For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காடுவெட்டிக் குருவைக் கொல்ல முயற்சித்தவர்களைக் கைது செய்யாதது ஏன்?.. ராமதாஸ் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குருவைக் கொலை செயய் முயற்சித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளனர். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது....

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை காந்தி சிலை அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவரும், வன்னியர் சங்கத் தலைவருமான ஜெ.குரு கலந்து கொண்ட கூட்டத்தில் காவல்துறையினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கூட்டணி அமைத்துக் கொண்டு கொலைவெறி தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.

Arrest the attackers of Kaduvetti Guru, demands Dr Ramadoss

பா.ம.க.வினர் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் லாபம் தேடும் நோக்கத்துடன் வன்முறையை தூண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி முயல்வதாக ஏற்கனவே நான் குற்றஞ்சாற்றியிருக்கிறேன். பரப்புரையில் ஈடுபட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் மீது பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியதை கடந்த 18.01.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் நான் சுட்டிக் காட்டியிருந்தேன்.

இந்த சூழலில் தான் ஜெ.குரு கலந்துகொண்ட ராணிப்பேட்டை பா.ம.க. பொதுக்கூட்டத்தில், வன்முறை செய்வதையே வழக்கமாகக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 25,000க்கும் அதிகமானோர் திரண்ட அப்பொதுக் கூட்டம் சிறு சலசலப்பு கூட இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென அதிமுகவைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினரே அழைத்து வந்து கூட்டத்தினர் மத்தியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வைத்துள்ளனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்டு பா.ம.க. தொண்டர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர்.

தடியடிக்கு பயந்து ஓடிய தொண்டர்கள் மீது அருகில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கற்களை வீசித் தாக்கியிருக்கின்றனர். சிலரைப் பிடித்து காட்டுமிராண்டித் தனமாக அடித்து உதைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, வன்னிய சங்கத் தலைவர் குருவின் உடைமைகளை எடுத்து வருவதற்காக 3 கார்கள் சென்ற நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் அரங்க.வேலுவுக்கு சொந்தமான காரில் தான் ஜெ.குரு பயணம் செய்வார் என்ற எண்ணத்தில், அந்த காரின் மீது வன்முறை கும்பல் சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது குருவை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இத்தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த காரில் குரு பயணம் செய்யவில்லை என்பதால் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியிருக்கிறார்.

காவல்துறையினர் நடத்திய தடியடியில் பாமகவைச் சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் இருவர் எலும்பு முறிந்த நிலையிலும், ஒருவர் கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் நடத்திய தாக்குதலில் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பல இடங்களில் பாமக கொடிக் கம்பங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. கல்வெட்டுக்கள் சிதைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் அரங்க. வேலு காவல்துறையிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் பாமகவை சேர்ந்த ஒரு தவறும் செய்யாத அப்பாவிகளான முத்து, பலராமன், அஜீத், சதீஷ், கார்த்தி ஆகியோரை வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான இந்த வன்முறையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தாழ்த்தப்பட்டோருக்கும் வன்னியர்களுக்கும் இடையே வன்முறையை தூண்ட பா.ம.க. திட்டமிடுவதாக அவதூறு குற்றச்சாற்றைக் கூறியிருந்தார். அடுத்த சில மணி நேரத்தில் ராணிப்பேட்டையில் இந்த தாக்குதலை விடுதலை சிறுத்தைகள் நடத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவுக்கு முன்பாக இதேபோன்ற அறிக்கையை திருமாவளவன் வெளியிட்ட சில மணி நேரங்களில் மரக்காணம் பகுதியில் மாமல்லபுரம் மாநாட்டுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு, இருவர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதிலிருந்தே தமது அறிக்கைகளின் மூலம் திருமாவளவன் வன்முறையைத் தூண்டுவது ஐயமின்றி உறுதியாகிறது.

ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய வன்முறைத் தாக்குதலுக்கு காவல்துறையினரும் துணை போயிருக்கிறார்கள். தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்வதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரையே கைது செய்துள்ளனர்.

கார் மீது கல்வீச்சு உட்பட வன்முறை நடந்த இடங்களில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தப்போதிலும், வன்முறையை தடுக்க அவர்கள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ராணிப்பேட்டைப் பொதுக்கூட்டத்தின் போது வன்முறை வெறியாட்டம் நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பா.ம.க. நிர்வாகிகள் முன்கூட்டியே முறையீடு செய்துள்ளனர். அதன்பிறகும் விடுதலை சிறுத்தைகளின் தாக்குதலை தடுக்க காவல்துறை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், கூடுதல் கண்காணிப்பாளர் செல்லத்துரை, ராணிப்பேட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகிய மூவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வன்முறைக்கு துணை போயிருக்கிறார்கள். இவர்களில் பாஸ்கரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்ட போதிலும், பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்று வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார்.

தேர்தல் நேரத்தில் விடுதலை சிறுத்தைகளின் வன்முறைகள் தொடர அனுமதித்தால் அது மிக மோசமான சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு வழிவகுத்து விடும். எனவே, பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்டவிழ்த்து விடும் வன்முறையை காவல்துறையினரும், உளவுத்துறையினரும் முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்த வேண்டும்.

குருவை கொல்லும் நோக்குடன் வன்முறையில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை உடனே கைது செய்வதுடன், அவர்களுக்கு துணை போன காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பா.ம.க.வினர் மீது தொடரப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்பப் பெற்று கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக பாமகவின் சட்டசபைக் கட்சித் தலைவராக இருக்கும் ஜெ.குருவுக்கு இதுபோன்ற வன்முறை கும்பல்களால் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் அவருக்கு போதிய அளவு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Police should immediately arrest the attackers of Vanniyar Sangam leader J Guru, demanded PMK founder Dr Ramadoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X