For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் ஆக மாற்றியது சமஸ்கிருத சதி... கருணாநிதி கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: இனிமேல் "ஆசிரியர் தினம்" என்பதற்குப் பதிலாக "குரு உத்சவ்" என்ற பெயரில் அதைக் கொண்டாட வேண்டுமென்று மத்திய அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக செய்தி வெளி வந்துள்ளது. இப்படி நம்முடைய மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்தி விட்டு, அதற்குப் பிறகு இந்த மொழிக்குரியவர்களை, இந்த மொழியால் உயர்ந்தவர்களை, இந்த மொழியால் தங்களை வருத்திக் கொண்டவர்களை வீழ்த்தி விட கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை முன்னாள் செயலாளர் மா.செல்வராஜின் மகள் அனுஷா-அர்மேஷ் திருமணம் இன்று காலை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:

என்ன விலை

என்ன விலை

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு, அமைதி என்றால் என்ன விலை என்று கேட்கக் கூடிய நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நேரத்திலும் ஒரு காலத்தில், ஆட்சியில் அலுவலராக, செயலாளராக, எங்களுக்கு உற்றத் துணைவராக இருந்தவர் செல்வராஜ்.

நன்றி மறவாத செல்வராஜ்

நன்றி மறவாத செல்வராஜ்

அந்த நன்றியை மறவாது, எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதைப் பற்றிக் கவலையில்லை, ஆனால் தான் தமிழன், தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பெரும் பணிகளை ஆற்ற வேண்டியவன் என்கின்ற அந்த உணர்வோடு இன்றைக்கு இந்தத் திருமணத்திலே, தன்னுடைய வீட்டுச் செல்வங்களுக்கு தமிழ் முறைப்படி, தமிழர்களுடைய நாகரிகத்தின் அடிப்படையில் இந்தத் திருமணத்தை நடத்தியிருப்பது பெரிதும் பாராட்டுக்குரிய ஒன்றாகும். நாம் மகிழத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும்.

படிப்படியான தீமைகள்

படிப்படியான தீமைகள்

இதை நான் ஏன் மகிழத்தக்க நிகழ்ச்சி, பாராட்டுக்குரிய நிகழ்ச்சி என்று சொல்கிறேன் என்றால், இன்றையதினம் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள படிப்படியான தீமைகளையெல்லாம் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இன்று நம்முடைய கையிலே தமிழுக்கு ஏற்றம் தரக் கூடிய எந்த சக்தியையும் நாம் படைத்திருக்க வில்லை. என்னால் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல முடியும்.

அபாய அறிவிப்புகள்

அபாய அறிவிப்புகள்

நான் தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்து முறையும், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக பன்னிரண்டு முறையும், சட்டப் பேரவை உறுப்பினராக ஏறத்தாழ 50 ஆண்டு காலம் இருந்தவன் என்ற முறையில் உங்களோடு பழகியவன், பழகிக் கொண்டிருக்கிறவன், மேலும் பழகப் போகிறவன் என்ற வகையில் சில அபாய அறிவிப்புகளை நீங்கள் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டு மென்பதற்காகச் சொல்கிறேன்.

சோமசுந்தர பாரதியார்

சோமசுந்தர பாரதியார்

நம்முடைய தமிழ்ச் சமுதாயம் வாழ்வதற்காகப் பாடுபட்டவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார் என்று ஒருவர் இருந்தார். அவர் தமிழ் நெறி, தமிழ் முறை, தமிழ் நலன், தமிழ் இயக்கம், இதற்காக தன்னையே ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்தவர். அவர் நம்முடைய இல்லங்களிலே நடைபெறுகின்ற விழாவானாலும், நாம் நடத்துகின்ற பெரு விழாக்களானாலும், அந்த விழாக்களில் எல்லாம் தமிழைப் போற்றுங்கள், தமிழை வாழ்த்துங்கள், தமிழர்கள் இலக்கியங்களை மறவாமல் அவற்றைப் பின்பற்றுங்கள் என்பதைச் சொல்லிச் சொல்லி மக்கள் மனதிலே பதிய வைப்பார்.

