For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சுழியில் அதிமுக வேட்பாளரை சாப்பிட கூப்பிடுவதில் அடிதடி…. ஓட்டம் பிடித்த அமைச்சர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அன்வர்ராஜா மற்றும் அமைச்சர்களை சாப்பிட அழைத்துச் செல்வதில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அடிதடி கல்வீச்சு ஏற்பட்டதால், வேட்பாளரும் அமைச்சரும் ஓட்டம் பிடித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள் திருச்சுழி சட்டசபை தொகுதி, ராமநாதபுரம் லோக்சபா தொகுதியின் கீழ் வருகிறது. காரியாபட்டி ஒன்றியத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவசாமி, திருச்சுழி தொகுதி செயலாளர் பஞ்சவர்ணம் ஆகியோர் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் அன்வர் ராஜா, திருச்சுழி தொகுதியில் பிரசாரம் தொடங்கிய போதிலும் கோஷ்டி பூசல் காரணமாக காரியாபட்டியில் முக்கிய வீதிகளில் பிரசாரம் செய்து விட்டு சென்று விட்டார். அதே நேரத்தில் மற்ற கட்சிகளின் சார்பில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடந்து முடிந்துள்ளன.

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இதுவரை நடக்கவில்லை. கோஷ்டி பூசல் காரணமாக இந்த 4 பேரில் ஒருவருக்கு கொடுத்தால்கூட மற்ற 3 பேர் தேர்தல் பணியை செய்ய மாட்டோம் என கூறினர். இதனால், யாரிடம் தேர்தல் பொறுப்பை ஒப்படைப்பது எனத் தெரியாமல் வேட்பாளர் அன்வர் ராஜா தவித்து வருகிறார்.

கோஷ்டி பூசலை சரி செய்வதற்காக சிவகங்கை தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் உதயகுமாரை ராமநாதபுரம் தொகுதி பொறுப்பாளராக கட்சி மேலிடம் அறிவித்தது. இதையடுத்து காரியாபட்டி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் அன்வர் ராஜா நேற்று பிரசாரத்தை தொடங்கினார். டி.புதுப்பட்டியில் இருந்து கிராமம் கிராமமாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இரவு 10 மணிக்கு எஸ்.மடைக்குளம் கிராமத்துக்கு சென்ற போது இலக்கிய அணி செயலாளர் முருகனின் ஆதரவாளரும், மடைக்குளம் ஊராட்சி தலைவியின் கணவருமான பிரசாத், தனியாக பந்தல் அமைத்து வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தார்.

பின்னர் ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி ஆதரவாளரான கிளை செயலாளர் வரதராஜன், ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் அன்வர் ராஜாவுக்கு தனியாக வரவேற்பு அளித்தனர்.

ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், இரவு உணவுக்காக தனது வீட்டுக்கு வேட்பாளர் அன்வர் ராஜா அவருடன் வந்த அமைச்சர்கள் சுந்தர்ராஜன், உதயகுமார், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோரை அழைத்து சென்றார்.

இதையறிந்த ஊராட்சி தலைவியின் கணவர் பிரசாத், எனது வீட்டுக்குதான் சாப்பிட வர வேண்டும் என்று கூறி அவர்களை வழிமறித்தனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனை, பிரசாத் கீழே தள்ளிவிட்டார். அருகில் இருந்த ராஜேந்திரன் சகோதரர் அழகேசன், பிரசாத் மற்றும் அவரது தரப்பினரை தாக்கினார். இதனால், இருதரப்புக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கி கொண்டனர்.

அப்போது மின்சாரம் தடைபட்டது ஆனாலும் விடாமல் ரோடு போடுவதற்காக போடப்பட்டிருந்த ஜல்லிக் கற்களை எடுத்து இரு தரப்பினரும் வீசி தாக்கி கொண்டனர்.

இதனால் அச்சம் அடைந்த வேட்பாளர் அன்வர் ராஜா, அமைச்சர் சுந்தர்ராஜன் மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோர் அங்கிருந்து ஓட்டம் பிடித்து காரில் ஏறினர்.

கார் புறப்படும் போது அமைச்சர் உதயகுமார், ராஜேந்திரன் ஆகியோர் வேட்பாளரை சமாதானம் செய்தனர். பின்னர் திரும்பவும் ராஜேந்திரனின் வீட்டுக்கு அழைத்து சென்று சாப்பிட வைத்தார்.

இந்த சம்பவம் நடந்த போது பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு இருந்தனர். எனினும் அதிமுகவினர் கல்வீச்சு தாக்குதலை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

English summary
Two ADMK rival gangs clashed in Kariyapatti near Aruppukattai in front of Ramanadhapuram LS candidate Anwarraja, 9 cadres injured in the attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X