For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பவானி சிங்... ஆழமாக பொதிந்துள்ள உண்மைகள்.. கருணாநிதியின் 'தொடர் கதை பாகம் 4'

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து தொடர்கதை போல எழுதி வரும் கடிதத்தின் 4வது அத்தியாயத்தை வெளியிட்டுள்ளார்.

கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள இந்த 4வது கடிதத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் மேலும் பல விவரங்களை தொகுத்துள்ளார்.

கருணாநிதியின் தொடர்கதையின் 4வது அத்தியாயம்...

பவானி சிங்கே தொடர்ந்து நடத்தலாம்

பவானி சிங்கே தொடர்ந்து நடத்தலாம்

உடன்பிறப்பே,அரசு வழக்கறிஞரான பவானி சிங் அவர்களை கர்நாடக மாநில அரசே மாற்றிய நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி, திரு. சவுஹான் அவர்கள் இந்த வழக்கினை பவானி சிங் அவர்களே தொடர்ந்து அரசு சார்பில் நடத்தலாம் என்று முடிவு செய்தார்.

ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட வேண்டியவர்

ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட வேண்டியவர்

பெங்களூரில் நடைபெறும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா தரப்பினருக்கு எதிராக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞர்தான் பவானி சிங். இவருக்கு முன்பு இந்தப் பதவியில் வழக்கறிஞர் ஆச்சார்யா என்பவர் இருந்து, மிகவும் திறம்பட அரசுக்காக வாதாடி வந்தார். அவரை அந்தப் பதவியி லிருந்து நீக்கியதே கொடுமையான ஒரு சம்பவம். அவருக்குப் பல வழிகளிலும் தொந்தரவுகளைக் கொடுத்ததால், அவரே மனம் வெதும்பி 17-1-2013 அன்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆச்சார்யா இருந்தபோது

ஆச்சார்யா இருந்தபோது

ஆச்சார்யா அரசு வழக்கறிஞராக இருந்தபோது, அவர் மீது ஜெயலலிதா தரப்பில் இட்டுக்கட்டிப் பல புகார்கள் சொல்லப்பட்டதுடன், அங்கே பா.ஜ.க. ஆட்சி இருந்த போது, சென்னையிலிருந்து அதிகார பலம் மிக்க ஒரு குழு, பெங்களூர் சென்று, முகாமிட்டு செல்வாக்கு வேலைகளைச் செய்ததின் விளைவாக, கனத்த மனதுடன், வெளிப்படையாக தனது மனச் சங்கடத்தைத் தெரிவித்து விட்டு இந்த வழக்கிலிருந்தே தன்னை விடுவித்துக் கொண்டார். சிறப்பு அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய பி.வி. ஆச்சார்யா பதவி விலகல் கடிதத்தை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பிய போது, தலைமை நீதிபதியாக இருந்த விக்ரமஜித் சென் அவர்கள் அந்தப் பதவி விலகலை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தத் தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்ற பிறகு, இடைக் காலத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றவர் ஸ்ரீதர் ராவ். அவர் ஆச்சார்யா அவர்களின் பதவி விலகலை உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

அவருடைய இடத்திற்கு வந்த பவானி சிங்

அவருடைய இடத்திற்கு வந்த பவானி சிங்

ஆச்சார்யா அவர்கள் விலகிய பின், அவருடைய இடத்திற்கு கர்நாடக அரசால் அரசு வழக்கறிஞராக, ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடுவதற்காக நியமிக்கப்பட்டவர்தான் பவானி சிங். ஆனால் அவரது அணுகுமுறைகளும், நடைமுறைகளும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே இருந்து வந்தன. ஜெயலலிதாவின் சாட்சியங்களை விசாரித்து முடிந்ததற்குப் பின் அரசு வழக்கறிஞர் தான் முறைப்படி தன் வாதங்களை எடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி. குமார் தன்னுடைய வாதங்களை எடுத்து வைக்கத் தொடங்கிய போது, அதை ஆட்சேபித்திருக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் பவானி சிங் அதைக் கண்டு கொள்ளாமலேயே இருந்து விட்டார்.

