For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திராவிட சமுதாய பெருமைகளை சீர்குலைப்போருக்கு பாடம் புகட்டப்படும்: கருணாநிதி பேச்சு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பகுதியிலிருந்து இந்த திராவிடச் சமுதாயத்தினுடைய கீர்த்தியை நிலைநாட்டவும், திராவிடச் சமுதாயத்தினுடைய பெருமைகளை யாராவது சீர்குலைக்க எண்ணினால் அவர்களுக்கு புத்தி புகட்டவும் நாங்கள் தயார், ஏராளமான லட்சக்கணக்கான இளைஞர்கள் தயார் என்று கை உயர்த்திக் காட்டுகின்ற அந்த நிலைமை இந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது என்று அக்கட்சி தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

மாசிலாமணி உள்ளிட்ட சில மதிமுக நிர்வாகிகள் இன்று திமுகவில், அதன் தலைவர் கருணாநிதி முன்னிலையில் இணைந்தனர்.

Dravidian moment has to be preserve: Karunanidhi

அப்போது கருணாநிதி கூறியதாவது: ம.தி.மு.க.விலிருந்து வெளியேறி, தி.மு.கழகத்திலே தன்னை ஒப்படைத்துக் கொண்ட திண்டிவனம் மாசிலாமணி உள்ளிட்ட, மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க. நடராசன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஹேமா பாண்டுரங்கன், திருவள்ளூர் மாவட்ட துணைச் செயலாளர் எஸ். மணி ஆகியோர் தலைமையில் தாங்கள் விடுபட்டு அல்லது தங்களை விடுவித்துக் கொண்டு நம்மிடத்திலே இன்றைக்கு வந்திருக்கின்ற தகவலை மிகுந்த மகிழ்ச்சியோடு உங்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

நான் அவர்களையெல்லாம் வருக, வருக, வாழ்க என்று வாழ்த்தி வரவேற்கிறேன். இந்த கூடத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பெயரால் அமைந்துள்ள அறிவாலயத்தில் உங்களை யெல்லாம் காண்பது தனி சிறப்பு. இன்றைய நிகழ்ச்சி புதிய வரவுகளை நாம் சந்திக்கின்ற நிகழ்ச்சியாக அமைந்திருப்பது பெரு மகிழ்ச்சியை உருவாக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.

மாசிலாமணி திராவிட முன்னேற்றக் கழகத்திலே சட்டமன்ற உறுப்பினராக, கழகத்தின் காவலர்களில் ஒருவராக, கழகத்தை வழி நடத்தக் கூடியவர்களில் ஒருவராக அந்த வட்டாரத்தில் இருந்தவர். எனக்கும் மிக வேண்டியவர். வேண்டியவர்கள் தான் சில நேரங்களில் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள். நம்முடைய மாசிலாமணி அப்படி ஏமாற்றியவர்களில் ஒருவரல்ல. நான் அவர் கழகத்தை விட்டு விலகியிருந்த நேரத்தில், பல நேரங்களில் சந்தித்திருக்கிறேன்.

சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்ட போதெல்லாம், என்ன மாசி சவுக்கியமாக இருக்கிறாயா என்று கேட்கின்ற அந்த உரிமைக் குரலை எழுப்பியிருக்கிறேன். அவரும் என்னை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே, அவசரப்படாதே அண்ணா, விரைவில் வந்து விடுகிறேன் என்று சொல்லாமல் சொல்வதைப் போல பல நேரங்களில் எனக்கு நம்பிக்கையை ஊட்டியிருக்கிறார்.

