For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனியும் நம்புவதற்கு இந்தத் தமிழ் நாட்டு மக்கள் தயாராக இல்லை - கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மின்நிலவரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா கூறுவதை இத்தனை காலமும் நம்பிக் காத்திருந்தது போல, இனியும் நம்புவதற்கு இந்தத் தமிழ் நாட்டு மக்கள்தான் தயாராக இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும், தமிழக மின்நிலவரம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிகாரிகளும் தவறான தகவல்களைத் தருவதாகவும் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

Karunanidhi questions Jaya's claim on power issues

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மின்சாரம் பற்றிய பேச்சு

கடந்த 15-9-2014 அன்று கோவையில் உள்ளாட்சித் தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மின்சாரம் பற்றி நீண்ட நேரம் பேசியிருக்கிறார்.

3 ஆண்டுகளில்

"கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 2,793 மெகாவாட் கூடுதல் மின் நிறுவு திறன் சேர்க்கப் பட்டுள்ளது. இதுவன்றி நடுத்தர கால அடிப்படையில் 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 1000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகிலிருந்து தற்போது 562 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. தமிழகத்தில் மேலும் பல புதிய மின் திட்டங்கள் மூலம் இன்னும் ஒருசில மாதங்களில் 737 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கவிருக்கிறது. 1000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாம் அலகு, இந்த ஆண்டு இறுதியில் மின் உற்பத்தியைத் தொடங்கவிருக்கிறது. இதன் மூலம் 463 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

விரிவாக்கத் திட்டம் மூலம்

2014-2015ஆம் ஆண்டில் தலா 250 மெகாவாட் திறன் கொண்ட நெய்வேலி நிலக்கரி விரிவாக்கத் திட்டம் நிலை 2ன் இரண்டு அலகுகள் மின் உற்பத்தியைத் தொடங்க இருக்கின்றன. இவற்றின் மூலம் 230 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவிருக்கிறது. இது தவிர 3,330 மெகாவாட் மின்சாரத்தை 15 ஆண்டுகளுக்குப் பெறத்தக்க வகையில் நீண்ட கால அடிப்படையில் கொள்முதல் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில் 224 மெகாவாட் மின்சாரம் தற்போது பெறப் பட்டு வருகிறது. இது டிசம்பர் மாதத்திற்குள் 1000 மெகாவாட்டாக உயரும். மொத்தத்தில் 2014-2015ஆம் நிதி ஆண்டிற்குள் தமிழகத் திற்குக் கூடுதலாக 2,430 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவிருக்கிறது. இதையும் சேர்த்து கூடுதலாக 5,723 மெகாவாட் மின்சாரம் கிடைக்க எனது தலைமையிலான அரசு வழி வகுத்துள்ளது"" என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்குத்தான்

இந்தப் பேச்சில் முக்கியமாக, மொத்தத்தில் 2014-2015ஆம் நிதி ஆண்டிற்குள் தமிழகத்திற்குக் கூடுதலாக 2,430 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்குத்தான்"" என்று சொல்வார்கள்! முதலமைச்சரின் பொய் 5 நாட்களுக்குக் கூட நீடிக்கவில்லை.

கிடைக்குமா.. சந்தேகம்தான்!

இதோ; 20-9-2014 தேதிய நாளேடு, "தமிழகத்திற்கு 2,430 மெகாவாட் மின்சாரம் சாத்தியமா? முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் மின் வாரியம்"" என்ற தலைப்பில் ஒரு பெரிய செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், "நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் ஆறு மாதங்களே உள்ளதால், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி, தமிழகத்திற்கு 2,430 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தூத்துக்குடியில், என்.எல்.சி., மற்றும் மின்வாரியம் இணைந்து, தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்திற்கு 387 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அனல் மின்நிலைய முதல் அலகில் 2012 மார்ச் மாதத்திலும், இரண்டாம் அலகில் 2012 ஆகஸ்ட் மாதத்திலும் உற்பத்தியைத் துவக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை மின் உற்பத்தி துவக்கப்படவில்லை. (ஆனால் இங்கிருந்து 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்குமென்று கோவையில் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.)

