For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன் கூட்டாளிகள் மீதான தீர்ப்பு: கருணாநிதி, வீரமணி பாராட்டு

Google Oneindia Tamil News

Karunanithi and Veeramani appreciates SC's judgement
சென்னை: வீரப்பன் கூட்டாளிகள் மீதான தீர்ப்பு மனித நேயம் நிறைந்த, வரலாற்று புகழ் மிக்க தீர்ப்பு என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உச்ச நீதிமன்றம் மனித நேயம் நிறைந்த, வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. சந்தனக்கடத்தல் வீரப்பன் வழக்கில் 7 பேருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனைகளை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். உச்ச நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏ.சைமன், எம்.பிலவேந்திரன், ஜே.ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகியோருக்கு, தண்டனையை தூக்குதண்டனையாக அதிகரித்து தீர்ப்பு கூறியது.

இந்த நான்கு பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்கள். அது காலதாமதத்தோடு நிராகரிக்கப்பட்டது. கருணை மனு மீதான முடிவை கால தாமதமாக எடுத்ததால், தண்டனையை குறைக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் "ரிட்" மனுவும், வழக்கை மீண்டும் விசாரிக்கக் கேட்டு, மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்தார்கள். இதில் உச்ச நீதிமன்றம் சீராய்வு மனுவினை தள்ளுபடி செய்தது. ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்பு சொன்ன பிறகு, மீண்டும் அந்த வழக்கை விசாரிப்பது முறையானதல்ல, முன் உதாரணமும் அல்ல என்று தலைமை நீதிபதி சதாசிவம் அப்போது தெரிவித்தார்.

இதற்கிடையே தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் தாக்கல் செய்த "ரிட்" மனு மீதான தீர்ப்புதான் உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகாய், சிவகீர்த்திசிங் ஆகியோர் இந்தத் தீர்ப்பினை கூறியுள்ளார்கள்.

நாடு முழுவதும், குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னரும், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் 15 தூக்கு தண்டனை கைதிகள் உள்ளார்கள். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 14 கைதிகளின் கருணை மனுக்கள் குடியரசு தலைவரின் பரிசீலனையிலே உள்ளன. தற்போது கூறப்பட்டுள்ள தீர்ப்பின் மூலமாக, கருணை மனு தாமதம் என்ற காரணத்தைக் கூறி, இதுபோன்ற மற்ற கைதிகளின் தண்டனையும் குறைக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் இடம் பெறும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் மூவரையும் விடுவிக்க வேண்டு மென்று தி.மு.க. உட்பட பலர் கோரி வருகின்றனர்.

உச்சநீதிமன்றம், என்னைப் போன்றவர்களின் உள்ளக்கிடக்கையை ஏற்கும் வகையில் இந்த வரலாற்று புகழ் மிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. இந்த தீர்ப்பினால் பயன்பெறுவோருக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் என் மகிழ்ச்சியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்வதோடு, இந்த தீர்ப்பினை அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கும், அவரோடு இணைந்து உதவி புரிந்த நீதிபதி அவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என இவ்வாறு கூறியிருக்கிறார்.

இதேபோல், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேர் (பிலேந்திரன், சைமன், மீசை மாதய்யா, ஞானப்பிரகாசம்) உள்பட, இந்தியா முழுவதிலும் உள்ள மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள் 13 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து நேற்று (21.1.2014) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகளின் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இந்த மனிதாபிமானத் தீர்ப்பு, நீதி தவறாது குற்றவாளிகளுக்கு மறுக்கப்பட்ட நியாயம் - நீதி மீண்டும் மீட்டெடுக்கப்பட்ட வரலாற்றுப் பெருமைமிக்க தீர்ப்பு என்பதால், தலைமை நீதிபதி மனிதநேயர் ஜஸ்டீஸ் ப.சதாசிவத்தையும், அவரது அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகளையும் உளம் உவந்து பாராட்டி மகிழ்கிறோம்!

''பத்து குற்றவாளிகள் தப்பித்தாலும்கூட, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது'' என்பதுதான் நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை என்பதால், பேரறிவாளன் உள்பட மற்றவர்களும் வெளியே வருவது அவசியமாகும்" என்று கூறியுள்ளார்.

English summary
The DMK president Karunanithi and Diravida Kazhagam cheif Veeramani has appreciated the SC's judgement on Veerappan associates case, for reducing the death sentence to life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X