For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிட்னி முருகன் சைவநெறி மாநாடு 2014 - செப். 6,7 தேதிகளில் 2ம் கட்ட பயிலரங்கங்கள்

Google Oneindia Tamil News

Australia: Sydney Murugan temple 'Saivaneri conference'
சிட்னி: சிட்னி முருகன் ஆலயமும் உலக சைவப்பேரவை ஆஸ்திரேலியாவும் இணைந்து ‘சிட்னி முருகன் சைவநெறி மாநாடு 2014' என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கடந்த மாதம் இந்த மாநாட்டின் கருத்தரங்குகளும், பயிலரங்குகளும் நடந்து முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இம்மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் சில பயிலரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆன்மிக வழிகாட்டிகள்:

சைவ நெறி தழைத்தோங்கும் தாய்த் தமிழகத்தில் இருந்தும், ஈழத்தமிழகத்தில் இருந்தும், மலேசிய மண்ணில் இருந்தும் சைவநெறிக்காகத் தம்மை அர்ப்பணித்துச் சிவ சிந்தையோடு நாளும், பொழுதும் இயங்கி வருகின்ற ஆன்மிக வழிகாட்டிகள், ஓதுவார் மூர்த்திகள், கல்விமான்கள் என்று பெரும் புலமையாளர்களை ஒன்று திரட்டி நிகழ்த்தப்படும் ஒரு பெரிய முன்னெடுப்பாக இந்த மாநாடு திகழவிருக்கின்றது,

சைவநெறி மாநாடு:

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற முதுமொழிக்கமைய இந்துக்கள் தாம் செல்லும் இடங்கள் தோறும் ஆலயங்கள் அமைத்துப் பணி செய்து வருகின்றார்கள். இன்று புலம்பெயர்ந்து பல்வேறு தேசங்களிலும் வாழும் நமது மக்கள் முன்னெடுத்து வரும் இந்த ஆன்மிகப் பணியில் சிட்னியில் வைகாசிக் குன்றில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் சிட்னி முருகன் ஆலயத்தின் பணி வெறும் சமயப் பணியோடு நின்றுவிடாது, சமூகப்பணியிலும் தன்னை முன்னெடுத்து வருகின்றது. சைவப்பாடசாலை மற்றும் பண்ணிசை வகுப்புகளின் வாயிலாகவும், இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து சிட்னி மண்ணுக்கு வரும் ஆன்றோர் பெருமக்கள் பெரும்பாலும் சிட்னி முருகன் ஆலயத்தின் பின் வளவில் இருக்கும் கலாசார மண்டபத்தில் தம் சைவப் பிரசங்கங்களை நிகழ்த்திச் செல்வதும் வழமையான பணியாக அமைகின்ற சூழலில், இந்த சைவ நெறி மாநாடு என்பது இவற்றுக்கெல்லாம் தலையாயதான ஒரு பெரும் பணியாக அமைந்து நிற்கின்றது.

வரலாற்றுச் சாட்சி:

ஒரு காலத்திலே சைவ நெறியோடு ஆட்சி செய்த மன்னர்களால் ஆலயங்கள் வெறும் ஆன்மிக நிலையங்களாக மட்டுமே இயங்கக் கூடாது, மக்களுக்கு சைவ நெறியைப் போதிக்கும் கல்விச்சாலைகளாகவும் இயங்க வேண்டும் என்ற முனைப்போடு செயற்பட்டதை நாம் வரலாற்று ஆதாரங்களின் வாயிலாகவும், இன்றும் தொன்மை பேசி விளங்கி நிற்கும் ஆலயங்களின் அமைப்பு முறைகளாலும் கண்டிருக்கின்றோம். சோழ மன்னர்களின் பொற்கால ஆட்சி இதற்கொரு வரலாற்றுச் சாட்சி.

