For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தி திணிப்பை போன்று, சமஸ்கிருத திணிப்பையும் ஏற்க முடியாது: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இந்தி திணிப்பை எப்படி ஏற்க முடியாதோ, அதைப்போல் சமஸ்கிருத திணிப்பையும் ஏற்க முடியாது என்று மத்திய அரசின் முடிவுக்கு கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில்:

மத்திய அரசின் நிறுவனமான சி.பி.எஸ்.இ. இயக்குநர் சார்பில் நான்கு பக்க சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், ஆகஸ்டு மாதம் இரண்டாவது வாரத்தை சமஸ்கிருத வாரமாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Karunanidhi demands revised circular on Sanskrit Week

ஜூன் மாதம் 30-ந் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, சமஸ்கிருதம் என்றால் என்ன என்றே தெரியாத பிராந்தியங்களுக்கும்கூட பொருந்தும் வகையில் உள்ளது என்று மொழியியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

சமஸ்கிருதத்தை கற்பிக்கவும், பயிலவும் சி.பி.எஸ்.இ. உறுதி பூண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பண்பாட்டின் ஆணி வேர் சமஸ்கிருதம் தான். இதில் இந்திய அறிவுக்களஞ்சியம் உள்ளது என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தி திணிப்பை எப்படி ஏற்க முடியாதோ, அதைப் போல சமஸ்கிருத திணிப்பையும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் மற்ற கட்சிகள் எல்லாம் கூட சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவதற்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினரான நண்பர் இல.கணேசன், சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதால் தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் பாதிப்பில்லை என்றும், அ.தி.மு.க.வில் "அகில" என்பதும், "திராவிட" என்பதும் சமஸ்கிருத வார்த்தைகள்தான் என்றும், சமஸ்கிருதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையது அல்ல என்றும், அதே நேரத்தில் செம்மொழி தமிழுக்கு தை மாதத்தின் முதல் ஏழு நாட்களை தமிழ் மொழி வாரம் என்று கொண்டாடலாம் என்றும் கூறியிருக்கிறார்.

அவர் வாதப்படியே சமஸ்கிருத வாரம் கொண்டாடினால் மேலும் மேலும் சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளே வர வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்பதையும் நினைவிலே கொள்ள வேண்டும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு மாநிலத்திலும், அதன் மொழி சார்ந்த கலாசாரத்தின் அடிப்படையில் மொழி வாரம் கொண்டாடப்பட வேண்டுமென்றும், தமிழ்நாட்டில் தமிழ் செம்மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் சம்பந்தப்பட்ட மொழிகளின் வாரத்தையும் கொண்டாட உத்தரவிடுங்கள் என்றும், சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதை ஏற்க முடியாதென்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியதாக செய்தி வந்தது.

இதே ஜெயலலிதா, 8-7-2014 அன்று காமராஜர் சாலையிலே அமைந்துள்ள விவேகானந்தர் இல்ல வளாகத்தில், தமிழ்நாடு அரசின் ரூ.2 கோடி நிதி உதவியுடன் ராமகிருஷ்ண மடம் நிர்வாகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சி பற்றியும் செய்தி வெளிவந்தது.

விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு விழாவினையொட்டி 8,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பண்பாட்டு மையத்தில் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிப்பாடங்களை பயிற்றுவித்தல் போன்ற பல்வேறு பண்பாட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார்கள்.

தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பயிற்றுவிக்க அமைந்துள்ள பண்பாட்டு மையத்திற்கு அரசின் சார்பில் ரூ.2 கோடி நிதி உதவி செய்துவிட்டு, மத்திய அரசுக்கு தமிழகத்திலே சமஸ்கிருத வாரம் கொண்டாடக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுகிறார்.

தி.மு.க.வை பொறுத்தவரையில் இந்தி மொழியையோ, சமஸ்கிருத மொழியையோ எந்த பிரிவு மக்கள் மீதும் திணிப்பதை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.

ஏற்கனவே இந்தி மொழி பற்றிய அறிவிப்பில் மத்திய அரசு அது இந்தி மொழி பேசுகின்ற மாநிலங்களுக்கு மட்டுமே உரிய அறிவிப்பு என்று அறிவித்ததை போல, இந்த சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பற்றியும் உடனடியாக உரிய திருத்த அறிக்கையினை வெளியிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK chief M Karunanidhi on Monday asked the Centre to confine the proposal to Hindi-speaking states only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X