For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணா சாலையில் நொறுங்கி விழுந்த 2 மாடிக் கட்டடம்... 12 பைக்குகள் காலி!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அண்ணா சாலையில் அபார்ட்மென்ட் கட்டுவதற்காக ஒரு பழைய 2 மாடி வணிக வளாகத்தை இடித்தபோது அது சரமாரியாக நொறுங்கி விழுந்தது. இதில் 12 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் நசுங்கிப் போய் விட்டன.

சென்னை அண்ணாசாலை ஜெமினி பாலம் அருகில் இயங்கி வரும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டடத்துக்கு எதிரே 4,800 சதுரஅடியில் சுமார் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 அடுக்கு வணிக வளாகம் ஒன்று இயங்கி வந்தது. தனியார் வங்கி, சாப்ட்வேர் நிறுவனங்களுடன் இயங்கி வந்த இந்த வணிக வளாகம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது.

இதையடுத்து வணிக வளாகத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் புது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக சென்னையை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த இடத்தை விலைக்கு வாங்கியது.

2 வாரங்களுக்கு முன்பு வணிக வளாக கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. 75 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், கட்டடத்தின் இதர பகுதிகளை இடிக்கும் பணி நேற்று நடந்தது. 2 பொக்லைன் எந்திரங்களும், 10 தொழிலாளர்களும் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 4.30 மணி அளவில் கட்டடத்தின் தூண் ஒன்று இடிக்கப்பட்டபோது, பிடிமானம் இல்லாமல் கட்டடம் அப்படியே சீட்டுக்கட்டு போல் சரிந்து, அருகில் இயங்கி வரும் தனியார் வணிக வளாகத்தின் வாகன நிறுத்தும் இடத்தில் விழுந்தது.

இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 12 மோட்டார் சைக்கிள்கள் நொறுங்கின. பயங்கர சத்தத்துடன் கட்டடம் விழுந்ததையடுத்து பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து சிதறி ஓடினார்கள். பொக்லைன் டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தலைமறைவாகி விட்டார்.

தகவலின் பேரில் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி ராவணன் தலைமையில் எழும்பூர், மயிலாப்பூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கட்டடம் இடிந்து விழுந்த பகுதி முழுவதையும் தீவிரமாக ஆராய்ந்தனர். கண்காணிப்பு கேமராக்கள், டார்ச் லைட் உதவியோடு கட்டட இடிபாடுகளில் யாராவது சிக்கி இருக்கிறார்களா என்று சோதனையிட்டனர்.

ஆனால் உள்ளே யாரும் சிக்கியிருக்கவில்லை. இதனால் அனைவரும் நிம்மதியடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சமீபத்தில்தான் சென்னையில் 11 அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டது. 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அண்ணா சாலையில் கட்டடம் இடிந்ததால் மக்கள் பீதியடைந்து விட்டனர்.

சம்பவ இடத்தை கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நிறுவனத்தின் வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சென்னை மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே வணிக வளாக கட்டடம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விதிமுறைகளின்படி, அந்நியர்கள் யாரும் உள்ளே நுழைந்துவிடாத வண்ணம் கட்டடத்தை சுற்றிலும் ராட்சத தடுப்பு அமைக்கப்பட்டு முழு பாதுகாப்புடனேயே கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்புக்காக தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்டடம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. கட்டடத்தின் 500 சதுரஅடி அளவுக்கு தான் விழுந்துள்ளது. இதில் உயிர்சேதமோ, எந்த தொழிலாளர்களுக்கும் காயமோ ஏற்படவில்லை. இடிபாடுகள் விழுந்ததில் சேதமடைந்த மோட்டார் சைக்கிள்களுக்கும் உரிய இழப்பீட்டை எங்களுடைய நிறுவனம் வழங்கும் என்றார்.

English summary
A 2 storey building was collapsed in Chennai Anna salai. But no one was injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X