For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனுநீதி சோழன் தோன்றிய இந்த பூமியில் நீதிக்கு தலைவணங்குவதே சரியானது: ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், நீதிபதியை களங்கப்படுத்துவதும் முறையல்ல எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். மேலும், மனுநீதி சோழன் தோன்றிய இந்த பூமியில் நீதிக்கு தலைவணங்குவதே சரியானதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-

கவலையும், அச்சமும்...

கவலையும், அச்சமும்...

முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்து சொத்துக் குவித்ததற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் வன்முறைகளும், நீதித்துறை மீது நடத்தப்படும் தாக்குதலும் கவலையளிக்கின்றன. இதனால், தமிழகத்தில் ஜனநாயகத்தின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற அச்சமும் ஏற்படுகிறது.

ஊழலுக்கான தண்டனை...

ஊழலுக்கான தண்டனை...

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காவிரிப் பிரச்னைக்காக போராட்டம் நடத்தியோ, ஈழப்பிரச்சினைக்காக போர்க்கொடி உயர்த்தியோ, மீனவர்கள் கைது மற்றும் மின்வெட்டு சிக்கலுக்காக குரல் கொடுத்தோ சிறைக்கு செல்லவில்லை. மாறாக, ஊழல் செய்ததற்காகத்தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, அதுவும் காலம் கடந்து தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

மாயத்தோற்றம்...

மாயத்தோற்றம்...

இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி தமிழகத்தைச் சேர்ந்தவர் கூட அல்ல... வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனால், ஜெயலலிதா ஏதோ தவறே செய்யாதவர் போலவும், விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை உள்ள நீதிபதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சதி செய்து அவரை சிறையில் தள்ளிவிட்டதைப் போலவும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு ரூபாய் சம்பளத்தில்...

ஒரு ரூபாய் சம்பளத்தில்...

1991 ஆம் ஆண்டு ஜூன் முதல் 1996 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஊதியமாக பெற்றது வெறும் ரூ.60 மட்டுமே. இந்தக்காலத்தில் இவரும், இவரை சார்ந்தவர்களும் வாங்கிக் குவித்த சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.66.65 கோடி ஆகும். வாங்கிய ஊதியத்தைவிட ஒரு கோடி மடங்குக்கும் அதிகமான சொத்துக்களை ஜெயலலிதா குவித்துள்ளார்;

ஆதாரம் எங்கே...

ஆதாரம் எங்கே...

கணக்கில் வராத ஊழல் பணத்தில்தான் அவர் இவ்வாறு செய்திருக்க முடியும் என்பது ஜெயலலிதா மீதான குற்றச்சாற்று ஆகும். ஜெயலலிதா ஊழல் செய்யாத உத்தமராக இருந்திருந்தால் தாம் வாங்கிய சொத்துக்களுக்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை நீதிமன்றத்தில் விளக்கி குற்றமற்றவர் என நிரூபித்திருக்கலாம்.

இழுத்தடிப்பு...

இழுத்தடிப்பு...

ஆனால், ஜெயலலிதா அப்படிப்பட்டவர் இல்லை என்பதால்தான் இவ்வழக்கை 18 ஆண்டுகளாக இழுத்தடித்தார். அதன்பிறகும் தாம் ஊழல் செய்து சொத்து சேர்க்கவில்லை என்பதை நிரூபிக்கவில்லை என்பதால்தான் அவரை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சட்டப்படி தண்டித்திருக்கிறது.

நீதிபதியின் விளக்கம்...

நீதிபதியின் விளக்கம்...

ஜெயலலிதா எவ்வளவு மோசமான குற்றத்தை செய்துள்ளார்; அது இந்த நாட்டை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை சொத்துக்குவிப்பு வழக்கில் அளித்த தீர்ப்பில் நீதிபதி தெளிவாக விளக்கியுள்ளார். ''கொடநாட்டில் 900 ஏக்கர் உட்பட மொத்தம் 3,000 ஏக்கர் நிலங்களை மட்டும் ஜெயலலிதா வாங்கிக் குவித்துள்ளார். அவற்றின் தற்போதைய மதிப்பு எவ்வளவு என்பது நமது கற்பனைக்கே விடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவும் மற்றவர்களும் ஐந்தாண்டுகளில் இவ்வளவு சொத்துக்களைக் குவித்திருப்பது, ஒருவர் கைகளில் அதிகாரம் கிடைத்தால் அது சட்டவிரோதமாக சொத்துக்களைக் குவித்து ஜனநாயக அமைப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும். கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம் ஊழலை ஒழிப்பதுதான் நாடாளுமன்றத்தின் நோக்கமாக இருக்கும் நிலையில், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது நீதிமன்றத்தின் கடமையாகும். அதன்படிதான் இவ்வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது" என்று நீதிபதி விளக்கம் அளித்திருக்கிறார்.

வல்லுனர்களின் கருத்து...

வல்லுனர்களின் கருத்து...

