For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வை அடைத்துள்ள ஜெயிலுக்குப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்குப் போகும் அமைச்சர்களை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்கள் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் அனைவரும் அதைத் தவிர மற்ற பணிகளைத் தான் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 29 ஆம் தேதி புதிதாக பதவியேற்ற பின்னர் தலைமைச் செயலகத்தை எட்டிப் பார்த்த அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் அதன்பின் இப்போது வரை தங்களின் அறைகளுக்கு திரும்பவில்லை. இதனால் தலைமைச்செயலகம் வெறிச்சோடி கிடப்பதுடன் மக்கள் நலன் சார்ந்த பணிகளும் அரசு நிர்வாகமும் அடியோடு முடங்கிக் கிடக்கின்றன.

Dismiss the minister who are visiting Bangalore jail, asks Ramadoss

தமிழக அமைச்சர்களில் ஒருபிரிவினர் ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவை இதய தெய்வம் என்று கூறிக் கொண்டு, அரசு பணிகளை செய்யாமல், அவருக்காக தீச்சட்டி சுமப்பது, மண்சோறு சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னொரு பிரிவினரோ ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறை வளாகம் தான் தங்களின் தற்காலிக தலைமைச் செயலகம் என்ற எண்ணத்தில் அங்கேயே முகாமிட்டிருக்கின்றனர்.

அ.தி.மு.க.வின் தொண்டர்கள் என்ற முறையில் அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பாக முகாமிட்டு தங்களின் விசுவாசத்தைக் காட்டுவதை யாரும் குறை கூற முடியாது. ஆனால், அமைச்சர்கள் என்ற முறையில் மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட சுழல் விளக்கு பொருத்தப்பட்ட, தேசியக் கொடி பறக்கும் காரில் தமிழகத்தில் இருந்து பெங்களூர் மத்திய சிறைக்கு சென்று காலை முதல் மாலை வரை காத்திருந்துவிட்டு திரும்புவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

முந்தைய ஆட்சியின்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த உறவினர் சுரேஷ்குமார் என்பவரை அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அரசு காரில் சென்று சந்தித்ததாக குற்றச்சாற்று கூறப்பட்டது. இதைக் கண்டித்து 27.10.2010 அன்று அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, வீரபாண்டி ஆறுமுகத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன்பின் 16.11.2010 அன்று இதேகோரிக்கையை வலியுறுத்தி சேலத்தில் போராட்ட அறிவிப்பை வெளியிட்ட ஜெயலலிதா, ''நீதிமன்றக் காவலில் உள்ள சுரேஷ்குமாரை, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட, தேசிய கொடியுடன் கூடிய அரசு வாகனத்தில் சேலம் மத்திய சிறைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ஓர் அமைச்சர், கொலைக் குற்றவாளியை சிறையில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முதல்வர் கருணாநிதி எதற்கும் பதில் அளிக்காமல் மௌனம் சாதித்து வருகிறார். இது, அவரின் செயலற்ற தன்மையை காட்டுகிறது" என்று விமர்சித்திருந்தார்.

இப்போது ஜெயலலிதாவை சந்திப்பதற்காக தேசியக் கொடி பறக்கும் காரில் அமைச்சர்கள் பெங்களூர் சென்று தவம் கிடப்பது அரசியலமைப்பு சட்டப்படியான செயலா? இதை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது செயலற்ற தன்மை இல்லையா?

ஊழல் குற்றவாளியை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே போற்றுவதும், அவருக்காக நடத்தப்படும் வன்முறைகளை கண்டும் காணாமலும் இருப்பதும், அரசு நிர்வாகத்தை முடக்கி வைத்திருப்பதும் தேசிய அளவில் தமிழகத்திற்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. இனியாவது ஆட்சியாளர்கள் விழித்துக் கொண்டு மக்கள் பணியாற்ற வேண்டும்; அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் தேசியக் கொடி பறக்கும் காரில், ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவை சந்திக்கச் சென்ற அமைச்சர்களை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has asked the CM O Pannerselvam to dismiss the ministers who are visiting Bangalore jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X