எதிர்பார்க்கும் ஜெயலலிதா

வல்லூரில் இரண்டு அலகுகளில் மட்டும், மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மூன்றாம் அலகில் வணிக ரீதியாக மின் உற்பத்தி இதுவரை துவங்கப்படாததால், தமிழகத்திற்கு 350 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை. (ஆனால் வல்லூர் மூன்றாவது அலகிலிருந்து 350 மெகாவாட் மின்சாரம் கிடைக்குமென்று ஜெயலலிதா எதிர்பார்க்கிறார்) கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்திற்கு 1,025 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, முதல் அணு உலையில், சோதனை மின் உற்பத்தி நடக்கிறது. இரண்டாவது அணு உலை, இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. (ஆனால் ஜெயலலிதா கூடங்குளத்திலிருந்து 463 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்குமென்று கோவையிலே பேசியிருக்கிறார்)

முதல்வர் பேச்சில்

நெய்வேலியில் விரிவாக்கம் என்ற பெயரில் தலா 250 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு புதிய அலகுகள் அமைக்கப் பட்டுள்ளன. அங்கு வணிக மின் உற்பத்தி துவங்காததால் தமிழகத்திற்கு 230 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. (ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா நெய்வேலியிலிருந்து 230 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கப் போவதாக கோவையில் சொல்லியிருக்கிறார்.) முதலமைச்சர் தன் பேச்சில் தனியார் நிறுவனங்களிடமிருந்து தற்போது 224 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது, இது டிசம்பரில் 1,000 மெகா வாட்டாக உயருமென்று தெரிவித்திருக்கிறார். தனியார் நிறுவனங்களிடமிருந்து கடந்த பிப்ரவரி மாதம், 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவேண்டிய நிலையில், தற்போது 224 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. நடப்பு நிதியாண்டு முடிவு அடைய இன்னும் ஆறு மாதங்களே எஞ்சியுள்ளது. இந்நிலையில், கூடங்குளம் இரண்டாவது அணு உலை, தூத்துக்குடி என்.டி.பி.எல். உள்ளிட்ட மின் நிலையங்களில் தற்போது வரை சோதனை மின் உற்பத்தி கூட துவங்கப்படவில்லை. எனவே முதல்வர் அறிவித்தபடி, நடப்பு நிதியாண்டிற்குள் 2,430 மெகாவாட் மின்சாரம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது" என்று அந்த நாளேடு ஜெயலலிதாவின் கோவைப் பேச்சு பற்றி விளக்கமளித்துள்ளது.

அதிகாரிகள் மறைக்கிறார்கள்

மேலும் அந்த நாளிதழ், இது குறித்து எரிசக்தித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில், "முதல்வரிடம் மின் வாரிய அதிகாரிகள், நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக உண்மையான, மின் நிலைமையைத் தெரிவிக்காமல் மறைக்கின்றனர். இதை நம்பி, முதல்வரும் மின் தடை இருக்காது என பொதுமக்களிடம் கூறி வருகிறார். இதனால், மின் பற்றாக்குறையால் மின் தடை செய்யும்போது மக்களிடம் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது" என்றும் தெரிவித்துள்ளது.

நான் சொல்லவில்லை

முதலமைச்சரின் பேச்சு உண்மைக்கு மாறானது என்பதை நான் கூறவில்லை. அந்த நாளேடு எழுதியிருப்பதைத்தான் அப்படியே எடுத்துத் தெரிவித்திருக்கிறேன். ஜெயலலிதா கடந்த மூன்றாண்டுகளாக இது போன்ற உறுதிமொழிகளை எத்தனை முறை தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிவித்திருக்கிறார்?

