For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் மீண்டும் புயலைக் கிளப்பும் மோனிகா லெவின்ஸ்கி!

By Shankar
Google Oneindia Tamil News

Monica Lewinsky issue again rocks US
வாஷிங்டன்(யு.எஸ்). உலகம் முழுவதும் உள்ள பிரபலமான அரசியல்வாதிக்கு ‘விடாது கருப்பு' போல் ஏதாவது ஒரு பிரச்சனை வாழ் நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக செக்ஸ் புகார்கள்!

அமெரிக்க மக்களின் ஏகோபித்த ஆதரவை இன்றளவும் பெற்றிருக்கும் முன்னாள் அதிபர் பில் க்ளிண்டனும் விதிவிலக்கல்ல. வெள்ளை மாளிகையில் அவருடன் நெருக்கமாக இருந்து பெரும் புயலைக் கிளப்பிய மோனிகா லெவின்ஸ்கி மீண்டும் ஒரு புயலைக் கிளப்ப தயாராகிறார்.

2016 அதிபர் தேர்தலில் ஹிலரி க்ளிண்டன்

அதிபர் ஒபாமாவுடன் 2008 ஆம் ஆண்டு உட்கட்சி தேர்தலில் வெற்றிபெறாத நிலையில், அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் வாய்ப்பை ஹிலரி க்ளிண்டன் இழந்தார். அதன் பிறகு ஒபாமாவுடன் சமரசமாகி அவருடைய அமைச்சரவையில் அதிகாரமிக்க வெளியுறவுத்துறை அமைச்சரானர். மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இரண்டாவது முறை அமைச்சராக தொடராமல் பதவியிலிருந்து விலகினார்.

ஒபாமாவும் அவரை மிகவும் அதிக சிரத்தையுடன், உச்சபட்ச மரியாதையுடன் அமைச்சரவையிலிருந்து பிரியா விடை கொடுத்து அனுப்பினார். அன்று முதல் இன்று வரையிலும் ஹிலரி அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு அமெரிக்க அரசியலில் எகிறி கிடக்கிறது. ஆனால் ஹிலரியோ இந்த ஆண்டு இறுதியில் தெரிவிப்பதாக கூறி மேலும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினரின் பீதி

ஹிலரி க்ளிண்டன் அதிபர் ஆவதற்கு சாதகமாக தொடர்ந்து கருத்துக் கணிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இன்றைய சூழலில் அவருக்கு எதிராக யார் போட்டியிட்டாலும் மண்ணை கவ்வுவது உறுதி என்பதுதான் உண்மையான நிலை.

ஜனநாயகக் கட்சியில், ஹிலரிக்கு எதிராக உட்கட்சி தேர்தலில் போட்டியிடக் கூட யாரும் தயாராக இல்லை. துணை அதிபர் ஜோ பைடன் மட்டும் அவ்வப்போது தானும் களத்தில் இருக்கப்போவதாக சொல்கிறார். ஆனால் அது எதிர்பாராத சூழலில் ஒரு மாற்று ஏற்பாடாக மட்டுமே இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அடுத்ததாக ஜனநாயகக் கட்சியில் செல்வாக்கு மிக்க மேரிலாண்ட் கவர்னர் மார்ட்டின் ஓ மைலே, ஹிலரி அதிபர் ஆவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்கிறார். இவ்வாறு சொந்தக் கட்சியில் எந்த எதிர்ப்பும் இல்லாத ஹிலரிக்கு எதிர்க்கட்சியிலும் சரியான போட்டியாளர் யாரும் இல்லை.

அமெரிககாவின் முதல் பெண் அதிபர்?

எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியில் ஒரளவு செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்ட க்ரிஸ் க்ரிஸ்டி, நியூயார்க் பாலம் மூடப்பட்ட விவகாரத்தில் சிக்கி சின்னா பின்னமாகி விட்டார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் சகோதரர் ஜெப் புஷ் களத்தில் இறங்கப் போவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

எதிர்த்துப் போட்டியிடுபவர் யாராக இருந்தாலும் அனாசயமாக வெற்றிப் பெறக்கூடிய நிலையில் ஹிலரி இருப்பதாக கருதப்படுகிறது. அவர் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார். அந்த காரணத்திற்காகவே, பெண்கள் வாக்குகள் அவருக்கு ஒட்டு மொத்தமாக கிடைக்கும் என நம்பப்படுகிறது.

பெண்ணுக்கு எதிரி இன்னொரு பெண்

பெண்கள் வாக்குகள் மொத்தமாக ஹிலரிக்கு கிடைக்க விடாமல் செய்ய ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலையில் மீண்டும் மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தை குடியரசுக் கட்சியின் ராண்ட் பால் கையிலெடுத்துள்ளார். அதிபர் அலுவலகத்தில் தனக்கு கீழ் வேலை பார்த்த சிறு வயது பெண்ணான மோனிகாவுடன் தவறாக நடந்த பில் க்ளிண்டனின் மனைவி ஆட்சியில் பெண்கள் உரிமை பற்றி எப்படி எதிர்பார்ப்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நடந்து முடிந்த பில் க்ளிண்டன் விவகாரத்திற்கும் ஹிலரி க்ளிண்டனின் எதிர்கால ஆட்சிக்கும் எப்படி முடிச்சு போடுவீர்கள் என்று கேட்டால் 'அது அப்படித்தான்' என்று பொத்தாம் பொதுவாக கூறுகிறார். மொத்தத்தில் மோனிகா விவகாரத்தை மீண்டும் நினைவு படுத்துவதன் மூலம் ஹிலரிக்கான பெண்கள் ஆதரவைக் குறைத்து விடலாம் என நினைக்கிறார்.

மோனிகாவின் ‘எல்லாமும் சொல்கிறேன்'

2005 ஆம் ஆண்டிற்கு பிறகு வரையிலும் லண்டனில் வசித்து வந்த மோனிகா லெவின்ஸ்கி, அமெரிக்கா அரசியல் சூழலை மையமாக வைத்து மீண்டும் புத்தகம் எழுதி பரபரப்புக்கு தயாராகிறார். 'Tell All' என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள புதிய புத்தகத்தில், தனக்கும் க்ளிண்டனுக்குமிடையே நடந்த அந்தரங்க உரையாடல்களை அவர் வெளியிடப்போவதாக நியூ யார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு வெளியாகும் இந்த புத்தகத்தில், க்ளிண்டனுக்கு மோனிகா எழுதிய காதல் கடிதங்களும் இடம் பெறப் போகிறதாம்.

க்ளிண்டனின் செல்வாக்கு இருக்கும் வரை மோனிகா லெவின்ஸ்கியின் மவுசும் குறையாமல் இருக்கும் போலிருக்கு. அதை பொன் முட்டையிடும் வாத்தாக மாற்றும் வழிமுறையையும் லெவின்ஸ்கி தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறாரே!

English summary
Recently, Senator Rand Paul has resurrected the Monica Lewinsky sex scandal of the late 1990s that led to President Bill Clinton's impeachment, to reduce the fame of Hillary Clinton in the presidential election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X