கழகம் பல சோதனைகளுக்கு ஆளான நேரத்தில் எல்லாம் நம்மோடு இருந்தவர்களில் ஒருவர், தம்பி மாசிலாமணி அவர்கள். மாசிலாமணியை மாத்திரம் தானே வரவேற்றார், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் நடராசனை வரவேற்கவில்லையே, ஹேமா பாண்டுரங்கனுக்கு இத்தகைய அன்பான அழைப்பைத் தரவில்லையே, திருவள்ளூர் மாவட்டத் துணை செயலாளர் மணிக்கு இந்த வரவேற்பு இல்லையே என்று யாராவது கருதினால் அவர்களுக்கு நான் நம்பிக்கையோடு சொல்வேன், என்றைக்கும் உங்களுக்கு இந்த வரவேற்பும், இன்றைக்கு எந்த அளவுக்கு எங்களுடைய இதயத்தை உங்களுக்குப் பங்கிட்டுத்தந்து, இந்த இயக்கத்திலே இணைத்துக் கொண்டிருக்கிறோமோ, அந்த அன்பான வரவேற்பு என்றைக்கும் மாறாது என்ற உறுதியை இணைந்த அனைவருக்கும் நான் தருகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது யாரோ திடீரென்று உருவாக்கிய ஒரு இயக்கம் அல்ல. தந்தை பெரியார் வழியில் திராவிட இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், எங்களையெல்லாம் இணைத்துக் கொண்டு, தமிழ்நாட்டை, தமிழ் மக்களை, திராவிட மக்களை ஒன்று சேர்த்து, திராவிடர்களுடைய உரிமைகளுக்காகப் போராட கொடி உயர்த்திய போது,

எங்களையெல்லாம் ஒன்று திரட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தை மேலும் வளர்ப்பதற்கு என்னென்ன வழிவகைகளைச் செய்யலாம் என்று ஆலோசித்து, அதற்கான திட்டங்களைத் தீட்டிய போது, அண்ணா அவர்கள் திராவிட இயக்கத் தலைவர்களை யெல்லாம் அழைத்து, அவர்கள் ஆற்றிய தொண்டு, அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்கள், அவர்கள் உருவாக்கிய எழுச்சி இவைகள் எல்லாம் வீண் போய் விடக் கூடாது என்பதற்காக அனைவரையும் ஒன்று திரட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா உருவாக்கினார்கள்.

அண்ணா வழியிலே அயராது உழைப்போம் என்று சூளுரைத்து ஆதிக்கமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி என்ற ஐம்பெரும் முழக்கங்களை எதிரொலித்து அந்த முழக்கங்களின் கீழே அந்தப் பதாகைகளின் கீழே எல்லோரையும் ஒன்று திரட்ட வேண்டுமென்று எண்ணிய போது உங்களையெல்லாம் நான் நினைத்துக் கொள்ளாமல் இல்லை.

நீங்களும் இருந்தால், நாம் திரட்டியுள்ள இந்த வலிவு, மேலும் பொலிவு பெறுமே என்று எண்ணிய காரணத்தால் தான், மேலும் பொலிவு பெறத் தக்க அளவுக்கு இந்த வலிவைப் பெருக்கி, அப்படி வலிவைப் பெருக்கியபோது எங்களை நீங்கள் ஏமாற்றி விடாமல் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்று சொல்லி, நாங்களும், நாங்களாகவே இருப்போம், நாம் நம்முடைய வழியை அறிஞர் அண்ணா வழியாக, பெரியார் வழியாக உருவாக்கி நடத்துவோம் என்ற வகையிலே தான் இன்றைக்கு சமுதாயத் துறையில், இலக்கியத் துறையில் அரசியல் துறையிலே, அத்தனை துறைகளிலும் எங்கங்கே திராவிடனுக்கு, திராவிட சமுதாயத்திற்கு ஏற்றமும் பெற்றியும் உருவாக்க முடியுமோ அதை உருவாக்கக் கூடிய அந்த நிலையை நாம் நிச்சயமாக உருவாக்கியே தீருவோம் என்ற அந்த நம்பிக்கை எங்களுக்கு இப்போது நிரம்ப ஏற்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பகுதியிலிருந்து இந்த திராவிடச் சமுதாயத்தினுடைய கீர்த்தியை நிலைநாட்டவும், திராவிடச் சமுதாயத்தினுடைய பெருமைகளை யாராவது சீர்குலைக்க எண்ணினால் அவர்களுக்கு புத்தி புகட்டவும் நாங்கள் தயார், ஏராளமான லட்சக்கணக்கான இளைஞர்கள் தயார் என்று கை உயர்த்திக் காட்டுகின்ற அந்த நிலைமை இந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. அதிலே ஒரு பகுதியாகத் தான் இன்றைக்கு இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