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே

அ.தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே"ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மின் வெட்டு இல்லாமல் செய்வோம்" என்று சொல்லி விட்டுத்தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் 2011ஆம் ஆண்டு ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த ஜெயலலிதா "தற்போதுள்ள மூன்று மணி நேர மின் வெட்டினை இரண்டு மணி நேரமாகக் குறைப்போம்; ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும்"" என்று சொன்னார். அந்தத் துறையின் அமைச்சர், "இந்தியா டுடே" இதழுக்கு 2012ஆம் ஆண்டு பிப்ரவரியில் அளித்த பேட்டியில், "2012 மார்ச் முதல் மே மாதம் வரையில் மட்டும்தான் தமிழகம் மின் பற்றாக்குறையை அனுபவிக்கும். இந்த மூன்று மாதங்களை மட்டும் பொறுத்துக் கொண்டால், தமிழகத்தில் மின் பற்றாக்குறையே இருக்காது" என்றார். 2012ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் ஒரு விழாவில் பேசிய முதல் அமைச்சர் ஜெயலலிதா 2013ஆம் ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்றார்.

சட்டசபையில் அறிக்கை

25-4-2013 அன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையில், "நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம், தமிழகம் விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்பதோடு, மின் நுகர்வோருக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும்"" என்றார். 25-10-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, "உறுப்பினர்கள் யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை, வெகு விரைவில், மிக விரைவில், தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக ஆக்கப்படும் என்பதைத் திட்டவட்ட மாகத் தெரிவித்துக் கொள்கிறேன், அதைச் சாதித்தே தீருவோம்"" என்றார்.

ஏற்காடு இடைத் தேர்தலின்போது

2013ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி ஏற்காடு இடைத் தேர்தலில் உரையாற்றிய ஜெயலலிதா, ""மத்திய அரசினால் தான் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது; அந்தச் சூழ்நிலையையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையைச் சரி செய்து, மின் வெட்டே இல்லாத ஒளிமயமான சுபிட்சமான நிலைமையை விரைவில் உருவாக் கியே தீருவேன்"" என்றார். மீண்டும் இந்த ஆண்டு மே மாத இறுதியில்"ஜூன் 1ந்தேதி முதல் மின் வெட்டு முழுவதுமாக நீங்கும்"" என்றார். இதைத் தொடர்ந்து 18-6-2014 தேதிய "ஜூனியர் விகடன்"" இதழில், ""கப்சா கரண்ட்! இருளில் தவிக்கும் தமிழகம்"" என்ற தலைப்பில் ஒவ்வொரு மாவட்டமும் மின் வெட்டு காரணமாக எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பத்து பக்கங்களுக்கு ஒரு நீண்ட கட்டுரையாக வெளியிடப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையின் துணைத் தலைப்புகளை மட்டும் இடம் கருதி சுருக்கமாகக் கூற வேண்டுமேயானால்; நெல்லையின் சோகம் -மிரட்டி ஓட வைக்கும் சென்னை - சிவகங்கையில் திடீர் மின்வெட்டு - விழுப்புரத்தில் ஆறு மணி நேர மின் வெட்டு - வெக்கையில் தவிக்கும் வேலூர் - கடலூரில் மூன்று "பேஸ்" முடக்கம் - திக் திக் திருவண் ணாமலை - ராமநாதபுர ஐஸ் பிரச்சினை - முதல்வர் தொகுதியிலும் மின் தட்டுப்பாடு - சேலம் தொழிற்சாலைகள் பாதிப்பு - நாமக் கல்லில் நேரம் தெரியவில்லை - விருதுநகரில் ஆகா! - மதுரையில் படுத்துவிட்ட நெசவுத் தொழில் - தேனி மருத்துவமனையிலும் மின்வெட்டு - கிருஷ்ணகிரியில் காரணம் தெரியவில்லை - தர்மபுரியில் அப்பாடா!" என்ற துணைத் தலைப்புகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்வெட்டு எவ்வாறு இருக்கின்றது என்பதை எழுதியிருக்கிறார்கள்.

