For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டுக்கு தடையெனில் அசைவ உணவுக்கும் தடையா? சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வாதம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மனிதர்களின் இன்பத்திற்காக காளைகளை துன்புறுத்தும் ஜல்லிக்கட்டுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், அப்படியானால் இறைச்சிக்காக உயிரினங்களை அடித்து கொல்வதையும் தடை செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பினாகி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.

SC asks why jallikattu should not be banned

இந்திய விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் வழக்கறிஞர் பஞ்ச்வானி ஆஜராகி வாதாடினார். அவர் தன்னுடைய வாதத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் ஆபத்தானவையாக உள்ளன. இந்த போட்டிகள் மனித உயிர்களுக்கும், மிருகங்களுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்த போட்டிகளால் அப்பாவி மிருகங்களின் மீது பெருமளவில் கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. எனவே, இந்த ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

மத்திய அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தனது தரப்பு வாதத்தின் போது, கடந்த 2011-ம் ஆண்டு மனிதர்களுக்கு பொழுதுபோக்கு வழங்கும் விலங்குகள் பட்டியலில் காளை இடம் பெற்றிருந்தது. அதனை தற்போது அந்த பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாதுஎன்றும் கூறினார்.

இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள் 2011-ம் ஆண்டு இந்த பட்டியலில் காளையை சேர்த்த அதே மத்திய அரசு, தற்போது அதனை நீக்குவதாக கூறுவது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினார்.

இந்த வழக்கை பொறுத்தவரை மத்திய அரசு அலட்சியமாக செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவித்தார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்று வாதிட்டார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு தான் போட்டிகள் நடத்தப்படுவதாகவும், அதனை உச்சநீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கலாம் என்றும் அதற்கு தமிழக அரசுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், காளைகளை துன்புறுத்தாமலும், உயிர்சேதமின்றியும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக கூறும் தமிழக அரசின் வாதத்தை ஏற்க முடியாது என்றும் காளைகள் துன்பப்படாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எப்படி பங்கேற்க வைக்க முடியும் என்றும் கேள்விகள் எழுப்பினர்.

மேலும் மனிதர்களின் இன்பத்திற்காக காளைகளை துன்புறுத்தும் இதுபோன்ற போட்டிகளை ஏன் நிரந்தரமாக தடை செய்யக்கூடாது? என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமழக அரசின் வழக்கறிஞர் எந்த உயிரினங்களையும் துன்புறுத்தக்கூடாது என்றால் நாட்டில் ரேக்ளா பந்தயம், குதிரை பந்தயம் உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்து தான் தடை விதிக்க வேண்டும். காளையை அடக்குவதற்காக வீரர்கள் ஒரு நிமிடத்துக்கும் குறைவாகத்தான் காளையின் முதுகு மற்றும் கொம்பு பகுதிகளைப் பிடித்து அடக்க முயற்சிப்பதாகவும் ஆனால் இதைவிடக் கொடூரமாக காளைகள் கொல்லப்பட்டு இறைச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால் இந்தப் போட்டிகளுக்குத் தடை விதிப்பதற்கு முன்பு உயிரினங்களை அடித்துக்கொன்று உணவாக சாப்பிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

English summary
The Supreme Court on Wednesday asked the Tamil Nadu government why jallikattu, a bull-taming sport, should not be banned in the State
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X