For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்முறையில் ஈடுபடும் அதிமுகவை தடை செய்ய வேண்டும்: ராமதாஸ் தடாலடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: வன்முறை செயல்களில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்கு அதிமுகவினர் சேதம் விளைவிப்பதால் அந்த கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும், வன்முறையாளர்களால் பாதிக்கப்பட்ட பொருட்களுக்கு நஷ்ட ஈட்டை அக்கட்சியின் பொதுச்செயலாளரிடமிருந்து வாங்கி தர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்திருக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கையும், அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அரசு, தனியார் சொத்துக்கள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

பூந்தமல்லியிலிருந்து வந்த அரசுப் பேருந்தை காஞ்சிபுரத்தில் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க.வினர் அப்பேருந்தை தீயிட்டு எரித்தனர். இதே நிகழ்வில் ஒரு பேருந்தும், சில இரு சக்கர ஊர்திகளும் எரிக்கப்பட்டன. விளாத்திக்குளத்தில் மற்றொரு பேருந்து தீக்கிரையாக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறையில் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் நேற்று இன்னொரு பேரூந்து தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளும், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடைகள் மீது அ.தி.மு.க.வினர் கல்வீசித் தாக்கியதில் மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க.வின் காட்டு மிராண்டித் தனமான தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களும், அலுவலகங்களும் தப்பவில்லை. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகி விட்ட நிலையில் இன்னும் வன்முறை தொடர்கிறது. அ.தி. மு.க.வினரின் வன்முறையை காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரும், மத்திய அரசும் தலையிட்டு தமிழகத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

பொதுச் சொத்துக்களுக்கு அரசியல் கட்சிகள் சேதம் ஏற்படுத்தினால் அதை எவ்வாறு வசூலிப்பது என்பதற்கான வழிகாட்டுதல்கள் 1992ம் ஆண்டின் தமிழ்நாடு பொதுச் சொத்து (சேதம் மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டத்தில் தெளிவாக உள்ளன. இதற்காக கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான அமைப்பும் இப்போது செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் இழப்பீட்டை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் தொடங்க வேண்டும்.

அ.தி.மு.க.வினரால் எரிக்கப்பட்ட எரிக்கப்பட்ட பேருந்துகள், சேதப்படுத்தப்பட்ட பேருந்துகள் ஆகியவற்றுக்கான இழப்பீடு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கருதப்படுகிறது. வன்முறையால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக மதுக்கடைகள், திரையரங்குகள் ஆகியவை செயல்படவில்லை. தனியார் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் ஒரு நாளில் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை தவிர, தனியார் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இத்தகைய சூழலில் அ.தி. மு.க.வினரின் வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இன்று புதிதாக பதவியேற்கவிருக்கும் அரசுக்கு தமிழக ஆளுனர் ஆணையிட வேண்டும்.

அ.தி.மு.க.வினரின் வன்முறையால் அரசு மதுக்கடைகள் மூன்று நாட்களாக மூடப்பட்டிருப்பதால் குறைந்தது ரூ.210 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட இழப்பீட்டையும் துல்லியமாக கணக்கிட்டு அ.தி.மு.க. தலைமையிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளையும், வணிகம் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டையும் கணக்கிட்டு, அதற்குக் காரணமான அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் மீது வழக்குத் தொடர்ந்து வசூலிக்க வேண்டும்.

பேருந்து எரிப்பு, உடைப்பு, கடைகள் சூறை உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டில் ஜெயலலிதாவே கூறியவாறு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம்ஒழுங்கை சீரழிக்கும் வண்ணமும், வன்முறை செயல்களிலும் ஈடுபட்ட அ.தி.மு.க.வை தடை செய்யவும் அரசு தயங்கக்கூடாது. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
Pmk founder Ramadoss said, Aiadmk should be baned as their party member indulge in violences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X