For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிசிஎஸ் பெண் என்ஜினியர் கொலையில் மேலும் 4 பேர் கைது - இதுவரை 6 பேர் சிக்கினர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

4 more arrested in Uma Maheshwari death case
சென்னை: டிசிஸ் நிறுவன பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் உமா மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வட மாநிலத்தை சேர்ந்த மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்த கொலைவழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சிறுசேரி சிப்காட் அருகே கடந்த 22ஆம் தேதி மென் பொருள் நிறுவன பெண் ஊழியர் உமா மகேஸ்வரி அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கடந்த 13-ந் தேதி மாயமான உமா மகேஸ்வரி 9 நாட்கள் கழித்து சிறுசேரி சிப்காட் வளாகத்திலேயே பிணமாக மீட்கப்பட்டார்.

உள்ளூர் போலீசார் வசம் இருந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக சிறுசேரியில் முகாமிட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.

வடமாநில தொழிலாளர்கள்

உமா மகேஸ்வரியின் உடல் மீட்கப்பட்ட தினத்திலிருந்து சிறுசேரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த பகுதியில் கட்டிட பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது.

மாயமான இருவர்

குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றும் தொழிலாளர்களின் விவரங்களை போலீசார் முழுமையாக சேகரித்தனர். இதில் இருவர் மட்டும் (மேற்கு வங்கத்தில் பிடிபட்டவர்கள்) உமா மகேஸ்வரி மாயமான மறுநாளே தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மிகவும் கவனமுடன் தொடர்ந்தனர். மேற்கு வங்கத்திற்குச் தப்பிச் சென்ற 2 பேரின் நெருங்கிய நண்பர்கள் யார்? என்று விசாரித்தனர்.

நான்கு நண்பர்கள்

அப்போதுதான் ராம் மண்டலும், உத்தம் மண்டலும் சிக்கினர். இவர்கள் 4 பேரும் வெளியில் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதன் பிறகும் அவசரப்படாமல் செயல்பட்ட போலீசார், உமா மகேஸ்வரியின் ஏ.டி.எம். கார்டை கொலையாளிகள் நிச்சயம் பயன்படுத்துவார்கள் என்று காத்திருந்தனர்.

காட்டிக் கொடுத்த ஏ.டி.எம் கார்டு

தொடர்ந்து உமா மகேஸ்வரியின் மாயமான செல்போன், ஏ.டி.எம்.கார்டு மூலம் கொலையாளிகள் நடமாட்டத்தை கண்காணித்தனர். போலீசார் எதிர்பார்த்தது போல ஒரு கொலையாளி உமா மகேஸ்வரியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்த போது அவனது உருவம் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.

2 கொலையாளிகள் கைது

அந்த உருவத்தை வைத்து அந்தப் பகுதியில் விசாரித்த போது அவன் அங்கு வேலை பார்க்கும் கட்டிடத் தொழிலாளி என்று தெரியவந்தது. இதனால் உஷாரான போலீசார் கட்டிட தொழிலாளர்கள் தங்கி இருந்த இடங்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது உமா மகேஸ்வரி கொலையில் தொடர்புடைய ராம் மண்டல், உத்தம் மண்டல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்கத் தொழிலாளிகள்

இவர்கள் தங்களுடன் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மேலும் இருவருடன் சேர்ந்து உமா மகேஸ்வரியை திட்டம் போட்டு பலாத்காரம் செய்து கொன்றதாக விசாரணையில் ஒத்துக்கொண்டனர்.

செங்கல்பட்டு சிறையில்

கைதான ராம் மண்டலும், உத்தம் மண்டலும் இன்று செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

உமா மகேஸ்வரி கொலையுண்ட அன்றே மேற்கு வங்கத்திற்கு தப்பிச்சென்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விமானத்தில் சென்றனர்.

ரயில் நிலையத்தில் கைது

மேற்கு வங்கத்தில் மால்டா பகுதியில் ரயிலில் இருந்து இறங்கியதும் சென்னை போலீசார் கொலையாளிகள் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் உடனடியாக சென்னை கொண்டு வரப்படுகிறார்கள்.

சிபிசிஐடி போலீசார்

அவர்கள் இருவரின் பெயர்கள் உஜ்ஜல் மண்டல், இந்திரஜித் மண்டல் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் பற்றிய மற்ற விவரங்களை இன்று மாலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிடுகிறார்கள்.

அடைக்கலம் கொடுத்த மேலும் 2 பேர்

இதற்கிடையே மேற்கு வங்க தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய கட்டிட மேஸ்திரிகள் இருவர் இன்று போலீசில் சிக்கினர். இவர்களுக்கு கொலையில் நேரடி தொடர்பு இல்லா விட்டாலும் அடைக்கலம் கொடுத்தல், மறைமுகமாக உதவுதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

நடித்துக் காட்டிய கொலையாளிகள்

கொலையாளிகள் ராம் மண்டல், உத்தம் மண்டல் ஆகியோரை போலீசார் சிப்காட் வளாகத்துக்குள் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது உமா மகேஸ்வரியை கொலை செய்தது எப்படி? என்பது பற்றி நடித்துக் காட்டினர். இன்று சிறையில் அடைக்கப்படும் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அதிகபட்ச தண்டனை

இந்த வழக்கை துரிதமாக நடத்தி கொலையாளிகள் அனைவருக்கும் உச்சபட்ச தண்டணை வாங்கி கொடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் இப்போதே முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஆள் இல்லாத விமானம்

எப்போதும் இல்லாத வகையில் கொலை வழக்கு விசாரணைக்காக முதன் முதலாக ஆள் இல்லா விமானமும் துப்பு துலக்குவதற்காக பயன்படுத்தபட்டு தடயம் சேகரிக்கப்பட்டது.

இக்கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி.மகேஸ் குமார் அகர்வால், வடக்கு மண்டல ஐ.ஜி.மஞ்சு நாதா, டி.ஐ.ஜி.சத்தியமூர்த்தி, சூப்பிரண்டுகள் அன்பு (சி.பி.சி.ஐ.டி.), விஜயகுமார் (காஞ்சீபுரம்) ஆகியோர் கூட்டாக நடத்திய அதிரடி வேட்டையில் கொலையாளிகள் சிக்கியுள்ளனர்.

மரணதண்டனை

உமா மகேஸ்வரியின் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வாங்கி கொடுக்கும் அளவுக்கு போலீசார் வழக்கு விசாரணையின் போது திறமையுடன் செயல்பட வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

English summary
CBCID police have arrested two more accused in the TCS woman techie Uma Maheshwari murder case. The police have arrested two local persons for giving refuge to the accused. In total 6 persons have been nabbed in this case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X