For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நானா அரை வேக்காடு?.. கருணாநிதி கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: ஆத்திரத்தில் அரைவேக்காட்டு அறிக்கை வெளியிடுவது ஜெயலலிதாவா, நானா என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கேரளாவில் உள்ள அணைகள் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான விவகாரத்தில் முதல்வர் வெளியிட்டிருந்த அறிக்கைக்கப் பதிலளிக்கையில் இப்படிக் கூறியுள்ளார் கருணாநிதி.

இதுதொடர்பாக கருணாநிதி நேற்று கட்சியினருக்கு வெளியிட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உம்மன் சாண்டி பேச்சு

உம்மன் சாண்டி பேச்சு

27-6-2014 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில், கேரள மாநில சட்டப் பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சர் உம்மன் சாண்டி, "முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், திருணக்கடவு மற்றும் பெருவாரிப் பள்ளம் ஆகிய நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை. 2009ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டிற்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நான்கு அணைகளும் கேரளாவுக்கே

நான்கு அணைகளும் கேரளாவுக்கே

ஆனால் கேரளா அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது" என்று பேரவையிலேயே அறிவித்ததையும் குறிப்பிட்டு; "நதிநீர் சம்பந்தமாகத் தமிழ்நாட்டின் உரிமைகளை நான்தான் நிலைநாட்டி வருகிறேன்" என்று சொல்லி வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா; இந்த நான்கு அணைகளும் கேரளத்திற்குச் சொந்தம் என்று உம்மன் சாண்டி உரிமை கொண்டாடுகிறாரே, அந்த உரிமை யாரால் நிலைநாட்டப்பட்டது?'' என்று கேள்வி எழுப்பியிருந்தேன்.

என்ன சொல்லியிருக்க வேண்டும்

என்ன சொல்லியிருக்க வேண்டும்

இந்தக் கேள்விக்கு ஜெயலலிதா என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்? கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி அறிவித் திருப்பது முற்றிலும் தவறானது என்று சொல்லி அவரது அறிவிப்பினைக் கண்டித்திருக்க வேண்டும் அல்லது கேரள முதலமைச்சர் செய்திருக்கும் அறிவிப்பினைப் பற்றி தமிழக அரசு மேற்கொண்ட அல்லது மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளைப் பற்றி விளக்கி இருக்க வேண்டும்.

அப்படிச் சொல்லாமல்…

அப்படிச் சொல்லாமல்…

இப்படி ஆக்கப்பூர்வமான பதிலை அளிக்காமல்; முக்கியமான இந்தப் பிரச்சினையில் தமிழக மக்களுக்கு விளக்கம் அளித்திட வேண்டிய முதலமைச்சர் ஜெயலலிதா, பிரச்சினையை நாட்டு மக்களுடைய கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக என்மீது எரிச்சலையும் கோபத்தையும் கொட்டியிருக்கிறார்.

ஈரைப் பேனாக்கி.. பேனைப் பெருமாளாக்கி

ஈரைப் பேனாக்கி.. பேனைப் பெருமாளாக்கி

"ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும்" முயற்சியில் நான் ஈடுபட்டிருப்பதாகவும், "ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு" என்றும், "அரை வேக்காட்டு அறிக்கை" என்றும் அவருக்கே உரிய அரசியல் பண்பாட்டையொட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அச்சத்தின் காரணமாக வெளியிடாத பத்திரிகைகள்

அச்சத்தின் காரணமாக வெளியிடாத பத்திரிகைகள்

என்னுடைய அறிக்கையை அச்சத்தின் காரணமாக வெளியிடாத தமிழ்நாட்டின் சில பத்திரிகைகள், ஜெயலலிதாவின் பதில் அறிக்கையை மட்டும் அவரைக் குளிர்விப்பதற்காகப் பெரிதாக வெளியிட்டிருக்கின்றன.

பத்திரிக்கா தர்மம் கொடி கட்டிப் பறக்கிறது

பத்திரிக்கா தர்மம் கொடி கட்டிப் பறக்கிறது

பத்திரிகா தர்மம் தமிழகத்தில் கொடிக்கட்டிப் பறப்பதை பாரினில் அனைவரும் பார்த்து ரசிக்கிறார்கள்! 2009ஆம் ஆண்டின் பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றும்; 2012ஆம் ஆண்டின் பதிவேட்டில் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை குறித்த விவரங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டன என்றும்; எனினும் பின் குறிப்பில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்றும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளார்.