ஜெயலலிதா மீதான வழக்கின் முக்கிய ஆதாரங்களாக விளங்கியவை அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் ஆகும். இந்த ஆவணங்கள் விசாரணை அதிகாரிகளாலும், நீதிபதிகளாலும் ஒன்றுக்கு பலமுறை ஆய்வு செய்யப்பட்டவை ஆகும். இவற்றின் அடிப்படையில்தான் இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது; இதில் யாருடைய தலையீடும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சட்ட வல்லுனர்களே கருத்து தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆவண ஆதாரங்களின் அடிப்படையிலான இந்த வழக்கை இந்தியாவிலுள்ள எந்த நேர்மையான நீதிபதி விசாரித்திருந்தாலும் இதே தீர்ப்பைத்தான் வழங்கியிருப்பார்கள் என்பதே வல்லுனர்களின் கருத்தாகும்.

மேல்முறையீடு செய்யலாம்...

மேல்முறையீடு செய்யலாம்...

விசாரணை நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உடன்பாடு இல்லை என்றால் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்; சிறை தண்டனை அனுபவிப்பதை தவிர்க்க நீதிமன்றத்தை அணுகி பிணை பெறலாம். அதைவிடுத்து, தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை களங்கப்படுத்த முயல்வதும் முறையல்ல.

அபத்தமான போராட்டம்...

அபத்தமான போராட்டம்...

காவிரிப் பிரச்னைக்காக ஜெயலலிதா போராடியதால், அவரை பழி வாங்குவதற்காகவே கன்னடர் என்ற முறையில் நீதிபதி குன்ஹா கடும் தண்டனை வழங்கியதாக ஆளுங்கட்சியினரும், அவர்களின் அடிப்பொடிகளும் குற்றஞ்சாற்றுவது மிக அபத்தமானது என்பது மட்டுமின்றி, இருமாநில உறவை நிரந்தரமாக பாதிக்கக்கூடியதும் ஆகும். இன்னொருபுறம் வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

நெருக்கடி....

நெருக்கடி....

இன்னொருபுறம், ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாகவும், இதனால் அவரது பிணை மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ள ஆளுங்கட்சித் தரப்பு, ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கு எதிராக தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது. இதற்காக திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுத்து, அவர்களை நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராட வைக்கும் பணியில் தமிழக அரசே ஈடுபட்டிருக்கிறது. இவ்வாறு தூண்டிவிடப்பட்டு நடத்தப்படும் போராட்டங்கள் குறித்த செய்திகளை விரிவாக வெளியிடும்படி செய்தி, மக்கள் தொடர்பு அதிகாரிகள் நெருக்கடி தருவதாக ஊடகத்துறையினர் குற்றஞ்சாற்றுகின்றனர்.

மக்களை ஏமாற்ற முடியாது...

மக்களை ஏமாற்ற முடியாது...

இவை கடுமையாக கண்டிக்கத்தக்கவை என்பதுடன், இவ்வாறு நடத்தப்படும் போராட்டங்களில், ஜெயலலிதாவின் படத்தை போட்டு 'கடவுளை மனிதன் தண்டிப்பதா?', 'உச்ச நீதிமன்றமே... உத்தமியை விடுதலை செய்' என்பன போன்ற வாசகங்களை அச்சிட்டு நீதிமன்றங்களை மிரட்டும் தொனியில் செயல்படுவது அருவருக்கத்தக்கதாகும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஜெயலலிதா மீது மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று ஆளுங்கட்சியினர் நினைத்தால், அது தவறாகவே இருக்கும். ஏனெனில் ஜெயலலிதா கொள்ளையடித்தது தங்களின் வரிப்பணத்தைதான் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கின்றனர். அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது. இத்தகைய போக்குகள் அனுமதிக்கப்பட்டால், அவை தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். எதிர்காலத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டனை அளிக்கப்பட்டால், அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தையும், நீதிபதியையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடும். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

நீதிக்கு தலை வணங்குவோம்...

நீதிக்கு தலை வணங்குவோம்...

மனுநீதி சோழன் தோன்றிய இந்த பூமியில் நீதிக்கு தலைவணங்குவதே சரியானதாக இருக்கும். அதை விடுத்து ஆட்சி அதிகாரம் கைகளில் இருக்கும் ஆணவத்தில் சட்டத்தை வளைக்க முயன்றால் சட்ட ரீதியாக மட்டுமின்றி, ஜனநாயக ரீதியாகவும் மோசமான விளைவுகள் ஏற்படும். இந்த ஆபத்தை தடுத்து நிறுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள் முதன்மையான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். எனவே, ஊடகங்கள் அமைதியை கலைத்து, ஒருசார்பு நிலையை தவிர்த்து சட்டத்தையும், நீதியையும் வளைக்கும் ஆளும் கட்சியினரின் முயற்சியை முறியடித்து, ஜனநாயகத்தையும், நீதியையும் நிலைநாட்டுவதற்கு துணை நிற்க வேண்டும்" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The PMK founder Ramadoss asked the ADMK party men not to accuse the Judge and to accept the judgement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X