வெள்ளை அறிக்கைக் கோரிக்கை

ஜெயலலிதா தனது பேச்சில் 2,500 மெகா வாட் மின்சாரம் தற்போது அவருடைய ஆட்சியில் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது என்று பேசியதற்குக் கூட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், "தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்து தான் இந்த 2,500 மெகாவாட் மின்சாரம் இப்போது கிடைக்கத் தொடங்கியிருக்கிறதே தவிர, ஜெயலலிதா புதிதாகத் தொடங்கப் போவதாக அறிவித்த மின் திட்டங்களால் இல்லை. ஜெய லலிதா தனது அறிக்கையில் 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட கால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள் ளன என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த மின்சாரம் யாரிடமிருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது? அதற்காக முறைப்படி டெண்டர் கோரப்பட்டதா? அரசு சார்பில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப் பட்டால் அனைவரும் விவரங்களைப் புரிந்து கொள்ள முடியும்"" என்று பதில் அறிக்கை விடுத்தார். வெள்ளை அறிக்கைக் கோரிக்கை, அ.தி.மு.க. ஆட்சியில் காற்றில் கரைந்து போனது!

மின்வெட்டு இல்லாமல் பார்த்துக் கொண்டாரா ஜெ.

ஜெயலலிதா மேலும் பேசும்போது, "கோவை மாநகரம் தொழில் வளர்ச்சி நிறைந்த மாநகரம் என்பதைக் கருத்தில் கொண்டு சிறு குறு தொழில்களுக்கு மின் வெட்டு இல்லாமல் பார்த்துக் கொண்டேன்" என்றும் தெரிவித் திருக்கிறார். அவர் எவ்வாறு பார்த்துக் கொண் டார் என்பதை, ஆளுங்கட்சியை விழுந்து விழுந்து அன்றாடம் ஆதரிக்கும் "தினமணி" நாளேடு, 20-11-2013 அன்று, "கோவையில் எட்டு மணி நேர மின் வெட்டு - குறுந்தொழில் நிறுவனங்கள் பாதிப்பு"" என்ற தலைப்பிலே விரிவாக வெளியிட்டுள்ளது.

கலந்து கொள்ளாத அமைச்சர்

தமிழகத்திலே மின்பற்றாக்குறை இந்த நிலையில் இருக்கும்போது, இந்த மாதம் 9ஆம் தேதியன்று டெல்லியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் கலந்து கொண்டாரா என்றால் கலந்து கொள்ளவில்லை. இதைப் பற்றி இன்று வெளிவந்த செய்தியிலேகூட, மத்திய மின் நிலையங்களிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம், தமிழகத்தின் ஒதுக்கீடு குறைந்திருப்பதாகவும், ஆனால் நிரந்தரத் தீர்வுக்கு மின் வாரிய அதிகாரிகள் முயற்சிக்க வில்லை என்றும், டெல்லி மாநாட்டில் தமிழக அமைச்சர் கடந்த 9ஆம் தேதி கலந்துகொண்டு, இந்தப் பிரச்சினையை எழுப்பியிருந்தால் இது போன்ற பிரச்சினைகளையெல்லாம் பேசித் தீர்வு கிடைத் திருக்குமென்றும், ஆனால் அமைச்சர் போகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு ஒரு கட்சி ஆளுங்கட்சியாக இருந்து, அந்தக் கட்சியின் அமைச்சர் ஒருவர், இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில், மத்திய அரசின் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என்றால் முதலமைச்சர் ஜெயலலிதா எப்படியெல்லாம் ஏசியும், எள்ளி நகையாடியும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்னும் பாணியில் அறிக்கை விடுத்திருப்பார்?

