For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு மருத்துவமனையில் 2 நோயாளிகள் திடீர் மரணம்: மின்வெட்டு காரணமா? இல்லை என்கிறார் டீன்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த இரண்டு நோயாளிகள் திடீரென உயிரிழந்துள்ளனர். இதற்கு அரை மணி நேரமாக மின்சாரம் தடைபட்டிருந்ததே காரணம் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

ஆனால் மின்வெட்டு காரணம் இல்லை என்று மருத்துவமனை டீன் விமலா விளக்கியுள்ளார்.

2 patients die in Chennai GH

இதற்கு மின்வெட்டுதான் காரணம் என்று உயிரிழந்த இருவரின் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால், இருவருக்கும் செயற்கை சுவாசம் போவது தடைபட்டு அவர்கள் இருவரும் மூச்சுத் திணறி இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

4 நாட்களுக்கு முன்பு சோழவரம் பகுதியைச் சேர்ந்த பொன்.முருகன் (43) விபத்தினால் அடிப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அதேபோல ரவி (23) என்பவர் இன்னொரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்து அனுமதிக்கப்பட்டிருந்தார். இருவருக்கும் செயற்கை சுவாசம் தரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து அவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கூறுகையில், இன்று அதிகாலை 4.30 மணியில் இருந்து 6 மணி வரை மின்சாரம் தடையாக இருந்தது. இவர்கள் இருவரும் அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் பெற்று வந்தனர். இந்தநிலையில் மின்வெட்டு ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் அளிப்பதில் தடை ஏற்பட்டது. இதனால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் எதையும் இதுவரை வெளியிடவில்லை.

தமிழகம் முழுவதுமே தற்போது மின் வெட்டு மீண்டும் தலைவிரித்தாடுகிறது. தலைநகர் சென்னையில் மீண்டும் 2 மணி நேர மின்வெட்டை அமல்படுத்தியுள்ளனர். இது போக இடை இடையே மின்சாரம் போய் விடுகிறது. பிற பகுதிகளில் எப்போது கரண்ட் வரும் போகும் என்பதே தெரியாத நிலைதான் காணப்படுகிறது.

பல பகுதிகளில் பல மணி நேர மின்வெட்டு இருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொழில்கள் பல முடங்கிப் போயுள்ளது. மின் பற்றாக்குறை காரணமாக மீண்டும் மின்வெட்டு தலை தூக்கியுள்ள நிலையில் மின்வெட்டு காரணமாக சென்னையில் 2 நோயாளிகள் இறந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து டீன் விமலா கூறுகையில், இறந்ததாக கூறப்படும் நோயாளி பொன்முருகனுக்கு வயிறு, தலை இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவரது நிலைமை மோசமாக இருந்தது. அதனால்தான் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மின்சாரம் தடைப்பட்டதால் அவர் இறக்கவில்லை. மின்சாரம் தடைப்பட்டாலும் தொடர்ந்து 2 மணி நேரம் வெண்டிலெட்டர் செயல்படக்கூடிய வசதி உள்ளது. எனவே அவரது இறப்பிற்கும் மின்தடைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றார் அவர்.

English summary
2 patients who were on ICU died in Chennai GH. Relatives are blaming the power cut for the death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X