For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயிகளின் தலையில் சுமையை ஏற்றுவதா?: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நெல் கொள்முதலுக்கு மாநில அரசுகள் நீண்ட காலமாக வழங்கி வரும் ஊக்கத்தொகையை இனிமேல் வழங்கக் கூடாதென்றும், அப்படி ஊக்கத்தொகை வழங்கி கொள்முதல் செய்தால் மானியம் வழங்கப்பட மாட்டாது என்ற மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

Karunanidhi urges centre to take back the cancellation of Paddy subsidy

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

நெல் கொள்முதலுக்கு மாநில அரசுகள் நீண்ட காலமாக வழங்கி வரும் ஊக்கத்தொகையை இனிமேல் வழங்கக் கூடாதென்றும், அப்படி ஊக்கத்தொகை வழங்கி கொள்முதல் செய்தால் மானியம் வழங்கப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்து, அந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

குறைந்த பட்ச ஆதரவு விலை

நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்து வழங்கி வருகிறது. எனினும், தமிழகம் போன்ற சில மாநிலங்கள் மத்திய அரசு அறிவிக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை விவசாயிகளை நிறைவு செய்யாது என்பதால், குறைந்த பட்ச விலையோடு கூடுதல் விலையை ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயித்து ஊக்கத்தொகை அளித்து விவசாயிகளுக்கு உதவி வருகிறது.

மானியம் கிடையாது

இந்த நிலையில் அண்மையில் மத்திய உணவு அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதில், "இந்திய உணவுக் கழகம் மூலம் சில மாநிலங்களில் உணவு தானியம் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்தக் கொள்முதல் குறைந்த பட்ச ஆதரவு விலையை விட அதிகமாக இருக்கக்கூடாது. உபரியாக இப்படிக் கொள்முதல் செய்யப்படும் மற்றும் வினியோகிக்கப்படும் உணவு தானியங்களுக்கு மானியம் வழங்கப்படமாட்டாது.

கூடுதல் விலைக்குக் கொள்முதல்

பரவலாக்கப்பட்ட கொள்முதல் அடிப்படையில் உணவு தானியங்களை வாங்கும் மாநிலங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலையை விட கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்யக்கூடாது. பொது விநியோகத் திட்டம் மற்றும் மக்கள் நலத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் கோதுமை, நெல்லுக்கு மட்டுமே மத்திய அரசு மானியம் வழங்கும். அதற்கு மேல் உபரியாகக் கொள்முதல் செய்யப்படும் தானியங்களுக்கு மானியம் வழங்காது.

இந்திய உணவுக்கழகம்

இந்த விதிமுறை 2014- 2015ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் துவங்கும் அக்டோபர் மாதத்திலிருந்தும் 2015--2016ஆம் ஆண்டுக்கான கோதுமை கொள்முதல் துவங்கும் அடுத்த ஏப்ரல் மாதத்திலிருந்தும் அமலுக்கு வருகிறது. இந்திய உணவுக் கழகம் இல்லாத மாநிலங்களில் அரசின் கொள்முதலுக்கும் இந்த விதி பொருந்தும்" என்று கூறப்பட்டுள்ளது.

குவிண்டாலுக்கு ரூ.1410

தமிழகத்தில் தற்போது சன்ன ரக நெல்லுக்கு மத்திய அரசின் விலையாக 1,340 ரூபாயும், மாநில அரசின் ஊக்கத் தொகையாக 70 ரூபாயும் சேர்த்து குவிண்டாலுக்கு 1,410 ரூபாய் என்றும், பொது ரக நெல்லுக்கு மத்திய அரசின் விலையாக 1,310 ரூபாயும், மாநில அரசு 50 ரூபாயும் சேர்த்து குவிண்டாலுக்கு 1,360 ரூபாய் வழங்கப்படுகிறது.

குவிண்டாலுக்கு ரூ.2500

இந்தத் தொகையே போதவில்லை என்றும், தேர்தல் அறிக்கையில் நான் தெரிவித்திருப்பதைப் போல குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வேண்டுமென்றும் விவசாயிகள் போராடி வருகின்ற நேரத்தில் மத்திய அரசு இப்படியொரு அறிவிப்பினைச் செய்திருப்பது கண்டு தமிழக விவசாயப் பெருமக்கள் பெரும் அதிர்ச்சி யடைந்திருக்கிறார்கள்.

கழுத்தை நெரிக்கும் கடன்

தமிழக விவசாயிகளைப் பொறுத்தவரை, தொடர்ந்து மூன்றாண்டுகளாகக் குறுவை பொய்த்துப்போனது, தேவையான நிவாரண உதவி கிடைக்காதது, கூட்டுறவுக் கடன் வழங்குவதில் உள்ள பாரபட்சம், கடன் வசூலில் கெடுபிடிகள் என ஏராளமான பிரச்சினைகள் கழுத்தை நெரிப்பதால், இதுவரை காணாத இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

பணவீக்கம்

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பல பயிர்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்கவும் இந்த முடிவு அறிவிக்கப்படுவதாக மத்திய அரசு காரணம் கூறுகிறது. பொதுத்துறை வங்கிகளால் 1,129 முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்டு; அதில் வாராக் கடன் மட்டுமே 54 ஆயிரம் கோடி ரூபாய் என்று இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ள நிலையில், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வேளாண் மானியத்தில் கை வைக்கிறோம் என்பது பொருந்தாக் கூற்றாக உள்ளது.

பல பயிர் சாகுபடிக்கு

மேலும் உணவுப் பயிர்ச் சாகுபடியைத் தவிர்த்து விட்டு, பல பயிர்ச் சாகுபடியை ஊக்குவித்ததால் சில நாடு களில் ஏற்பட்ட பின்னடைவு விளைவுகளைக் கண்ட பிறகும், பல பயிர்ச் சாகுபடியை ஊக்குவிப்போம் என்பது, வேளாண்மையை அடிப்படைத் தொழிலாகக் கொண்டுள்ள நமது நாட்டில் அபாயகரமான விளைவுகளையே ஏற்படுத்தி விடும் என்பதை உணர வேண்டும்.

உற்பத்திச் செலவு கூடுதல்

முறையாக உணவுப் பயிர்களின் சாகுபடியை ஊக்கப்படுத்தி விட்டு, அதற்கு அடுத்த கட்டமாக பல பயிர்ச் சாகுபடியை ஊக்குவிப்பதே நாட்டுக்கு நன்மை தரும் அணுகுமுறையாகும். வேளாண் இடுபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், உற்பத்தி செலவு கூடுதலாகிக் கொண்டே போகின்ற நிலையில், விளைபொருள்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மாநில அரசின் நிலைப்பாடு

தமிழக அரசு இதுவரை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கான இந்தப் பிரச்சினையில் மாநில அரசின் நிலைப்பாட்டைப் பற்றி வாய் திறக்காமல் உள்ளது. அதே நேரத்தில், மத்திய அரசு இப்படியொரு உத்தரவைப் பிறப்பித்து விவசாயிகளின் வேதனைகளைப் பன்மடங்கு பெருக்கி, அவர்களுடைய வெறுப்பைத் தேடிக்கொள்ளாமல், அந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
DMK chief Karunanidhi has urged the centre to withdraw the cancellation of paddy subsidy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X