சஞ்சுகிருதம்

சஞ்சுகிருதம்

அப்படிப்பட்ட அந்தப் பாரதியார், நாவலர் பாரதியார் ஒன்றைச் சொல்வார். நம்மை இன்றைக்கு சீரழிக்க வந்துள்ள மொழி ஆதிக்கத்திற்குப் பெயர் "சஞ்சுகிருதம்" என்று சொல்லுவார். அதாவது சமஸ்கிருதத்தை அவ்வளவு கிண்டலாக, கேலியாக, "சஞ்சுகிருதத்தை" யாரும் பின்பற்றாதீர்கள் என்று சொல்லுவார். அப்படிப்பட்ட பெரியவர்கள், தியாகச் செம்மல்கள், தமிழ்ச் சான்றோர்கள் வாழ்ந்த தமிழ் நிலத்தில் இன்றைக்கு தமிழ்த் திருமணத்தை நடத்திக் கொள்கின்ற நேரத்தில் ஒன்றை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

சமஸ்கிருத வாரம்

சமஸ்கிருத வாரம்

அவர் சொன்ன அந்த "சஞ்சுகிருதம்" அவர் கேலியாகச் சொன்ன, ஏளனமாகச் சொன்ன, அந்த சஞ்சுகிருதம் இன்றைக்கு தமிழ்நாட்டில் சமஸ்கிருத வாரமாகக் கொண்டாடப்பட வேண்டுமென்று சொல்கிற அளவுக்கு ஓங்கி வளர்ந்திருக்கின்றது.

குரு உத்சவ்

குரு உத்சவ்

அது மாத்திரமல்ல; இன்றைக்கு காலையிலே நான் பத்திரிகையிலே படித்த ஒரு செய்தியில், என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இனிமேல் "ஆசிரியர் தினம்" என்பதற்குப் பதிலாக "குரு உத்சவ்" என்ற பெயரில் அதைக் கொண்டாட வேண்டுமென்று மத்திய அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக செய்தி வெளி வந்துள்ளது.

புதிய ஆணை

புதிய ஆணை

ஆசிரியர் தினம் என்பதை நாம் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம். அந்தச் சொல்லை மாற்றி இன்றைக்கு வந்துள்ள மத்திய புதிய அரசு வெளியிட்டு ஆணை, இனிமேல் அனைத்துப் பள்ளிகளிலும் "குரு உத்சவ்" என்று தான் ஆசிரியர் தினத்தை அழைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

மொழியில் கைவைத்து

மொழியில் கைவைத்து

இப்படி நம்முடைய மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்தி விட்டு, அதற்குப் பிறகு இந்த மொழிக்குரியவர்களை, இந்த மொழியால் உயர்ந்தவர்களை, இந்த மொழியால் தங்களை வருத்திக் கொண்டவர்களை வீழ்த்தி விட கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை.

மெல்ல மெல்ல ஆரியம்

மெல்ல மெல்ல ஆரியம்

ஆகவே தான் நாம் இந்தத் திருமணத்தை தமிழர் முறைப்படி நடத்திக் கொண்டாலுங்கூட, இந்தத் தமிழர் முறைகளுக்கு வேட்டு வைக்கின்ற அளவுக்கு மெல்ல மெல்ல ஆரியம் தமிழகத்திலே தன்னுடைய சித்து வேலைகளைத் தொடங்கி விட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழன் மேலும் அடிமைப்படுவான்

தமிழன் மேலும் அடிமைப்படுவான்

சமுதாயத் துறையிலே திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபாடு கொண்டு இத்தகைய செய்திகளையெல்லாம் வெளியிடாவிட்டால், தமிழன் மேலும் அடிமைப்பட்டுப் போய் விடுவான் என்பதை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு, அந்த ஞாபகத்தை சிறிதும் மறவாமல் தமிழர்களுக்காக, தமிழன் வாழ வேண்டும், தமிழ்ச் சமுதாயத்திற்காக உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும் என்ற அந்த உணர்வோடு செயல்படுங்கள் என்று நான் இந்தத் திருமண விழாவிலே அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

English summary
DMK chief Karunanidhi has condemned the centre for renaming the Teachers day as Guru Utsav from this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X