூட முன்வைத்திருக்கிறது.

13வது அரசியல் சாசன திருத்தத்துக்கு காரணகர்த்தாவாக இருந்த ராஜீவ் உயிரோடு இருந்த போதே அது ஒன்றும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக இருக்காது என்று ஈழத் தமிழர்களுக்காக ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் தெள்ளத் தெளிவாக கூறிவிட்ட பின்னரும் இலங்கையிடம் மேலாதிக்கம் செலுத்துகிறோம் என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்க இந்தியப் பேராரசு காலந்தோறும் சொல்லி வரும் புரட்டைத்தான் மோடி சர்க்காரும் முன்வைக்கத் தொடங்கியிருக்கிறது.

அதென்ன 13வது அரசியல் சாசன திருத்தம்?

அதென்ன 13வது அரசியல் சாசன திருத்தம்?

கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய அரசுகள், இலங்கையிடம் சொல்லி வரும் 13வது அரசியல் சாசன திருத்தம் என்பது இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஒன்று.

இந்திய- இலங்கை ஒப்பந்தம்

இந்திய- இலங்கை ஒப்பந்தம்

1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியும் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனேயும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதைத்தான் வரலாறு இந்திய- இலங்கை ஒப்பந்தம் என்கிறது.

ஒப்பந்தம் சொல்வது என்ன?

ஒப்பந்தம் சொல்வது என்ன?

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தை வரலாற்றுப் பூர்வமான தாயகமாக ஏற்று ஒன்றாக இணைப்பது; இதற்காக கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தி முடிவு காண்பது; இதற்கேற்ப இலங்கையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது என்கிறது இந்திய- இலங்கை ஒப்பந்தம். இன்னும் சற்றே விரிவாக சொல்வதானால் இலங்கையில் தமிழர்கள் வாழுகிற பகுதிகளுக்கு என்று ஒரு தனி மாகாணம்; சிங்களர் வாழுகிற பகுதிகளுக்கு ஒரு தனி மாகாணம் அமைத்து உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளுதல்; அதற்கு ஏற்ப இலங்கையின் அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது என்பதையே இந்த ஓப்பந்தம் வலியுறுத்துகிறது.

ஏற்றது இலங்கை..

ஏற்றது இலங்கை..

அதற்கு முன்னர் இந்திரா காலத்தில் இந்தியா சொல்வதைத்தான் இலங்கை கேட்டது; அதன் தாக்கம் இந்திரா மறைவுக்குப் பின்னரும் தொடர்ந்தது. அதனாலேயே இந்தியா வலிந்து திணித்த ஒப்பந்தத்தை இலங்கையும் வேறுவழியின்றி ஏற்றது. அதுதான் அன்றைய நிலைமை. அதாவது கால் நூற்றாண்டு காலத்துக்கு முந்தைய நிலைமை. அன்று இலங்கையின் எந்தப் பரப்பிலும் சீனாவோ அமெரிக்காவோ இந்தியாவின் அனுமதியின்று நுழைந்துவிடக் கூட முடியாத ஒரு நிலைமை இருந்தது. இதே இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பின்னிணைப்புகளில் திருகோணமலை துறைமுகத்தின் மீதான இந்தியாவின் ஆதிக்கமும் வலியுறுத்தப்பட்டு அதை "அன்றைய இலங்கை" ஏற்றதும் வரலாறு.

அரசியல் சாசன திருத்தம்..

அரசியல் சாசன திருத்தம்..

அன்றைய இலங்கை அரசு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை ஏதோ ஒருவகையில் ஏற்று 1988ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தின் 13வது பகுதியில் திருத்தமும் கொண்டுவந்தது. அதே நாளில் இலங்கையில் மாகாண கவுன்சில்கள் அமைக்கவும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

வடகிழக்கு மாகாண இணைப்பும் தேர்தல்

வடகிழக்கு மாகாண இணைப்பும் தேர்தல்

அதன் பின்னர் 1988ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த போது வடகிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் வரதராஜ பெருமாள் முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அன்றே புலிகள் எதிர்ப்பு

அன்றே புலிகள் எதிர்ப்பு

ஆனால் இந்த வடகிழக்கு மாகாண இணைப்பு முறையிலான தீர்வை அன்று விடுதலைப் புலிகள் ஏற்கவும் இல்லை. அந்த தேர்தலில் பங்கேற்கவில்லை. அதன் பின்னர் இந்திய அமைதிப்படை- புலிகள் இடையே மோதலும் ஏற்பட்டது.

காலம் மாறியது..

