For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சகாயம் குழுவிற்கு தடை கோரி கனிமக் கொள்ளைக்கு துணை போகிறதா அரசு? – ராமதாஸ் கண்டனம்!

Google Oneindia Tamil News

சென்னை: கிரானைட் ஊழலுக்கு எதிரான சகாயம் குழுவுக்கு தடை கோரி கனிமக் கொள்ளைக்கு துணை போவதா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளை பற்றி விரிவான விசாரணை நடத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சகாயம் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில் அதை எதிர்த்தும் சகாயம் குழு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

PMK Leader Ramadass released a statement…

கிரானைட் கொள்ளை:

தமிழ்நாட்டில் கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளை பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.

விசாரணைக்கு வலியுறுத்தல்:

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் கிரானைட் ஊழல்கள் பற்றி அம்மாவட்ட ஆட்சியர் சகாயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் தமிழக அரசுக்கு அனுப்பிய அறிக்கை வெளியானதுமே இதுகுறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

நடுவண் புலனாய்வு:

அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் கொள்ளையில் ஈடுபடும் நிறுவனங்களின் அலுவலகங்களை சோதனையிட அம்மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் ஆசஷ்குமார் ஆணையிட்ட போதும், தாது மணல் கொள்ளை குறித்து நடுவண் புலனாய்வு விசாரணை தேவை என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டேன்.

நேர்மையை பந்தாடிய அரசு:

ஆனால், இந்த இரு தருணங்களிலுமே நடுவண் புலனாய்வு விசாரணைக்கு ஆணையிட முன்வராத தமிழக அரசு, நேர்மையான முறையில் நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்கள் இருவரையும் இடமாற்றம் செய்து முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் அமர்த்தியது.

ஊழல்களை மூடி மறைத்தல்:

தாது மணல் மற்றும் கிரானைட் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பின் அளவு ரூபாய் 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும். ஆனால், ஆரம்பத்திலிருந்தே இந்த ஊழல்களை மூடிமறைப்பதில் தான் அரசு தீவிரம் காட்டி வருகிறதே தவிர, விசாரணை நடத்தி உண்மையைக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டவில்லை.

தடை வாங்க துடிக்கும் அரசு:

இப்போது கூட நேர்மையான அதிகாரி என்று கூறப்படும் சகாயம் விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவந்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் இந்த விசாரணைக்கு தடை வாங்க தமிழக அரசு துடிக்கிறது.

தவறு செய்தவர்கள்:

வழக்கமாக அரசோ அல்லது நீதிமன்றமோ ஒரு விசாரணைக்கு ஆணையிட்டால், ஏதேனும் தவறு செய்து, அதனால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்கள் தான் இத்தகைய விசாரணைக்கு முட்டுக்கட்டை போட துடிப்பார்கள்.

வேதனையில் நேர்மையாளர்கள்:

ஆனால், இயற்கை வளங்களை கொள்ளை அடித்தவர்களே அமைதியாக இருக்கும் போது, அவர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழக அரசே களமிறங்கியிருப்பதைக் கண்டு நேர்மையில் நம்பிக்கைக் கொண்டோர் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

நகைப்பு கலந்த வேதனை:

இப்படியெல்லாம் விசாரணையை தாமதப்படுத்தி கனிமக் கொள்ளையருக்கு துணை போகும் தமிழக அரசு, சகாயம் குழு விசாரணையால் கால தாமதம் ஆகும் என்று கூறுவதைக் கேட்கும்போது நகைப்பு கலந்த வேதனை தான் ஏற்படுகிறது.

அச்சம் தேவையில்லை:

மடியில் கனமில்லையேல் வழியில் பயமில்லை என்பதற்கேற்ப, இந்த பிரச்சினையில் தமிழக அரசு மீது தவறு எதுவும் இல்லாவிட்டால் சகாயம் குழுவின் விசாரணையை நினைத்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அரசு நடவடிக்கை தேவை:

எனவே, சகாயம் குழு விசாரணைக்கு தடை கேட்டு, இயற்கை வள கொள்ளையர்கள் தப்பிக்கத் துணை போவதை விடுத்து, இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து கனிம வளத்தை காக்கவும், கனிம கொள்ளையர்களை தண்டிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
PMK Leader Dr Ramadass has condemned the TN govt for seeking stay to Sagamayam commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X