For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனது அரசின் நடவடிக்கைகள் முதலீடுகளை ஈர்த்து தொழில் வளர்ச்சியினை அதிகரிக்கும் - ஜெ.

Google Oneindia Tamil News

சென்னை: எனது தலைமையிலான அரசின் நடவடிக்கைகள், முதலீடுகளை ஈர்த்து தொழில் வளர்ச்சியினை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மாசினை கட்டுப்படுத்தவும் வழிவகுக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

தடையில்லா மின்சாரம்

தடையில்லா மின்சாரம்

தொழில் கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப தகுதியுடன் கூடிய மனித வளம், தடையில்லா மின்சாரம், அமைதியான சட்டம்-ஒழுங்கு, வெளிப்படையான முறையில் எளிமையான அணுகுமுறை போன்ற தொழில் தொடங்கத் தேவையான, சாதகமான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இலக்குகளுடன் கூடிய தொலை நோக்குத் திட்டம் 2023, தமிழ்நாடு தொழில் கொள்கை 2014, மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் கொள்கை 2014, உயிரி தொழில்நுட்பக் கொள்கை 2014 ஆகியவைகளை எனது தலைமையிலான அரசு வகுத்துள்ளதன் காரணமாக, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

மட்டற்ற மகிழ்ச்சி

மட்டற்ற மகிழ்ச்சி

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், கீழ்க்காணும் தொழில் வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

கோவையில் டைசல் பயோ பார்க் - 3

கோவையில் டைசல் பயோ பார்க் - 3

1. கோயம்புத்தூர் பகுதியின் இட அமைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளங்கள், சந்தை வாய்ப்புக்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, கோயம்புத்தூரில் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலப்பரப்பில் 55 கோடி ரூபாய் செலவில் டைசல் பயோ பார்க் III-ஐ டிட்கோ நிறுவனம் டைடல் பார்க் நிறுவனத்துடன் இணைந்து துவக்கும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இத்திட்டம் 500 அறிவியல் அறிஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பினையும், 500 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பினையும் அளிக்கும்.

செங்கல்பட்டில் 300 ஏக்கரில் மருத்துவ பூங்கா

செங்கல்பட்டில் 300 ஏக்கரில் மருத்துவ பூங்கா

2. மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புத் துறையில் இந்தியாவின் மையமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் பொருட்டும், மருத்துவ தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டும், மருத்துவ தொழில்நுட்பத் தயாரிப்புகளின் இறக்குமதியை குறைத்து அதன் மூலம் மருத்துவச் செலவைக் குறைக்கும் நோக்கிலும், எச்.எல்.எல். லைப்கேர் லிமிடெட் என்கிற ஓர் இந்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகில் 330 ஏக்கர் நிலபரப்பில் 130 கோடி ரூபாய் திட்ட செலவில் ஒரு மருத்துவப் பூங்கா டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மருத்துவப் பூங்கா இந்திய நாட்டில் முதன்மையான மருத்துவப் பூங்காவாக அமைவதோடு, மருத்துவ கருவிகள் மற்றும் உபகரணங்கள் மண்டலம், உயிரி தொழில்நுட்பம், உயிரி தகவல் மண்டலம், அடைகாப்பு வசதி மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மண்டலம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் கொண்டதாகவும் அமையும்.

5000 பேருக்கு வேலைவாய்ப்பு

5000 பேருக்கு வேலைவாய்ப்பு

இப்பூங்காவில் அமைக்கப்படவுள்ள 100 தொழில் பிரிவுகளில், 30 தொழில் பிரிவுகள் பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக அமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், சுமார் 5000 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் ஏற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமநாதபுரம்- திருவாடானையில் உற்பத்தி மண்டலம்

ராமநாதபுரம்- திருவாடானையில் உற்பத்தி மண்டலம்

3. தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் மற்றும் திருவாடானை வட்டங்களில் தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம், சுமார் 6,525 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மண்டலத்திற்கான விரிவான திட்ட அறிக்கை நடப்பாண்டில் தயாரிக்கப்பட்டு மைய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பணிகளை விரைவில் மேற்கொள்ள எனது தலைமையிலான அரசு முழு முயற்சிகளை மேற்கொள்ளும்.