காலம் மாறியது..

அதே காலகட்டத்தில் இந்தியாவில் இந்திரா போன்ற வலுவான தலைவர்கள் இல்லாத கூட்டணி அரசு முறையும் உதயமாகத் தொடங்கியது. இதனால் இனி இந்தியாவின் மேலாதிக்கத்துக்கு அடிபணியத் தேவையில்லை என்று இலங்கையும் முடிவு செய்தது. இந்தியாவை எதிர்க்கத் துணிந்து விடுதலைப் புலிகளோடு இணைந்து இந்திய அமைதிப்படையை வெளியேற்றச் செய்தது அன்றைய இலங்கை அரசு.

அமைதிப்படையோடு முடிந்த கதை..

அமைதிப்படையோடு முடிந்த கதை..

இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறிய போதே வடகிழக்கு மாகாண முதல்வராக இருந்த வரதராஜ பெருமாள்கூட இந்தியா உருவாக்கி வைத்தது சரியான தீர்வு அல்ல கூறி இலங்கையைவிட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். கிட்டத்தட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தமும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது அரசியல் சாசன திருத்தமும் அப்போதே சவக்குழிக்குப் போன கதையாகிவிட்டது. அது ராஜிவ் காலத்திலேயே புதைகுழிக்குப் போய்விட்டது என்பதுதான் நிதர்சனம்.

மாறிப்போன இந்திய முகம்..

மாறிப்போன இந்திய முகம்..

1991-ல் ராஜிவ் காந்தி கொல்லப்படுகிறார். இந்தியாவில் நரசிம்மராவ் அரசு அமைகிறது. அது தொடக்கம் இந்தியாவில் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கிற இடத்தை அதிகாரிகள் கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்றனர். இந்திர காலம் வரை வெளியுறவுக் கொள்கையை தீர்மானித்தது அரசியல் தலைவர்கள் என்ற நிலைமை ராஜிவ் காலத்தில் மெல்ல தலைகீழாகிப் போய் பின்னர் அதிகாரிகளே தீர்மானிக்கும் சக்திகளாக உருமாறிவிட்டனர்.

மெல்ல மெல்ல சீனா, பாகிஸ்தான்..

மெல்ல மெல்ல சீனா, பாகிஸ்தான்..

இந்தியாவின் இந்த குழப்பமான வெளியுறவுக் கொள்கைதான் இலங்கையில் சீனாவும் பாகிஸ்தானும் ஊடுருவி நிலைத்து நிற்க காரணமாக இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவோ தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிப்பது ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு அதற்காக மட்டுமே இலங்கையைப் பயன்படுத்திக் கொண்டது. அங்கே சீனாக்காரனும் பாகிஸ்தானும் டேரா போட்டதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

பிரிக்கப்பட்ட வட-கிழக்கு

பிரிக்கப்பட்ட வட-கிழக்கு

இதனாலேயே இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்படி இணைக்கப்பட்ட வட- கிழக்கு மாகாண இணைப்புக்கு எதிராக ஜே.வி.பி. எனும் சிங்கள பேரினவாத இயக்கம் அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. 2006ஆம் ஆண்டு அந்த உச்சநீதிமன்றமும் வடகிழக்கு மாகாண இணைப்பு செல்லாது என்று அறிவித்தது.

வாய்மூடிக் கிடந்த இந்தியா

வாய்மூடிக் கிடந்த இந்தியா

இப்போது 13வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்து என்று முழங்குகிற இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் அப்போது இந்திய- இலங்கை ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாகாண பிரிப்பை எதிர்க்கவே இல்லை. வாய்மூடி மவுனியாகத்தான் வேடிக்கை பார்த்தனர்.

இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண தேர்தலையும் தனியே இலங்கை அரசு நடத்தி முடித்தது. அப்போதும் இந்திய அரசு வாய்மூடி மவுனியாகத்தானிருந்தது.

2009 யுத்தம் முடிவு..

2009 யுத்தம் முடிவு..

2009ஆம் ஆண்டு ஒட்டுமொத்த உலக நாடுகளுமே இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் தொடுக்க தமிழர் விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. அங்கே ஒன்றரை லட்சம் தமிழர் படுகொலைக்குள்ளாக்கப்பட்ட போதும் இந்தியா வாய் மூடி மவுனியாகத்தான் இருந்தது.

மறுவாழ்வு..

மறுவாழ்வு..