இது ஓர் அரிய சந்தர்ப்பம்:

சைவ நெறி மாநாடு என்பது ஏன் முக்கியம் என்பதை நம் வீட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம். இன்று புலம்பெயர்ந்த சூழலில் வாழும் அடுத்த தலைமுறையினர் சைவ சமயம் தொடர்பாக நம்மிடம் கேட்கும் கேள்விகளுக்குத் தகுந்த பதில் கொடுக்க நாம் பல சமயம் திணறுவோம். சில வேளை நம் சமயம் மீதான அவ நம்பிக்கையாகவும் கூட அது மாறக்கூடிய பேரபாயம் இருக்கும். இந்தச் சூழலில் இப்படியான மாநாட்டுக் கருத்தரங்கங்கள் தான் இளைய சமுதாயத்தையும், ஏன் மூத்த தலைமுறையையும் கூட ஐயம் திரிபுற சைவ சமய உட்கருத்துக்களை அறிந்து, சந்தேகங்களைப் போக்கி நமது மதத்தை முன்னெடுத்துச் செல்லப் பேருதவியாக அமைகின்றன. இந்த மாநாட்டுக்கு வருகை தந்திருக்கும் ஆன்மிக வழிகாட்டிகள் மற்றும் கல்விமான்கள் போன்றோர் வாயிலாக சைவ சமயத்தின் உட்கருத்துக்களைத் தர்க்க ரீதியாக அணுகி அவற்றுக்கான தெளிவான விளக்கங்களைப் பெற இதுவோர் அரிய சந்தர்ப்பம்.

இரண்டு பகுதிகள்:

இந்த சைவ நெறி மாநாட்டு நிகழ்வுகள் இரண்டு பகுதிகளாக அமைகின்றன. மாநாட்டின் கருப்பொருளான "சைவ ஆகமங்கள், திருமுறைகள், மற்றும் சித்தாந்த நூல்கள் காட்டும் மனித நேயம்" போன்ற அம்சங்களோடு முக்கிய கருத்தரங்க நிகழ்வுகள் சிட்னி முருகன் சைவ நெறி மாநாட்டின் முக்கிய கருத்தரங்க நிகழ்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 29, 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் இடம் பெற்றன.

பயிலரங்கங்கள்:

சைவ நெறி மாநாட்டு நிகழ்வுகளின் இன்னொரு பரிமாணமாக பயிலரங்கங்கள் என்ற பிரிவில் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, "சைவ மதத்தை நன்கு தெரிந்து கொள்ளும் வழி" என்ற தொனிப்பொருளில் மாநாட்டு நிகழ்வுகளுக்குமுந்திய வாரத்தில் ஆகஸ்ட் 23, 24 ஆகிய நாட்களில் நடந்தேறின. இதன் தொடர்ச்சியாக மாநாட்டு நிகழ்வு நிறைவுற்ற பின்னர் செப்டெம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

துவக்கநாள்:

ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி சைவநெறி மாநாட்டின் துவக்க நாளில், மாலை 3.45 மணிக்கு பிள்ளையார் பூசையினைத் தொடர்ந்து நல்லை ஆதீன முதல்வர் சிறிலசிறி சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுர ஆதீன மூத்த தம்பிரான் முனைவர் குமாரசாமித்தம்பிரான் சுவாமிகள், முனைவர் சபாரத்தினம் சிவாச்சார், கலாநிதி சுரேஷ் கோவிந்த், முனைவர் பேராசிரியர் மா.வேதநாதன், முனைவர் பேராசிரியர் கோ.ப. நல்லசிவம், சைவப்புலவர் செ. நவநீத குமார் ஆகியோரின் சிறப்புரைகளோடும், ஓதுவார் மூர்த்தி அரிகர தேசிகர் அவர்களின் திருமுறைப் பண்ணிசை மற்றும் அன்றைய நாள் நிகழ்வின் முத்தாய்ப்பாக சங்கீத கலாநிதி பேராசிரியர் மு. நவரட்ணம் அவர்களின் திருப்புகழிசையோடு மாநாடு அமைந்தது.