வாலிநோக்கத்தில் கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம்

வாலிநோக்கத்தில் கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம்

4. தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களின் சமூக பொருளாதார வளர்ச்சியில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் உள்ள வாலிநோக்கம் உப்பள வளாகத்தில் 500 ஏக்கர் அரசு நிலத்தில் 50 மெகாவாட் மின் திறன் கொண்ட சூரிய வெப்ப சலன மின் உற்பத்தியுடன் கூடிய கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம் ஒன்று 1500 கோடி ரூபாய் செலவில் டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின் மூலம் ஏறத்தாழ ஆண்டிற்கு 190 மில்லியன் யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டத்திலிருந்து வெளி யாகும் உப்பு நீரிலிருந்து உப்பை உற்பத்தி செய்ய தமிழ்நாடு உப்பு நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

கிருஷ்ணகிரியில் மின்னணுவியல் உற்பத்தி வளாகம்

கிருஷ்ணகிரியில் மின்னணுவியல் உற்பத்தி வளாகம்

5. மின்னணுவியல் துறையின் உட்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி ஆகியவைகளை தமிழ்நாட்டின் பின் தங்கிய மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யும் நோக்கத்தோடு, மின்னணுவியல் உற்பத்தி வளாகம் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 527 ஏக்கர் பரப்பளவில் 920 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசின் தேசிய மின்னணுவியல் கொள்கையின் அடிப்படையில், டிட்கோ மற்றும் ஜி.எம்.ஆர். இன்பிராஸ்ட்ரக்கர் நிறுவனம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தும். 527 ஏக்கர் நிலப்பரப்பில் 65 சதவிகித இடம் மின்னணுவியல் நிறுவனங்கள் நிறுவுவதற்கான உற்பத்தி சார்ந்த பகுதியாகவும், மீதமுள்ள இடம் உற்பத்தி சாரா பகுதியாகவும் அமைக்கப்படும். இத்திட்டத்திற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை மைய அரசு வழங்கியுள்ளது. இத்திட்டம் சுமார் 7,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பதோடு, சுமார் 40,000 நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை வழங்கும்.

ரூ. 190.57 கோடியில் சிப்காட் வளாகங்களில் வசதிகள்

ரூ. 190.57 கோடியில் சிப்காட் வளாகங்களில் வசதிகள்

6. பெரும் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், மாநிலத்தின் வேலை வாய்ப்பைப் பெருக்கும் வகையிலும், 2014-2015-ஆம் ஆண்டில் 190 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தின் வெவ்வேறு தொழில் வளாகங்கள் / பூங்காக்களில் சாலைகள், தண்ணீர் வசதி, தெரு விளக்குகள், கழிவு நீர் அகற்று வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

12 மாவட்டங்களில் ரூ. 5 கோடியில் மரம் நடல்

12 மாவட்டங்களில் ரூ. 5 கோடியில் மரம் நடல்

7. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், அழிந்து வரும் வனங்களை உயிர்ப்பிப்பதும் அத்தியாவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 20 சிப்காட் தொழில் பூங்காக்களில் உள்ள சாலையோரங்களில் இரு புறமும் 10 மீட்டர் இடைவெளியில் 5 கோடி ரூபாய் செலவில் மரங்களை நட்டு அவற்றை சிறப்பாக பேணி வளர்க்க சிப்காட் நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மரங்களை நடுவதற்கும், இவற்றை ஐந்து ஆண்டுகள் பராமரிக்கவும் வனத் துறையுடன் சிப்காட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளும்.

கழிவுநீர்த் தொட்டிகளை புனரமைக்க ரூ. 4 கோடி

கழிவுநீர்த் தொட்டிகளை புனரமைக்க ரூ. 4 கோடி

8. சிப்காட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று தொழில் வளாகங்கள் மற்றும் தொழில் பூங்காக்களில் உள்ள நீர் நிலைகளில் நிலத்தடி நீரை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் 6 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்பதையும், சிப்காட் தொழில் வளாகங்கள், பூங்காக்கள், வளர்ச்சி மையங்களில் உள்ள 42 கழிவு நீர் தொட்டிகள் ஒவ்வொன்றும் சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என்பதையும், நடப்பாண்டில் 10 கழிவு நீர் தொட்டிகள் 4 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிமென்ட் ஆலை மேம்பாடு