இதைத் தொடர்ந்து ஈழத் தமிழரின் மறுவாழ்வுக்கு ஆயிரங்கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்கிறோம் என்று இந்திய அரசு சொல்கிறது. ஆனால் அங்கே எத்தகைய மோசமான மனித உரிமை மீறல்களில் சிங்கள ராணுவம் ஈடுபட்டு வருகிறது என்பது பற்றி பேச மறுக்கிறது இந்திய அரசு.

13வது திருத்தமே ரத்து செய்க!

13வது திருத்தமே ரத்து செய்க!

இதன் பின்னர் 13வது அரசியல் சாசன திருத்தம் என்பதையே ரத்து செய்தாக வேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய குரல் கொடுத்தார். அதைப் பற்றியும் கூட இந்தியா கவலை கொள்ளவில்லை.

13வது திருத்தத்தில் திருத்தங்கள்..

13வது திருத்தத்தில் திருத்தங்கள்..

அத்துடன் 13வது அரசியல் சாசன திருத்தத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு ராஜபக்சே அரசு முயற்சித்துக் கொண்டிருக்க அந்நாட்டு எதிர்க்கட்சியான சிங்களரின் ஐக்கிய தேசியக் கட்சியே அதை எதிர்க்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதை நிராகரிக்கிறது.

13வது திருத்தத்தையே இல்லாதொழிக்க..

13வது திருத்தத்தையே இல்லாதொழிக்க..

இப்படி இலங்கை அரசோ 13வது அரசியல் சாசன திருத்தம் என்ற ஒன்றே இருக்கக் கூடாது என விரும்புகிறது. ஆனால் இந்திய அரசோ, இலங்கையிடம் தமிழர் பிரச்சனை பற்றி பேசுவதற்கான "ஒரு பேசு பொருளாக" இருக்கட்டுமே என்றுதான் கால்நூற்றாண்டுக்கு முன்னரே புதைக்கப்பட்டுவிட்ட 13வது சாசன திருத்தம் பற்றி பேசுகிறது.

நடைமுறை யதார்த்தம் என்ன?

நடைமுறை யதார்த்தம் என்ன?

ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நடைமுறை யதார்த்தம், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளால் மூடி மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்து போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட்ட வேண்டும்; தமிழர் தாயகப்பகுதியில் சுதந்திரமாக வாழ்வதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சனை எல்லை கடந்து போய்க் கொண்டிருக்க இன்னமும் 13வது திருத்தத்துடன் சுஜாதாசிங் வகையறாக்கள் மல்லுக் கட்டுகிறார்கள்..

அட தமிழகத் தீர்மானத்தையாவது புரிந்தார்களா?

அட தமிழகத் தீர்மானத்தையாவது புரிந்தார்களா?

இலங்கையின் களநிலவரத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் இருக்கட்டும். தமிழக சட்டசபையிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையாவது உள்வாங்கி ஈழத் தமிழர் பிரச்சனையின் புதிய பரிமாணம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றியாவது துளியாவது வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு சிந்திக்க மனம் இருந்ததா? மனசாட்சியே இல்லாமல் மரணகுழியில் இருந்து 13வது சாசன திருத்தத்தை தோண்டி எடுக்கிறார்களே

மோடி சர்க்காரும் கூடவா?

மோடி சர்க்காரும் கூடவா?

மோடி வந்தால் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று தெருவெங்கும் வாய்ப்பந்தல் போட்டனர் பாஜகவினர். இப்போதும் அவர்கள் இற்றுப் போன 13வது அரசியல் சாசன திருத்தம், ஒன்றுபட்ட இலங்கை என்ற சொத்தை வாதத்தை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

இன்னொரு காங்கிரஸ் சர்க்கார்

இன்னொரு காங்கிரஸ் சர்க்கார்

ஈழத் தமிழர் பிரச்சனையில் முந்தைய காங்கிரஸ் குரலில் மட்டுமே மோடி சர்க்காரும் பேசி காங்கிரஸின் இன்னொரு முகமாக வெளிப்படுகிறது. ஏற்கெனவே இதற்கான விலையை காங்கிரஸ் கொடுத்துவிட்டது.. மோடி சர்க்காரும் அப்படி ஒரு விலையைக் கொடுக்க வேண்டுமா? இல்லையா? என்பது பாஜகவினர் கைகளிலேயேதான் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
The new Prime Minister Narendra Modi in his first day in office asked the government of Sri Lanka to expedite the process of national reconciliation by fully implementing the 13th Amendment to the Constitution and going beyond. Prime Minister Narendra Modi expressed this view when he welcomed the Sri Lankan President Mahinda Rajapaksa for bilateral talks this morning at the Hyderabad House in New Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X