முக்கிய விவரத்தைக் குறிப்பிட்ட வாகனவதி

முக்கிய விவரத்தைக் குறிப்பிட்ட வாகனவதி

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, கர்நாடக அரசுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் வாகனவதி; "பவானி சிங் அவர்களை, அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டுமென்று கர்நாடக அரசு பரிந்துரையே செய்யவில்லை" என்றும், "கர்நாடக அரசு வேறு நான்கு வழக்கறிஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களிலே ஒருவரை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமித்துக் கொள்ளலாம்" என்றும் பரிந்துரை செய்த மிக முக்கியமான விவரத்தைக் குறிப்பிட்டார் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட பவானி சிங்

தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட பவானி சிங்

அப்போது கர்நாடக மாநிலத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பு நீதிபதி ஒருவர் இருந்தார். அவர்தான் இந்த வழக்கில் ஏற்கனவே அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா அவர்களின் பதவி விலகலை உடனடியாக ஏற்றுக் கொண்டார். ஆனால் பொறுப்பு தலைமை நீதிபதி, கர்நாடக அரசு ஏற்கனவே பரிந்துரை செய்த நான்கு வழக்கறிஞர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்காமல், தன்னிச்சையாக இந்த பவானி சிங் என்பவரை அரசு வழக்கறிஞராக நியமித்தார்.

நல்லம்மநாயுடுவுக்குப் பின்

நல்லம்மநாயுடுவுக்குப் பின்

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடுவுக்குப் பிறகு, அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டு, இதனை விசாரித்த டி.எஸ்.பி. சம்பந்தம் என்பவர்தான், சட்டப்படி ஆற்றிட வேண்டிய கடமையை மறந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போதும் அரசு வழக் கறிஞர் பவானி சிங் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு விசாரணை அதிகாரியை அதே வழக்கில் சாட்சியாகப் பதிவு செய்ய வேண்டுமென்றால், நீதிமன்றம்தான் அவரை "சம்மன்" செய்து அழைக்க வேண்டும்.

நடைமுறை பின்பற்றப்படவில்லை

நடைமுறை பின்பற்றப்படவில்லை

அந்தக் குறைந்தபட்ச சட்ட நடைமுறை கூட இந்த வழக்கிலே பின்பற்றப்படவில்லை. கடைசி சாட்சியாக (99வது சாட்சி) டி.எஸ்.பி. சம்பந்தத்தை ரகசியமாகக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கச் செய்தார்கள். லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த இந்த அதிகாரி, அரசு அதிகாரி என்ற முறையில் ஆற்ற வேண்டிய அடிப்படைக் கடமையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சாட்சியாக விசாரிக் கப்பட்டு, சாட்சி ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குறிப்பிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2 மாத கால அவகாசம் கேட்டார்

2 மாத கால அவகாசம் கேட்டார்

பவானி சிங் பொறுப்பேற்றவுடன் அரசுத் தரப்பு சாட்சிகள் 259 பேரின் சாட்சிய விபரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆவண சாட்சியங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள இரண்டு மாதம் அவகாசம் வேண்டுமென்று கோரி 28-2-2013 அன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது சிறப்பு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அவர் கேட்ட அவகாசமும் தரப்படவில்லை. அதற்காக அவர் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவே இல்லை.

சட்டத்திற்குப் புறம்பான காரியங்கள்

சட்டத்திற்குப் புறம்பான காரியங்கள்

சட்டத்திற்குப் புறம்பான இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் கண்டபிறகு தான், இந்த வழக்கில் அரசுத் தரப்புடன் இணைந்து, ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட எங்களை அனுமதிக்க வேண்டுமென்று கோரி சிறப்பு நீதிமன்றத்தில் தி.மு. கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணா எழுத்துப்பூர்வமாக உங்கள் கருத்துகளை எழுதித் தாக்கல் செய்யலாமே தவிர, வாதாட அனுமதியில்லை என்று தெரிவித்து விட்டார்.