அறிவித்து 2 ஆண்டுகள் ஓடி விட்டன

சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் தமிழ்நாடு முன்னிலை யில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மூன்றாண்டுகளில் 3000 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யப் போவதாக'' ஜெயலலிதா அறிவித்தார். தமிழக அரசு, சூரிய சக்தி மூலம், 2013இல் 1000 மெகாவாட், 2014இல் 1000 மெகாவாட், 2015இல் 1000 மெகாவாட் என்று மூன்றாண்டுகளுக்குள் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் போவதாகப் பேரவையில் சொன்னார்கள். அறிவிப்பு செய்து இரண்டாண்டுகள் ஓடி விட்டன. தற்போது என்ன நிலை? 2012 இல் 52 முதலீட் டாளர்களிடமிருந்து 708 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவெடுத்து, அதை வாங்க மின் வாரிய அதிகாரிகள் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதிக்காக விண்ணப் பிக்கிறார்கள். சூரிய சக்தி மின்சாரத்தை வாங்குவதற்கான விரிவான கட்டண ஆணையை, கடந்த வெள்ளிக்கிழமைதான் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

சோக வரலாறு

அதில், சூரிய சக்தி மின் உற்பத்தியாளரிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரம் 7.01 ரூபாய்க்கு வாங்க மின் வாரியத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த விலை தேசிய அளவில் 9.30 ரூபாய்க்கு மேல் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் நிர்ணயம் செய்துள்ள விலை குறைவு என்று கூறி முதலீட்டாளர்கள், மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் முறையிட முடிவு செய்திருக்கிறார்களாம். மேலும் ஏற்கனவே மின்வாரியம் 52 முதலீட்டாளர்களிடமிருந்து 708 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய அனுமதி கோரியிருந்தார்கள் அல்லவா; அந்த அனுமதி யையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மறுத்ததுடன், அந்த மனுவையும் ரத்து செய்து15-9-2014 அன்று உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதான் ஜெயலலிதா வின் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தின் சோகமான வரலாறு.

காற்றாலை மின்சாரத்தின் கதி என்ன ...

சூரிய மின் உற்பத்தியின் கதிதான் இது என்றால், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் கதி என்ன தெரியுமா? தமிழகத் தில் தென்மேற்குப் பருவக் காற்று கடந்த மே மாதத்திலே தொடங்கியதால், காற்றாலை மின் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 2,500 மெகாவாட்டாக உள்ளது. காற்றாலைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 3,400 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தமிழக மின் வாரியத்தின் செயற்கை யான கட்டுப்பாடுகளால் சுமார் 20 சதவிகிதக் காற்றாலைகள் இயங்காமல் உள்ளன. ஒரு யூனிட் மின்சாரம் தற்போது ரூ.3.39 வுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், சில ஆண்டுக ளாக அரசு கடைப்பிடித்து வரும் விதிமுறைகளால் ஓரிரு காற்றாலைகளை இயக்கி வரும் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் 1,400 பேர் இருக்கிறார்கள். இவர்களின் பிரதிநிதிகளை அழைத்து அரசு பேச வேண்டும். தற்போது இவர்களின் ஆலைகள் இயங்காமல் உள்ளன. மேலும் காற்றாலை நிறுவனங்கள் மின்சாரத்தை அரசுக்கு விற்றுவிட்டு, பணத்தைப் பெறுவதற் காக மாதக் கணக்கில் காத்துக் கொண்டிருக் கின்றன. தமிழக அரசு பல்வேறு செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில் எதையும் செய்யாமல் இருக்கறது.

செப்டம்பருக்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்கள்

செப்டம்பருக்குப் பிறகு காற்றாலைகள் மின் உற்பத்தியைச் செய்யாத நிலையில் தொழிலதிபர்கள் என்னதான் செய்யப் போகிறார்களோ என்ற கேள்விக் குறியோடு இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் இத்தனையையும் மறைத்துவிட்டு யாரோ எழுதிக் கொடுத்த ஏமாற்றுப் புள்ளி விவரங்களை கோவையில் படித்துவிட்டு வந்திருக்கிறார். மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதைப் போல, ஒருசில அதிகாரி கள் முதல் அமைச்சரிடம் தவறான விவரங்களை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா கூறுவதை, இத்தனைக் காலமும் நம்பிக் காத்திருந்தது போதும் என, இனியும் நம்புவதற்குத் தமிழ் நாட்டு மக்கள்தான் தயாராக இல்லை! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK chief Karunanidhi has questioned CM Jayalalitha's claim on power issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X