சிமென்ட் ஆலை மேம்பாடு

9. பெருகி வரும் கட்டுமானத் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், கட்டுமானத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும், கட்டுமானத் தொழிலுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுள் ஒன்றான சிமெண்ட் உற்பத்தியை பெருக்கும் வகையிலும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் காகித ஆலையிலிருந்து உருவாகும் சுண்ணாம்புக் கழிவு மற்றும் மின் உற்பத்தி நிலையத்தின் உலர் சாம்பல் ஆகியவற்றை பயன்படுத்தி நாளொன்றுக்கு 600 டன் சிமெண்ட் தயாரிக்கும் ஆலை ஒன்று 30.1.2013 அன்று என்னால் ஏற்கெனவே துவக்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை 30 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப்படும். இதன் மூலம் இந்த சிமெண்ட் ஆலையின் உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 600 மெட்ரிக் டன்னிலிருந்து 900 மெட்ரிக் டன்னாக உயரும்.

ஸ்ரீரங்கத்தில் காகித அட்டை ஆலை

ஸ்ரீரங்கத்தில் காகித அட்டை ஆலை

10. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், இரு புறமும் மேற்பூச்சு செய்யப்பட்ட அடுக்கு காகித அட்டை தயாரிக்கும் புதிய ஆலை ஒன்று 1,200 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 2,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் நிறுவப்படும் என இந்த மாமன்றத்தில் 7.5.2013 அன்று நான் அறிவித்தேன். அந்த ஆலையை நிறுவிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாயனூரில் காகித அட்டை உற்பத்தி மையம்

மாயனூரில் காகித அட்டை உற்பத்தி மையம்

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு செய்தித் தாள் காகித நிறுவனம் உற்பத்தி செய்யும் காகிதம் மற்றும் அடுக்கு காகித அட்டையிலிருந்து, விலை மதிப்பு கூட்டிய பொருட்களை உற்பத்தி செய்யும் மையம் ஒன்று கருர் மாவட்டம், மாயனுரில் 38.40 ஏக்கர் பரப்பளவில் 40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மையத்தில், நோட்டுப் புத்தகம், பாடப் புத்தகம், சிறிய அட்டை பெட்டி தயார் செய்தல் போன்ற காகிதம் மற்றும் அடுக்கு காகித அட்டை சார்ந்த சுமார் 15 தொழிற்கூடங்கள் அமையப் பெற்று, சுமார் 500 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

செய்தித்தாள் நிறுவனத்தில் ரூ. 12 கோடியில் மேம்பாடு

செய்தித்தாள் நிறுவனத்தில் ரூ. 12 கோடியில் மேம்பாடு

11. தமிழ்நாடு செய்தித் தாள் காகித நிறுவனத்தின் மென்பொருள் தொழில் நுட்பப் பிரிவின் சேவை மையம், அந்நிறுவனத்தின் தற்போதைய தேவைக்கு ஏற்ப 12 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எத்தனால் ஆலைகள்

எத்தனால் ஆலைகள்

12. சர்க்கரை ஆலைகளை ஊக்குவிக்கும் விதமாக, கள்ளக்குறிச்சி மற்றும் தர்மபுரி, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், தலா 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 45 கிலோ லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட வடிப்பகத்துடன் கூடிய எத்தனால் ஆலைகள் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் அந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கரும்புப் பயிர் முழுமையாக பயன்படுத்தப்படும். கரும்பு கசண்டு மதிப்பு கூட்டப்பட்டு, எத்தனால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிசாராயம் தயாரிக்கப்பட்டு ஆலைக்கு அதிக வருவாயும், லாபம் ஈட்டும் வாய்ப்பும் அதிகரிக்கும். இத்திட்டத்திற்குத் தேவைப்படும் 180 கோடி ரூபாயில், 50 சதவீதம் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் மூலமும், 40 சதவீதம் சர்க்கரை வளர்ச்சி நிதியிலிருந்தும், 10 சதவீதம் பங்கு மூலதனத்தின் மூலமும் ஈடு செய்யப்படும்.

