For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனவர்கள் பிரச்சனை: ராஜ்யசபாவில் ஒரே குரலில் பேசிய மைத்ரேயன், கனிமொழி!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று ராஜ்யசபாவில் அதிமுகவின் மைத்ரேயன், திமுகவின் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோர் ஒரே குரலில் வலியுறுத்தினர்.

ராஜ்யசபாவில் நேற்று காலையில் கேள்வி நேரம் முடிந்ததும் முக்கிய பிரச்னைகளை அவையில் எழுப்ப உறுப்பினர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. அப்போது கச்சத்தீவு, தமிழக மீனவர் பிரச்னையை இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா, அதிமுக உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன், திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோர் எழுப்பினர்.

கச்சத்தீவை மீட்க வேண்டும்

கச்சத்தீவை மீட்க வேண்டும்

அப்போது டி. ராஜா பேசியதாவது:

இந்தியாவைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய அரசு நிலைநாட்ட வேண்டும். இலங்கையுடன் இந்தியா மேற்கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் மத்திய அரசு மறுபரிசீலனைக்கு உள்படுத்த வேண்டும்.

மத்திய அரசு நிலை தவறு

மத்திய அரசு நிலை தவறு

கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்தது தவறாகும். இந்த விஷயத்தில் பரஸ்பரம் ஒப்பந்தத்தை இலங்கை மதிக்கத் தவறினால் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய நேரிடும் என்று இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

தீர்வுதான் எப்போது?

தீர்வுதான் எப்போது?

தமிழக மீனவர் பிரச்னையை பலமுறை நாங்கள் எழுப்பியுள்ளோம். ஆனால், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்படும் பிரச்னைக்குத் தீர்வுதான் கிடைக்கவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும்.

முதல்வரின் கடிதங்கள்..

முதல்வரின் கடிதங்கள்..

தமிழக முதல்வர் கூட இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் ஏராளமான கடிதங்களை எழுதியுள்ளார். எனவே மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு டி. ராஜா பேசினார்

கருணை தேவையில்லை

கருணை தேவையில்லை

அதிமுக எம்.பி. டாக்டர் வா. மைத்ரேயன் பேசியதாவது:

தமிழக மீனவர் விவகாரத்தில் மத்திய அரசின் கருணையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவர்களின் மீன் பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டியதும் மத்திய அரசின் கடமை.

மத்திய அரசு அறிக்கையால் அதிர்ச்சி

மத்திய அரசு அறிக்கையால் அதிர்ச்சி

கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது. அது முடிந்து போன பிரச்னை என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறது. அதை அறிந்து நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

மீனவர் விடுதலைக்கு பாராட்டு

மீனவர் விடுதலைக்கு பாராட்டு

மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்த 184 இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்காக பாராட்டுகிறேன். அதேசமயம், சிறைப்பிடிக்கப்பட்ட போது மீனவர்களின் படகுகள், வலைகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருந்தது. அவற்றை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மைத்ரேயன் பேசினார்.

மீன்வள அமைச்சகம் தேவை

மீன்வள அமைச்சகம் தேவை

திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:

கடல்சார் பாதுகாப்பு, மீனவர்கள் நலன்கள் போன்றவற்றை உறுதிப்படுத்த மீன் வளத்துக்கென தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, கடந்த ஜனவரியில் தமிழகத்தின் ராமேஸ்வரம் மீனவர்களுடன் பேசியபோது இதற்கான உறுதியை சுஷ்மா ஸ்வராஜ் அளித்திருந்தார். பாஜக தேர்தல் அறிக்கையிலும் மீனவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.

நிரந்தர தீர்வு தேவை

நிரந்தர தீர்வு தேவை

எனவே, அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது, உயிருக்கு உத்தரவாதம் இல்லாத அச்ச உணர்வுடன் உள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் 179 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததும் படகுகளை சிறைப்பிடித்ததுமே இதற்குக் காரணம். மீனவர்களைக் காக்க நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

English summary
Tamil Nadu MPs raised in the Rajya Sabha on Friday the issue of renegotiating the Katchatheevu agreement with Sri Lanka to protect the rights of Tamil fishermen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X