For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரிக்கெட் கலாச்சார சீர்கேடு... ஐ.பி.எல். போட்டிகளைத் தடை செய்ய கி.வீரமணி கோரிக்கை

Google Oneindia Tamil News

Ban IPL : Veeramani
சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட்டை விடக் கேவலமானது ஒன்று கிடையாது. அது இளைஞர்களைப் பாழாக்கும் கலாச்சார சீர்கேடு. எனவே, ஐ.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்ய வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது

நமது நாட்டு ஊடகங்கள் அரசியலில் நடைபெறும் ஊழல்களைப் பற்றித் தான் ஓங்காரக் கூச்சல் போடுகின்றன. ஆனால், மற்றவற்றில் நடைபெறும் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதால் அலட்சியம் காட்டுகின்றன.

திறமையைப் பயன்படுத்தித் தீரவேண்டிய விளையாட்டில் கூட சூதாட்டம் நடைபெறுகிறதே! விளையாட்டுகளில் ‘கிரிக்கெட்' சூதாட்டம் (மேட்ச் பிக்ஸிங்) தான் பிரதானமானது. மற்ற விளையாட்டுகளில் சூதாடுவது கொஞ்சம் கடினம்! கிரிக்கெட்டில் அதற்கு தாராளமான அளவு இடம் உண்டு.

மேலும், பணம் காய்ச்சித் தொங்கும் மரமாக - சந்தையாக அது ஆகிவிட்டதால் சூதாட்டம் பெரிய அளவிற்கு சூடு பிடிக்கிறது. எத்தனையாவது ஓவரில் எந்த பந்தை எப்படி வீச வேண்டும்? எப்படி அவுட்டாக வேண்டும்? என்பது வரை முன்னதாகவே முடிவு செய்யப்படுகிறது. இதற்கு உடன்படும் விளையாட்டுக்காரர்களை வெட்கம் கெட்டவர்கள் என்றுதான் கூற வேண்டும்.

பார்ப்பனர் - பணக்காரர் - பனியாக்களின் முக்கூட்டு ஒப்பந்தம் - இதில் புகுந்து விளையாடுவதால் கமுக்கமாக அமுக்கி விடுகிறார்கள்.

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கக் கூடிய சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பொறுப்பாளர் ஆவார்.

அதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்தரா உள்ளிட்டோர் ஐ.பி.எல்.அணிகளின் மீது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது நீதிபதி முகுல்முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குருநாத் மெய்யப்பரின் மாமனார் - இப்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என்பதையும் தாண்டி, அகில உலக அமைப்பின் தலைவராகவும் பெரிய பதவிக்குச் சென்றுள்ளார்.

கிரிக்கெட்டை பொறுத்தவரை உயர் ஜாதிப் பார்ப்பனர்களின் தனி உடைமையாகவே பெருமளவுக்கு ஆகிவிட்டது. இல்லாவிட்டால் இந்திய மண்ணுக்குரிய ஹாக்கிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், அந்நிய நாட்டு விளையாட்டான கிரிக்கெட்டை முதன்மைப்படுத்துவார்களா ? இங்கு மட்டும் சுதேசியம் காணாமல் போய்விடும்.

டெண்டுல்கர் என்ற பார்ப்பனரைத் தேர்ந்தெடுத்து மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்ததோடு ‘பாரத ரத்னா' பட்டமும் வழங்குகிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன ?

கிரிக்கெட்டில் கூட உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்தவர்கள் கபில்தேவும், தோனியும் அணித்தலைவராக இருந்த போது தானே! இவர்கள் இருவரும் பார்ப்பனர் அல்லாதார் என்பதால் பாரத ரத்னா மட்டும் டெண்டுல்கருக்கு. எல்லாம் வருண பேதம் தான் !

இந்தக் கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறார்கள். ஏ பிரிவுக்காரர்களுக்கு (7 பேர்) ஓர் ஆண்டு சம்பளம் ரூ.50 லட்சம். பி - பிரிவிலும் ஏழு பேர், அவர்களுக்கு ஆண்டுச் சம்பளம் ரூ.35 லட்சம். சி - பிரிவினர் மூவருக்கு ஆண்டுச் சம்பளம் ரூ.20 லட்சம்.

இதோடு முடியவில்லை. உள்நாட்டில் விளையாடினால் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம், வெளிநாட்டில் விளையாடினால் நாள் ஒன்றுக்கு ரூ.2.40 லட்சம். அணியில் இடம் பிடித்தால் போதும், விளையாடாமல் இருந்தாலும் அந்தத் தொகை கிடைத்துவிடும். இது அல்லாமல் விளம்பரம் மூலம் கிடைப்பதோ கோடிக்கோடி ரூபாய்கள். ஆண்டு ஒன்றுக்கு மொத்த குத்தகை.

ஐ.பி.எல். கிரிக்கெட்டை விடக் கேவலமானது ஒன்று கிடையாது, விளையாட்டுக்காரர்களை ஏலம் எடுக்கிறார்கள் என்பதைவிட, இவர்கள் ஏலம் போகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இது எத்தகைய கேவலம். முதலில் ஐ.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்ய வேண்டும்.

பார்ப்பனர்கள் கையில் ஊடகங்கள் இருப்பதால், காற்றடித்துப் பறக்க விடுகிறார்கள். அதன் தீய விளைவு நம் ஊரில் வயல் வெளிகளில்கூட நம் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து விட்டனர். நம் மண்ணுக்குரிய சடுகுடு காணாமல் போய்விட்டது.

நம் இளைஞர்களைப் பீடித்த நோயாகவே கிரிக்கெட் ஆகிவிட்டது. இதுவும் ஒருவகையான கலாச்சாரச் சீரழிவு தான்.

செண்டை மேளம் என்று கேரளாவிலிருந்து இப்பொழுது இறக்குமதி ஆகிவிடவில்லையா ? எளிதில் அயல் கலாச்சாரத்திற்கு விலை போவதில் தமிழர்களை அடித்துக் கொள்ள உலகில் வேறு யாரும் கிடையாதோ - வெட்கக் கேடு, நம் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை இதிலும் ஏற்படுத்தவேண்டும் என கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் வீரமணி.

English summary
The Dravidar Kazhagam cheif Veeramani demanded the Indian government to ban the IPL T20 cricket.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X