For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூர் தொகுதியில் குழப்பம்.. துரைமுருகனின் ஆதரவாளர்கள் 11 பேர் திமுகவில் இருந்து அதிரடியாக சஸ்பென்ட்

By Mathi
|

சென்னை: வேலூர் லோக்சபா தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் பணிகளை புறக்கணித்து வரும் திமுக துணைப் பொதுச்செயலர் துரைமுருகனின் ஆதரவாளர்கள் 11 பேர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

திமுக பொதுச்செயலர் க. அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், வேலூர் மாவட்டம், வேலூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிராகவும் - கழகத் தோழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதாக தலைமைக்கு தெரியவந்ததால்,

11 Duraimurugan loyalists suspended by DMK

1) கே.வி.குப்பம் ஒன்றியச் செயலாளர் தயாளமூர்த்தி,

2) கே.வி.குப்பம் ஒன்றிய துணைச் செயலாளர் எம்.சிவக்குமார்

3) தாராபடவேடு நகரப் பொருளாளர் டயர் கண்ணன் (எ) விவேகானந்தன்

4) காட்பாடி ஒன்றியம், வஜ்சூர் ஒன்றியப் பிரதிநிதி பி. சுரேஷ்பாபு

5) காட்பாடி ஜி. பாபு

6) குடியாத்தம் ஒன்றிய துணைச் செயலாளர் மீனூர் ஜெயவேலு

7) குடியாத்தம் ஒன்றிய துணைச் செயலாளர் குருநாதன்

8) குடியாத்தம் ஒன்றியப் பொருளாளர் இரா. அண்ணாதுரை

9) குடியாத்தம் நகர இலக்கிய அணி பொருளாளர் பூமாலை. வாசு

10) பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி

11) குடியாத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த ரஞ்சித்

ஆகியோர் தி.மு.கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் மகனுக்கு சீட் கொடுக்காததால் ஆத்திரம்

வேலூர் லோக்சபா தொகுதியை தனது மகன் கதிர் ஆனந்துக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக 100க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து விருப்ப மனு கொடுக்க வைத்தார் துரைமுருகன். துரைமுருகன் மகனும் எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கடந்த சில மாதங்களாக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

ஆனால் வேலூர் தொகுதியை வழக்கம் போல தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று திமுகவின் கூட்டணிக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கேட்டது. முதலில் திமுக தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் திமுக தலைவர் கருணாநிதியே தலையிட்டு துரைமுருகனை சமாதானப்படுத்தி வேலூர் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கினார்.

இருப்பினும் இதில் துரைமுருகனும் அவரது ஆதரவாளர்களும் சமாதானமாகவில்லை. துரைமுருகனின் ஆதரவாளர்கள் கே.வி.குப்பம் மற்றும் குடியாத்தத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மானுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைத்தனர். துரைமுருகனின் சொந்த ஊரான கே.வி.குப்பம் பகுதி திமுகவினர் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு தேர்தல்பணி செய்வதை புறக்கணிப்போம் என்றும் அறிவித்தனர்.

அத்துடன் கடந்த சனிக்கிழமையன்று முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் அப்துல் ரஹ்மான் சென்ற காரை நிறுத்திய துரைமுருகன் ஆதரவாளர்கள், எங்கள் அண்ணனின் மகன் தேர்தலில் நிற்காமல் போனதற்கு நீங்கள்தான் காரணம்" என கூறியபடி அவரது கார் கண்ணாடியை கற்களால் தாக்கினர். இதில் அப்துல் ரஹ்மானின் கார் கண்ணாடி சேதமடைந்தது.

மேலும் குடியாத்தத்தில் நடந்த திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் அப்துல் ரஹ்மானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள சக்கரவர்த்தி, குடியாத்தம் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. இதனால் வேலூரில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில்தான் திமுக தலைமை துரைமுருகனின் ஆதரவாளர்கள் 11 பேரை சஸ்பென்ட் செய்து அறிவித்துள்ளது.

அழகிரி பேச்சு எதிரொலி?

அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட மு.க. அழகிரி, "கட்சிக்கு உழைத்தவர்களுக்கு சீட் தராமல், வேண்டியவர்களுக்கு எல்லாம் சீட் தந்திருக்கிறார்கள். எனக்கு கூட வேண்டியவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சீட் வாங்கி தந்ததில்லை. வேலூரில் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு சீட் தரப்பட்டு உள்ளது. அங்கு துரைமுருகன் மகனுக்கு சீட் தரவில்லை என்று அந்த வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதாவது பாரபட்சமாக தமது ஆதரவாளர்கள் மீது மட்டுமே திமுக தலைமை நடவடிக்கை எடுக்கிறது என்ற அழகிரி கூறியிருந்தார். இத்தகைய பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது துரைமுருகனின் ஆதரவாளர்கள் 11 பேரையும் சஸ்பென்ட் செய்துள்ளது திமுக தலைமை.

English summary
DMK suspended party Deputy general secretary Durai Murugan's 11 supporters in Vellore District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X