கைப்பற்றப்பட்ட நகைகள்

கைப்பற்றப்பட்ட நகைகள்

இந்த முக்கியமான வழக்கின் சான்றாவணங்களாக உள்ள கைப்பற்றப்பட்ட நகைகள் சென்னை ரிசர்வ் வங்கியின் கருவூலத்தில் உள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையின் போது, அந்தச் சொத்துக்களான நகைகள் எல்லாம் நீதிமன்றத்தின் பொறுப் பிற்குக் கொண்டுவரப்பட வேண்டும். இறுதி வாதம் நடைபெறுவதற்கு முன்பாக, அந்த நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பது பற்றி சிறப்பு நீதிமன்றம் எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அந்த நகைகளைக் கொண்டு வந்து விசாரணை நடத்து வதற்கு முன்பாகவே, இந்த வழக்கில் தீர்ப்பளித்து விட வேண்டுமென்று நீதிபதி பாலகிருஷ்ணா அவசரப்பட்டது, அவர் தன் பதவி ஓய்வுக்கு முன்பாகவே தீர்ப்பளித்திட வேண்டும் என்ற எண்ணத்தி னால்தான் போலும்! நகைகளை நீதிமன்றத்திற்கே கொண்டு வந்து பார்வையிடாமல், இந்த வழக்கில் தீர்ப்பளிக்க முடியாது.

ஜெ. தொடுத்த வழக்கு

ஜெ. தொடுத்த வழக்கு

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக, தான் குறிப்பிடுகின்ற நீதிபதிதான் இருக்க வேண்டுமென்று ஜெயலலிதா தரப்பினர் தொடுத்த வழக்கில், கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகும், அதைப்பற்றி ஜெயலலிதா தரப்பினர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் இரண்டு வாரம் அவகாசம் கொடுத்தது.

விலகிய நீதிபதி

விலகிய நீதிபதி

15-11-2013 அன்று இதற்குப் பதிலளித்த கர்நாடக அரசு, "பாலகிருஷ்ணாவின் பதவிக் காலத்தை நீட்டிப்பு செய்வது குறித்துப் பரிசீலிக்கும்படி கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு தெரிவித்து, உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30 அன்று உத்தரவு பிறப்பித்தது. அதேநாளில் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு பாலகிருஷ்ணா எழுதிய கடிதத்தில்; தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் தொடர்ந்து தனி நீதிபதியாகப் பணியாற்ற முடியாது என்றும், செப்டம்பர் 30 அன்றே தன்னை விடுவிக்கும்படியும் கேட்டிருந்தார். அவ்வாறே அவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

முடி கவுடர்

முடி கவுடர்

இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக முடிகவுடரை தனி நீதிபதியாகப் பொறுப்பேற்க நியமிக்குமாறு, உயர்நீதி மன்றத்திலிருந்து ஆணை பெறப்பட்டு, அக்டோபர் 3 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அக்டோபர் 9 அன்று, பாலகிருஷ்ணாவைத் தொடர்ந்து, தனி நீதிபதியாக, மாவட்ட நீதிபதி ஒருவரை நியமனம் செய்வது தொடர்பாக உயர்நீதிமன்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மைக்கேல் குன்ஹா வந்தார்

மைக்கேல் குன்ஹா வந்தார்

பதவியில் தொடர பாலகிருஷ்ணாவுக்கு விருப்பமில்லாததால், அக்டோபர் 28 அன்று நடைபெற்ற முழு நீதிமன்றக் கூட்டம், பதவியில் உள்ள ஒரு நீதிபதியை நியமிக்குமாறு நிர்வாகக் குழுவைக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், 2013 அக்டோபர் 29 அன்று சொத்துக் குவிப்பு வழக்கில் வழக்கு விசாரணையை நடத்த ஜான் மைக்கேல் -குன்ஹா அவர்களைத் தனி நீதிபதியாக நியமிக்க நிர்வாகக் குழு முடிவு செய்தது. இதற்கான அறிக்கை 2013 அக்டோபர் 31 அன்று வெளியிடப்பட்டு, நவம்பர் 7 அன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். எனவே ஜெயலலிதா தரப்பினர் தாக்கல் செய்துள்ள மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றம் கேட்ட கருத்து

