For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துகளை அபகரிப்போரின் விரல்களை வெட்ட சட்டம் இல்லையே: சென்னை நீதிபதியின் வருத்தம்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சொத்துகளை அபகரிப்போரின் விரல்களை வெட்டுவதற்கு இந்தியாவில் சட்டம் எதுவும் இல்லையே என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

வழக்கு என்ன?

சென்னை கோட்டூரை சேர்ந்த இளவரசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சாலிகிராமத்தில் உள்ள 3,830 சதுர அடி நிலத்தை எஸ்.என்.பத்மநாபன், ஆர்.தினேஷ்பாபு ஆகியோரிடம் இருந்து ரூ.1.25 கோடிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி வாங்கினேன்.

‘Chop fingers of people who commit forgery’, says Madras High Court judge

இந்த நிலத்துக்குரிய பத்திரப்பதிவு அதேநாளில் விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. பத்திரப்பதிவின்போது அதற்குரிய முத்திரைத்தாள் கட்டணம் முழுவதையும் செலுத்தி விட்டேன்.

இதன்பிறகு பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை வழங்க விருகம்பாக்கம் சார்பதிவாளர் மறுத்துவிட்டார். எனக்கு நிலத்தை விற்பனை செய்த எஸ்.என்.பத்மநாபன் நிலத்தின் மீதான பத்திரத்தை போலியாக தயாரித்துள்ளதாகவும், இது சம்பந்தமாக பத்திரப்பதிவு ஐ.ஜி. விசாரணை நடத்தி, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், எனவே பத்திரத்தை வழங்க முடியாது என்றும் கடந்த 2013-ம் ஆண்டு மே 22-ந் தேதி விருகம்பாக்கம் சார் பதிவாளர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு உத்தரவு பிறப்பிக்க சார்பதிவாளருக்கு அதிகாரம் இல்லை. எனவே, நிலம் தொடர்பான பத்திரத்தை எனக்கு வழங்கும்படி சார் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் இளவரசன் கூறியிருந்தார்.

நீதிபதி வைத்தியநாதன் விசாரணை

இம்மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பத்திரப்பதிவு துறை ஐ.ஜி., விருகம்பாக்கம் சார் பதிவாளர் ஆகியோர் பதில் மனுவை தாக்கல் செய்தனர்.

அதேபோல தியாகராயர் நகரைச் சேர்ந்த வி.வி.வி.நாச்சியப்பன் என்ற முதியவர் இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொண்டு, பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் சர்ச்சைக்குரிய சாலிகிராமம் நிலம் தன்னுடையது என்றும் அதை அபகரித்து 2-வது முறையாக போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவை செய்துள்ளனர் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கூறியதாவது:

விரல்களை வெட்ட சட்டம் இல்லையே..

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு நடைபெறும்போது அந்த பத்திரத்தை வழங்க முடியாது என்று மறுப்பதற்கு சார் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது.

இந்த வழக்கின் ஆவணங்கள், வழக்கறிஞர் வாதங்கள் அனைத்தையும் ஆராயும்போது, மனுதாரர் இளவரசன், நாச்சியப்பனின் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சித்துள்ளது தெளிவாகிறது.

இதுபோல மோசடிகளை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டத்தில் இடம் இருந்திருந்தால் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட யாருக்கும் தைரியம் வராது.

இந்த வழக்கில் அப்பாவி ஒருவரின் நிலத்தை அபகரிக்க மோசடிக்காரர்களுக்கு உடந்தையாக விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் சிலரும் இருந்துள்ளனர். இஸ்லாமிய நாடுகளில் சிறு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களுக்கு கூடகைகள், விரல்கள் வெட்டப்படுகின்றன.

ஒரு லட்சம் அபராதம்

அதுபோல மோசடியில் ஈடுபட்ட இந்த மனுதாரருக்கும் விரல்களை வெட்டும் கடுமையான தண்டனையைத்தான் வழங்க வேண்டும் என்பது இந்த நீதிமன்றத்தின் எண்ணமாக உள்ளது. ஆனால் அப்படி தண்டனை வழங்க நம் நாட்டின் சட்டத்தில் இடமில்லையே?

எனவே போலி ஆவணங்கள் மூலம் பிறருடைய நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த மனுதாரர் இளவரசனுக்கு வழக்கு செலவாக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி வைத்தியநாதன் தீர்ப்பளித்தார்.

மனுதாரரிடம் இந்த தொகையை ஐகோர்ட்டு பதிவுத்துறை வசூலிக்க வேண்டும். பின்னர், புற்றுநோய் சிகிச்சை மையம், பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளி, கோட்டூபுரத்தில் உள்ள வித்யா சாகர் தன்னார்வ அமைப்பு, சென்னையில் உள்ள எய்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாக ஒய்.ஆர்.ஜி. மையம் ஆகியவைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ஐகோர்ட்டு பதிவுத்துறை பிரித்து கொடுக்க வேண்டும்.

இந்த நிலத்தை அபகரித்ததாக நாச்சியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மனுதாரர் இளவரசன் உட்பட பலர் மீது பதிவான வழக்கை விசாரிக்கும் கீழ் கோர்ட்டு, இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறேன்.

English summary
Madras High Court’s judge made the headlines when he gave a regressive and shocking statement suggesting, ‘cut the fingers and chop off the arms of the people involved in forgery cases.’
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X