நானும் நீங்களும் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த இயக்கம் பேரறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் நமக்குத் தந்த பிச்சை என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படி அவர்கள் இச்சையோடு தந்திருக்கின்ற பிச்சையை நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு நமக்குத் தரப்பட்ட கட்டளை, நமக்குத் தரப்பட்ட ஆணை, திராவிடன் எந்தக் காலத்திலும் சோரம் போக மாட்டான், திராவிட முன்னேற்றக் கழகமும் சோரம் போன வரலாறே கிடையாது, சோரம் போகவே போகாது, அப்படிப்பட்ட இந்த இயக்கத்திலே மீண்டும் தங்களை இணைத்துக் கொண்ட உங்களை யெல்லாம் நான் வரவேற்று, பாராட்டி, நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்போம், எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையோடு வாழ்வோம், எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கத்தைக் காப்பாற்றுவோம்.

இது நம்முடைய இயக்கம், நம்முடைய தமிழர் களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். ஒவ்வொரு நாளும் காலையிலே எழுந்தால், இன்றைக்கு நாம் சூரிய உதயத்தைப் பார்த்தால், உடனே சூரியன் சின்னத்திலே திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவதற்காக நாம் பாடுபட வேண்டுமே என்று ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமக்கு தோல்வி என்று எண்ணிக் கொண்டு ஏதேதோ சிலர் பேசுகிறார்களே, அவர்களையெல்லாம் மடக்க முடியும், அடக்க முடியும். நாம் யாரையும் வீழ்த்த வேண்டும், யாரையும் தோற்கடிக்க வேண்டுமென்று கருதுபவர்கள் அல்ல. நாம் விரும்புகின்ற வெற்றியெல்லாம் திராவிட இயக்கத்திற்கு வெற்றி, திராவிட இயக்கம் பெற வேண்டிய வெற்றி, திராவிட இயக்கம் வெற்றி பெறுமேயானால், திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுமேயானால், அதன் நிழலிலே நின்று அதைப் பழி வாங்க வேண்டுமென்று கருதுகிற யாராக இருந்தாலும், என்ன ஆவார்கள் என்று இன்றைக்கு தமிழ்நாட்டின் அரசியல் சரித்திரத்திலே பல கட்சிகளின் தலைவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.

சிலபேர் இன்றைக்கு கார்ட்டூன் சித்திரங்களாக ஆகியிருக்கிறார்கள். பல கட்சித் தலைவர்கள் கேலிச் சித்திரங்களாக ஆகி விட்டார்கள். ஆகவே நாம் அவர்களுக்காக அஞ்சத்தேவையில்லை.

நம்முடைய கடமையை, தாய்நாட்டைக் காப்பாற்றுகின்ற அந்தப் பணியை -அந்தப் போர்க் குணத்தை மாற்றாமல் ஒவ்வொருவரும் திருந்தி, திருந்தியவர்கள் மேலும் பத்து பேரைத் திருத்தி, அந்தப் பத்து பேரும் சேர்ந்து மேலும் நூறு பேரைத் திருத்தி, அந்த நுhறு பேரும் சேர்ந்து மேலும் ஆயிரம் பேரைத் திருத்தி, இந்த இயக்கம் மகா சமுத்திரமாக வானப் பெருவெளியாக ஆயிற்று என்கின்ற அந்த மகிழ்ச்சியை நாம் பெற வேண்டும். அந்த மகிழ்ச்சியை பெறுகின்ற வரையில் என்னைப் பொறுத்தவரையில் எனக்கும் ஓய்வில்லை, உங்களுக்கும் ஓய்வு இருக்கக் கூடாது. இவ்வாறு கருணாநிதி பேசினார்.

English summary
Dravidian moment has to be preserve, says DMK chief Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X