2ம் நாள்:

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் காலை 8 மணிக்கு நாதசுர இசையுடன் ஆரம்பமாகி, மாநாட்டு மலர் வெளியீடு, அறிஞர் பெருமக்களின் சிறப்புரைகளோடு நடந்து முடிந்தது.

முழுநாள் நிகழ்வுகள்:

ஆகஸ்ட் மாதம் 30 மற்றும் 31 ஆம் தேதிகள் முழு நாள் நிகழ்வுகளாக அமைந்தது. பொது அரங்கம் என்ற பிரிவில் காலை 10.40 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரையான நிகழ்வுகளும், மதியம் 1.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை இளைஞர் அரங்கம், மற்றும் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தல் ஆகியவை நடந்தேறியது.

நிறைவு நாள் நிகழ்ச்சி:

இந்த நிகழ்வுகளில் தமிழக, இலங்கை மற்றும் மலேசிய மண்ணில் இருந்து வருகை தந்திருக்கும் ஆன்றோர் பெருமக்கள் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து சிறப்பித்தார்கள். ஆக்ஸ்ட் 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாநாட்டின் நிறைவு விழா நிகழ்வுகள் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9.30 மணி வரை நடை பெற்றது.

பிந்திய பயிலரங்கங்கள்...

சைவ நெறி மாநாட்டின் பிந்திய பயிலரங்கங்களில்,செப்டெம்பர் 6 ஆம் தேதி, சனிக்கிழமை, "திருமுறைப் பண்ணிசை பயில்வோம்" என்ற நிகழ்வு தமிழ் தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் ஓதுவார் மூர்த்தி மா.அரிதரன் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்திருக்கும் பேராசிரியர் கலாநிதி நவரட்ணம் ஆகியோராலும் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

சைவசித்தாந்தம் ஓர் எளிய அறிமுகம்...

செப்டெம்பர் 6 ஆம் தேதி சனிக்கிழமை, "சைவசித்தாந்தம் ஓர் எளிய அறிமுகம்" என்ற நிகழ்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசியார் மா.வேத நாதன் அவர்களால் வழங்கப்பட இருக்கின்றது. செப்டெம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, "Saiva Tradition 101" என்ற நிகழ்வு ஆங்கிலத்தில் நிகழ்த்தப்படவுள்ளது. இதனை டாக்டர் எஸ்.பி.சபாரத்தினம், திரு அலன் குரோக்கர், திரு ராஜா விக்னரசா, திரு நந்திவர்மன் மற்றும் திரு ஜி.செல்லப்பா ஆகியோர் நெறிப்படுத்தி வழங்க இருக்கிறார்கள்

புராணப் படிப்புக் கலை...

செப்டெம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, "ஈழத்துக் கந்தபுராணக் கலாசாரம் தந்த புராணப் படிப்புக் கலை" என்ற நிகழ்வு தமிழிலே, சைவப்புலவர் செ.நவநீதகுமார், திரு கனகசபாபதி (யாழ்ப்பாணம்), டாக்டர் எஸ்.கணபதிப்பிள்ளை ஆகியோராலும் சிறப்பாகப் பகிரப்படவுள்ளது. செப்டெம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, "இனிய வாழ்வுபெற வழிகாட்டும் திருமுறைகள்" என்ற நிகழ்வு தமிழிலே, முனைவர் கோ.ப.நல்லசிவம் (தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்) அவர்களாலும் நெறிப்படுத்தப்பட்டு வழங்கப்பட இருக்கின்றன.

மற்ற விபரங்களுக்கு:

சைவ நெறி மாநாட்டின் கருத்தரங்கங்கள் மற்றும், பயிலரங்கங்கள் குறித்த முழு விபரங்களும் சிட்னி முருகன் ஆலயத்தின் இணையத்தளத்தில் கிடைக்கின்றன.

English summary
In Australia, the Sydney Murugan temple ‘Saivaneri conference' is happening this month. Many spiritual leaders from all over the world are participating in this Saivaneri conference.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X