உச்சநீதிமன்றம் கேட்ட கருத்து

கர்நாடக அரசு இவ்வாறு தெரிவித்த நிலையில், இதுபற்றி ஜெயலலிதா தரப்பினரின் கருத்தை உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேட்டனர். அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாஃப்டே, "கர்நாடக அரசின் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும்" என்று கூறினார். அதையும் ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதா தரப்பினர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்கள்.

பவானி சிங்கே நீடிக்கிறார்

பவானி சிங்கே நீடிக்கிறார்

குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினருக்கு ஆதரவாகவும், அரசு தொடுத்துள்ள வழக்குக்குப் பாதகமாகவும் பவானி சிங், எந்தெந்த வகையில் நடந்து கொண்டார் என்பதற்கான பல சான்றுகளும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும், இறுதியில் ஜெயலலிதா தரப்பினரின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவரே அரசாங்க வழக்கறிஞராக நீடிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு பவானி சிங்கே நீடித்து வருகிறார்.

ஆழமாக பொதிந்துள்ள உண்மைகள்

ஆழமாக பொதிந்துள்ள உண்மைகள்

யார் அரசாங்க வழக்கறிஞராகத் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்று குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் கேட்கப்பட்டதோ, அதே அரசாங்க வழக்கறிஞர் பவானி சிங் தான் பிறகு தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், தன்னால் வாதாட இயலவில்லை என்றும், வழக்கினை ஒத்தி வைக்க வேண்டுமென்றும் கோரியிருக்கிறார் என்றால், அதிலே ஆழமாகப் பொதிந்துள்ள உண்மையை அனைவராலும் புரிந்து கொள்ள முடிகிறதா? இல்லையா?

கண் வலி.. மூட்டு வலி.. நீரிழிவு

கண் வலி.. மூட்டு வலி.. நீரிழிவு

27-1-2014 அன்று நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத் திற்கு நேரில் ஆஜராகாமல் இருப்பதற்காக விலக்களிக்க வேண்டுமென்று கோரி, அவர்களுடைய வழக்கறிஞர்கள் நீதிபதியின் முன்னால் மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள். அதில் ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருப்பதால் அரசுப் பணி இருப்பதாகவும், சசிகலாவுக்கு கண் வலி இருப்பதாகவும், சுதாகரனுக்கு மூட்டு வலி இருப்பதாகவும், இளவரசிக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், அதனால் நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை என்றும் குறிப்பிட் டிருக்கிறார்கள். இதற்கு கழக வழக்கறிஞர், தாமரைச்செல்வன் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இதற்கு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டிய எதிர் தரப்பு வழக்கறிஞர், அதாவது அரசு வழக்கறிஞர் எந்த விதமான ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என்பது மற்றொரு விந்தை.

அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆட்சேபணை தெரிவிக்காத காரணத்தால், நீதிபதி அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அப்போதுகூட நீதிபதி, "நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்குக் கோரும் மனுவில் உரிய மருத்துவச் சான்றிதழ்கள் இணைக்கப்படவில்லை. இருப்பினும் இந்த முறை மட்டும் இம்மனுக்களை ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

இப்படி ஒரு கோரிக்கை ஏன்...

இப்படி ஒரு கோரிக்கை ஏன்...