2012ல் அவர்தானே முதல்வர்…

2012ல் அவர்தானே முதல்வர்…

2012ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதாதானே பொறுப்பு வகித்தார்? தேசியப் பதிவேட்டில் இந்த நான்கு அணை களும் 2012ஆம் ஆண்டு கேரள மாநில அணை களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஜெயலலிதா குரல் கொடுத்திருக்க வேண்டாமா? இதுகுறித்து மத்திய அரசுக்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருக்க வேண்டாமா?

ஆட்சியில் இருப்பவர்களுக்குத்தானே தெரியும்

ஆட்சியில் இருப்பவர்களுக்குத்தானே தெரியும்

ஆட்சியில் இருப்பவர்களுக்குத் தானே தேசியப் பதிவேட்டின் விவரங்கள் அனைத்தும் தெரியும். ஆனால், எதிர்க்கட்சியில் இருக்கும் என்னைப் பார்த்து 2012ஆம் ஆண்டில் ஏன் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று கேட்டால்; அப்படிக் கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பின்குறிப்பைக் காட்டுகிறார் ஜெ.

பின்குறிப்பைக் காட்டுகிறார் ஜெ.

அ.தி.மு.க. அரசின் வற்புறுத்தலின் பேரில், 2013ஆம் ஆண்டு தேசியப் பதிவேட்டில்"இந்த நான்கு அணைகளும் தமிழ்நாடு பொதுப்பணித் துறையினரால் இயக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன" என்று பின்குறிப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார்.

உண்மை என்னவென்றால்…

உண்மை என்னவென்றால்…

ஆனால் 2009ஆம் ஆண்டும், 2012ஆம் ஆண்டும், 2013ஆம் ஆண்டு பின்குறிப்பில் குறிப்பிட்டிருந்ததைப் போலவே, "நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன" என்று குறிப்பிடப்பட்டிருந்தாக ஜெயலலிதாவே தன்னுடைய அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். உண்மை நிலை இப்படியென்றால், 2013ஆம் ஆண்டு பின் குறிப்பில் தெளிவாக்கப்பட்டது அ.தி.மு.க. அரசின் வற்புறுத்தலினால்தான் என்று ஜெயலலிதா உரிமை கொண்டாடிப் பெருமைப்பட்டுக் கொள்வதில் எந்தவிதப் பொருளும் இல்லை என்பதை அவருடைய அறிக்கையே காட்டிக் கொடுத்து விட்டது.

எனக்கு எப்படிப் பொருந்தும்

எனக்கு எப்படிப் பொருந்தும்

"பெரியாறு அணை தமிழ்நாட்டிற்குச் சொந்தம்" என்று சொன்னது உச்ச நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயல் என்றெல்லாம் ஜெயலலிதா குறிப்பிட்டிருப்பது, கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவர்களின் அறிவிப்புக்குத் தான் பொருந்துமே தவிர, அதை எடுத்துச் சொன்ன எனக்கு எப்படிப் பொருந்தும்?

எனக்கே பூச்சாண்டியா…

எனக்கே பூச்சாண்டியா…

சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து பெங்களூரு தனி நீதிமன்றத்தையே சதா சர்வகாலமும் நினைத்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, நீதிமன்ற அவமதிப்பு என்று எனக்குப் "பூச்சாண்டி" காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

என் மீது பாய்ந்து பிறாண்டி…

என் மீது பாய்ந்து பிறாண்டி…

கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி சட்டப்பேரவையிலே அறிவித்ததைத் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக என்மீது பாய்ந்து பிறாண்டி இருக்கும் ஜெயலலிதா; தன்னுடைய அநாகரீகமான அணுகுமுறையைத் திருத்திக் கொண்டு, இனியாவது முறையான முயற்சிகளின் மூலம் தேசியப் பதிவேட்டில் இந்த நான்கு அணை களும் தமிழகத்திற்குச் சொந்தமானவையே என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு

"பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்கு பணத்துக்குப் பத்து என்றானாம்" என்ற பழமொழியின் பாணியில், ஜெயலலிதா மாநில நிர்வாகத்தை நடத்த நினைப்பது, தமிழக மக்களுக்கு எந்த வகையிலும் நன்மையைத் தராது.

தீர்ப்பைக் குறிப்பிடுகிறார் ஜெ.

தீர்ப்பைக் குறிப்பிடுகிறார் ஜெ.

