For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மீதான வருமான வரித்துறை வழக்கு: 3 மாதங்களுக்கு விசாரணைக்கு தடை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கின் விசாரணையை மேலும் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 1991-92 மற்றும் 1992-93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என கூறி அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

SC Stays Trial in IT returns case Against Jayalalithaa for Three months

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். கடந்த ஜனவரி மாதத்தில் அந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், வருமான வரி கணக்கு தொடர்பான இந்த வழக்கின் விசாரணையை 4 மாத காலத்துக்குள் சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சசி எண்டர்பிரைசஸ் தரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனு தாக்கல் செய்தனர். அதில்,

வழக்கு தொடர்பான ஆவணங்கள் விசாரணை நீதிமன்றத்துக்கு மார்ச் 13-ம் தேதி போய்ச் சேர்ந்தது. தமிழகத்தில் ஆளும் கட்சியின் பொது செயலராக ஜெயலலிதா இருந்து வருகிறார். பொதுத்தேர்தலுக்கான அட்டவணை மார்ச் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

வழக்கு ஆவணங்கள் விசாரணை நீதிமன்றத்துக்கு போய்ச் சேரும் முன்பே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 24-ல் நடக்கிறது. மாநிலத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஆளும் கட்சி போட்டியிடுகிறது.

மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் ஈடுபடுவதால் நேரில் ஆஜராகி வாக்கு மூலத்தை பதிவு செய்ய இயலாத நிலையில் இருக்கிறார். எனவே வழக்கு விசாரணையை முடிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 4 மாத காலம் நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு

இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் முடியும் வரை 3 மாதங்களுக்கு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நேரில் ஆஜராகவேண்டும்.

அதே சமயம் தேர்தல் முடிந்த பின் ஜெயலலிதா விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இவ்வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் வருகிற 28 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The Supreme Court stayed three months the trail Income tax returns case against Tamil Nadu Chief Minister J. Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X