அமராவது, சேலம் கூட்டுறவு ஆலைகள்

அமராவது, சேலம் கூட்டுறவு ஆலைகள்

13. அமராவதி மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் வடிப்பகத்துடன் கூடிய எத்தனால் ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆண்டொன்றுக்கு 90 லட்சம் லிட்டர் எத்தனாலையும், 1.65 கோடி லிட்டர் எரிசாராயத்தையும் உற்பத்தி செய்யும் திறனை இவ்வாலைகள் பெற்றுள்ளன. இவ்வாலைகளில் தண்ணீரை சேமிக்கும் நோக்கத்துடனும், மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக பின்பற்றும் நோக்கத்துடனும் நவீன சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சுத்திகரிக்கும் நிலையமானது, ஈரடுக்கு எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில் அமைக்கப்படும்.

நவீன சுத்திகரிப்பு நிலையம்

நவீன சுத்திகரிப்பு நிலையம்

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், மறு சுழற்சி முறையில் மீண்டும் ஆலையில் பயன்படுத்தப்படுவதால் தண்ணீர் தேவை குறையும். ஆலை கழிவு நீர் வெளி யேற்றம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். இந்த நவீன சுத்திகரிப்பு நிலையம் ஒவ்வொன்றும் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மொத்தம் 17 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

இணைப்பு

இணைப்பு

14. தண்ணீர் மற்றும் காற்றின் தரத்தினை மேம்படுத்தவும், மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்கும் நோக்கத்துடனும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய காற்று கவனிப்பு அலகுடன், நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பகம் மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பகம் ஆகியவை இணைக்கப்படும்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைப்பு

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைப்பு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஏற்படுத்தப்படும் நேரடி தொடர்பு அமைப்பு, மின்னணு காட்சி முறையில் கண்காணிக்கும் வண்ணம் அமைக்கப்படும். இதன் மூலம் காற்று மற்றும் நீரிலுள்ள மாசு விவரங்கள் துல்லியமாக அறியப்படும். மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக பின்பற்றவும், ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் காற்று மாசு விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் இத்திட்டம் உதவும். இத்திட்டத்திற்கு ஆகும் மொத்த செலவு 5 கோடியே 51 லட்சம் ரூபாய் ஆகும்.

கிரானைக் கழிவு மேம்பாடு

கிரானைக் கழிவு மேம்பாடு

15. தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் குவாரிகள் மற்றும் சுரங்கங்களில் விரிவாக்கம் மற்றும் உற்பத்தி பணிகளுக்காக பளு தூக்கி இயந்திரங்கள், சுரங்க லாரிகள், அதாவது டிப்பர்கள், துளையிடும் இயந்திரங்கள், மண் வாரி இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரங்கள் நவீன முறையில் பெரிய பாறைகளிலிருந்து கற் துண்டங்களை வெட்டி எடுப்பதற்கும், அவற்றை கையாளுவதற்கும், கிரானைட் கழிவுகளை கையாளுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

செலவு குறைப்பு

செலவு குறைப்பு

தற்போது, வாடகை இயந்திரங்களுக்கு செலவிடப்படும் தொகையினை குறைக்கும் வகையிலும், பழுது நீக்கும் நேரத்தை குறைக்கும் வகையிலும், புதிய இயந்திரங்களை வாங்கி, சுரங்கம் மற்றும் குவாரிகளில் பயன்படுத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வண்ணமும், விஞ்ஞான முறையில் மிகச் சிறப்பாக சுரங்கப் பணிகளை மேற்கொள்ளும் வகையிலும், 16 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் சொந்தமாக நவீன இயந்திரங்களான 11 மண் வாரி இயந்திரங்கள், 10 சுரங்க லாரிகள், அதாவது டிப்பர்கள், மற்றும் 6 காற்றழுத்தி இயந்திரங்கள் ஆகியவை தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கென வாங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்

தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்

மேற்காணும் எனது தலைமையிலான அரசின் நடவடிக்கைகள், முதலீடுகளை ஈர்த்து தொழில் வளர்ச்சியினை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மாசினை கட்டுப்படுத்தவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

English summary
CM Jayalalitha has announced that the govt will form a health park near Chengalpattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X