For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பறவைகளுக்காக பட்டாசு வெடிக்க தடை: 40 ஆண்டுகளாக நிசப்த தீபாவளி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிவகங்கை: தீபாவளி திருநாளின் முக்கிய அம்சமே பட்டாசுதான். ஒருவாரகாலமாகவே பட்டாசு கொளுத்தி பண்டிகையை கொண்டாடுவார்கள்.

ஆனால் சிவகங்கை அருகே அரியவகை அயல்நாட்டுப் பறவைகளை பாதுகாப்பதற்காக 40 ஆண்டாக எந்த ஒரு பண்டிகைக்கும் பட்டாசு வெடிக்காமல் உள்ளனர் அதிசய கிராம மக்கள்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே திருப்பத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொல்லுகுடிபட்டி கிராமம் உள்ளது. இங்கு அதிகமாக அய‌ல்நாட்டு பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன.

Deepavali: Villagers sacrifice crackers for birds

சப்தமில்லாத தீபாவளி

இதனால், இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் தீபாவளிக்கு தங்களது பிள்ளைகளுக்கு பட்டாசு வாங்கித் தருவதில்லை. அவர்கள் தீபாவளி என்றால் பட்டாசு என்பதை மறந்து, சப்தமில்லாத தீபாவளியாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பறவைகள் சரணாலயம்

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள வேட்டங்குடி ௦கிராமத்தை நோக்கிதான் முதலில் வெளிநாட்டுப் பறவைகள் வந்தன. பின்னர், கொல்லுகுடிபட்டி கண்மாய்க்கு அந்தப் பறவைகள் இடம்பெயர்ந்தன. கடந்த 1977-ல் வேட்டங்குடி பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

வெளிநாட்டுப் பறவைகள்

ஈரான், ஈராக், ஆஸ்திரியா, ஆஸ்‌திரேலியா போன்ற நாடுகளில் இருந்து நத்தை கொத்தி நாரை, பாம்புதாரா, கரண்டி மூக்கன், அரிவாள்மூக்கன், ஃபிளமிங்கோ உட்பட பல்வேறு வகையான பறவைகள் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில் இந்த கிராமத்திற்கு இனவிருத்திக்காக வருகின்றன.

இனவிருத்திக் காலம்

கண்மாயில் உள்ள மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு, குஞ்சுகள் பொறித்து, இனவிருத்தி செய்கின்றன. பறவைகளைக் காண நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல்வேறு ஊர்களில் இருந்து பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

ஊர்கட்டுப்பாடு

இந்த பறவைகளை கிராம மக்கள் தங்கள் குழந்தைகளைப் போல போற்றிப் பாதுகாக்கின்றனர். இதனால் தீபாவளி, திருவிழா உட்பட எந்த நிகழ்ச்சிகளுக்கும் கிராம மக்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை. பட்டாசு வெடிக்க தடை விதித்து, ஊர்க்கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது.

நிசப்த தீபாவளி

இதேபோல கோவை மாவட்டம் அன்னூர் அருகே கிட்டாம்பளையம் கிராமத்திலும் பறவைகளைப் பாதுகாக்க கடந்த 6 ஆண்டுகளாக நிசப்த தீபாவளி கொண்டாடி மகிழ்க்கின்றனர்.

வவ்வால்களுக்கு வாழ்க்கை

இதேபோல திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சாம்பட்டி கிராமத்தில் உள்ள ஆலமரத்தில், பழம் தின்னும் வவ்வால்கள் கூட்டம், கூட்டமாக வந்து தங்கியுள்ளன. வவ்வால் கூட்டம் வந்த பின், அப்பகுதியில் மழை நன்றாக பெய்ததுடன், விவசாயம் செழிப்படைந்தது. இதனால், ஆரியபெருமாளே வவ்வாலாக வந்து, ஊரை பாதுகாப்பதாக, அப்பகுதி மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள், வவ்வாலை வேட்டையாடாமலும், வேட்டையாட வருபவர்களையும் தடுத்தும் வந்தனர்.தற்போது, மரத்தில், 5,000க்கும் அதிகமான வவ்வால்கள் தங்குகின்றன.

பட்டாசு சத்தம் கேட்பதில்லை

தீபாவளி மற்றும் விசேஷ நாட்களில், பட்டாசு வெடித்தால், வவ்வால்கள் பயந்து ஓடி விடும் எனக் கருதும் பொதுமக்கள், தீபாவளிக்குக்கூட, பட்டாசுகள் வெடிப்பதில்லை. உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி, தீபாவளியை கொண்டாடி முடிக்கின்றனர்.பத்து ஆண்டுகளாக, பட்டாசு சத்தமே, இந்த ஊரில் கேட்டதில்லை என, இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

30 ஆண்டுகளாக வெடிக்கு தடை

அதேபோல், மணப்பாறை அருகே அமயபுரம் பஞ்சாயத்து தோப்புப்பட்டியில், பழைமை வாய்ந்த முனியப்பன் கோவில் வளாகத்தில் உள்ள ஆலமரங்களில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, வவ்வால்கள் கூட்டமாக தங்குகின்றன. இப்பகுதியிலும் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதில்லை.

கிராம மக்களின் தியாகம்

பறவைகளுக்காகவும், வவ்வால்களுக்காகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் பட்டாசு வெடிப்பதை தியாகம் செய்து சத்தமில்லாத தீபாவளியாக கொண்டாடி மகிழ்கின்றனர் அதிசய கிராம மக்கள்.

English summary
villagers of kollukkudipatti in Sivagangai district are gearing up to celebrate another noiseless, tranquil Deepavali. From elders to children, everyone in the village has been celebrating a cracker-free Deepavali for the last 40 years
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X