கேரளத்தின் பம்பை, அச்சன்கோவில் ஆறுகளை தமிழகத்தின் வைப்பாறுடன் இணைப்பது பற்றி கேரள சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தை என்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை தனது பதில் அறிக்கையிலே ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.

மறந்து விட மாட்டார்கள்

மறந்து விட மாட்டார்கள்

உச்சநீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பே கழக வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் 1983இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து; மேல்முறையீட்டினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததன் விளைவாகத்தான் வந்தது என்பதை ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையிலே மறைத்து விட்டாலும், நதிநீர் இணைப்பு குறித்து அறிந்தவர்கள் மறந்துவிட மாட்டார்கள்.

எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக

எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக

என்னுடைய அறிக்கைக்கு நேரடியாகப் பதில் சொல்ல இயலாத நிலையில், சுற்றி வளைத்து எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக, "நதிநீர் இணைப்பு பற்றி பிரதமரிடம் நேரில் வலியுறுத்தி உள்ளேன்" என்று ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையிலே பொத்தாம் பொதுவாகச் சொல்லியிருக்கிறார். ஏதோ நதிநீர் இணைப்பு குறித்து இவர்தான் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு முதன்முதலில் நடவடிக்கை எடுத்த வரைப் போல ஜெயலலிதா தன்னுடைய அறிக் கையிலே பெரிதுபடுத்திச் சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மை நிலை என்ன?

திமுக நிதி நிலை அறிக்கையிலேயே

திமுக நிதி நிலை அறிக்கையிலேயே

தி.மு.கழக ஆட்சியின்போது 2007- 2008 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலேயே, "இந்தி யாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் ஒற்றுமைக்கும் ஒருமைப் பாட்டிற்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைகள் உருவாவதைத் தடுத்திட முதலில் தீபகற்ப நதிகளையாவது இணைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை அவசர அவசியம் கருதி, உடனடியாக நிறை வேற்றும் பணி மத்திய அரசால் தொடங்கப் பெற இந்த அரசு தொடர்ந்து தீவிர முயற்சி மேற் கொள்ளும்" என்று சுட்டிக்காட்டியதையொட்டி, நதிநீர் இணைப்பு பற்றி, மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் கவனத்தையும் ஈர்த்திடும் வகையில், தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்திலும் நான் விரிவாக எடுத்துரைத்திருக்கிறேன்.

அறிவித்ததோடு நில்லாமல்

அறிவித்ததோடு நில்லாமல்

நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததோடு நில்லாமல், வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்கும், வெள்ள நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து, வறட்சிப் பகுதி களுக்கு நீரை எடுத்துச் செல்வதற்கும், மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் மேற் கொள்ளப்பட்டது.

ரூ. 189 கோடியில்

ரூ. 189 கோடியில்

திருச்சிக்கு அருகே மாயனூரில் உபரி நீரை வறண்ட மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் கீழ், காவிரியின் குறுக்கே கட்டளையில் கதவணை கட்டும் பணிகள் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.

ரூ. 369 கோடி திட்டம்

ரூ. 369 கோடி திட்டம்

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக 369 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. பெண்ணை யாற்றுடன் செய்யாற்றை இணைக்கும் திட்டத்திற்கு 174 கோடி ரூபாய்க்கான கருத்துரு மத்திய அரசின் நீர்க் குழுமத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

இப்போது வாய் கிழியப் பேசும் ஜெ

இப்போது வாய் கிழியப் பேசும் ஜெ

நதிநீர் இணைப்பு பற்றி இப்போது வாய்கிழியப் பேசும் ஜெயலலிதா, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான பணிகளையும், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கான பணிகளையும் கழக ஆட்சிக் காலத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து நிறைவேற்றிட, அ.தி.மு.க. ஆட்சியில் என்ன முயற்சி எடுக்கப்பட்டது என்பதை ஜெயலலிதா விளக்க முன் வருவாரா?

இப்ப சொல்லுங்க யார் அரை வேக்காடு…

இப்ப சொல்லுங்க யார் அரை வேக்காடு…

ஆத்திரத்தில் அரைவேக்காட்டு அறிக்கை வெளியிடுவது ஜெயலலிதாவா, நானா என்பதை தமிழக மக்கள் இப்போதாவது புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

English summary
DMK chief Karunanidhi has questioned the CM Jayalalitha's claims in river water issues with Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X