அடுத்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர், தங்கள் கட்சிக்காரர்களின் வீடுகளில் சோதனை செய்த போது கைப்பற்றப்பட்ட பொருள்களில் வழக்குக்குத் தொடர்பில்லாதவற்றை திரும்பக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஒரு மனுவினை புதிதாக தாக்கல் செய்தார். வழக்கு முடிவடையும் கட்டத்தில் இருக்கிற போது, இவ்வளவு நாட்களும் சும்மா இருந்து விட்டு திடீரென்று இப்படியொரு கோரிக்கையை குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் வைக்க வேண்டிய அவசியம் என்ன? எப்படியாவது வழக்கினைத் தாமதம் செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம் என்பது தெளிவாகிறதல்லவா?

வேண்டுமா.. வேண்டாமா

வேண்டுமா.. வேண்டாமா

கைப்பற்றப்பட்ட பொருள்களைத் திரும்பக் கொடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பதற்கு ஆட்சேப ணையைத் தெரிவிக்குமாறு நீதிபதி அரசு வழக்கறிஞரைக் கேட்டதற்கு, அரசு வழக்கறிஞர் இரண்டு வார காலம் அவகாசம் வேண்டும், 2 வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டார். (ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி, வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க எடுக்கப்படும் முயற்சி தெரிகிறதல்லவா?)

எதற்காக அவ்வளவு கால அவகாசம்

எதற்காக அவ்வளவு கால அவகாசம்

எதற்காக அவ்வளவு கால அவகாசம்? அதுவும், குற்றவாளிகள் பாணியில், அரசு வழக்கறிஞரே கேட்டார்! அதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ 2014, ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆட்சேபணை மனுவினைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்போதும் அரசு வழக்கறிஞர் தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்பதால் ஒரு வார கால அவகாசமாவது வேண்டுமென்று பிடிவாதமாகக் கேட்டபோது, நீதிபதி அதனை ஏற்காமல் நிராகரித்து விட்டார்.

முக்கியக் கேள்வி

முக்கியக் கேள்வி

அரசு வழக்கறிஞர் இவ்வாறு கால அவகாசம் கேட்டபோது, அதிருப்தி தெரிவித்த நீதிபதி, "இது குற்றவியல் நீதிமன்றமா அல்லது ஒத்திவைப்பு நீதி மன்றமா?" என்று முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார். மேலும் நீதிபதி அவர்கள், "இந்த வழக்கு விசாரணை கடந்த பதினைந்து ஆண்டு களாக நடந்து வருகிறது. விசாரணை நடந்த நாட்களைக் காட்டிலும், ஒத்தி வைக்கப்பட்ட நாட்கள்தான் அதிகம் இருந்துள்ளது. தனி நீதிமன்றம் மற்றும் தனி நீதிபதி நியமனம் செய்ததின் நோக்கம், விசாரணை தினமும் நடந்து விரைவில் வழக்கினை முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. இனியாவது வழக்கு தடையேதும் இல்லாமல் நடக்க வேண்டும்" என்றெல்லாம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கருத்து தெரிவித்திருக்கிறார்.

காலம் கடத்த முடியாது...

காலம் கடத்த முடியாது...

2014, ஜனவரி 20ஆம் தேதியன்று விசாரணை நடந்த போது, சென்னையிலிருந்து பெங்களூர் கொண்டு வரப்பட்ட அசையும் சொத்துக்கள் தொடர்பான அத்தனை விவரங்களையும், பரிசுப் பொருள்களின் பட்டியலையும் தங்களுக்கு வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்து, நீதிபதி அப்போது அதனைத் தள்ளுபடி செய்தார். மேலும் நீதிபதி அவர்கள், இந்த வழக்கை விரைந்து முடிக்க வசதியாக, வழக்கறிஞர்களின் இறுதி வாதம் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும், உச்சநீதிமன்ற உத்தர வின்படி தினமும் விசாரணை நடக்கும் என்றும், முதலில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்த பின், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்ய வேண்டும் என்றும், இறுதிக் கட்ட வாதம் தொடங்குவதை எந்த நிலையிலும் காலம் கடத்த முடியாது என்றும் தெரிவித்தார். ''

(தொடரும்)

English summary
DMK chief Karunanidhi has writter his 4th letter to his party cadres on Jaya case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X