For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: இன்று தீர்ப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: 94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். இந்த விபத்தில் 18 குழந்தைகள் பலத்த காயம் அடைந்தனர். தீவிர சிகிச்சைக்கு பின் அவர்கள் குணம் அடைந்தனர்.

Kumbakonam school fire case verdict on July 30

இந்த தீ விபத்து தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல்துறையினல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளி நிறுவனர் புலவர் பழனிசாமி, அவருடைய மனைவியும் பள்ளி தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, ஆகியோர் கைது செய்யப்பட்டனர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் அப்போதைய தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் பி.பழனிசாமி, ஆர்.பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், தாசில்தார் பரமசிவம், பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சியின் அப்போதைய ஆணையர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன், தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

488 சாட்சிகள்

இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முதலில் நடைபெற்றது. இந்த வழக்கில் 488 பேரை காவல்துறையினர் சாட்சிகளாக சேர்த்து இருந்தனர்.

3,126 பக்க குற்றப்பத்திரிகை

மேலும் 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்பு இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி மாற்றப்பட்டது.

மூவர் விடுதலை

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தார்.

உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

இதேபோல் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாலகிருஷ்ணன் தன்னையும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

2012ல் தொடங்கிய விசாரணை

இந்த தீ விபத்து நடந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் மொத்தம் 230 பேர் சாட்சியம் அளித்தனர்.

இரு தரப்பு வாதங்கள் நிறைவு

அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை கடந்த மார்ச் 28ஆம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அரசு தரப்பில் கூறப்பட்ட சாட்சியங்கள் குறித்து குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. பின்னர் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள், அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் நடைபெற்றது. 22 மாதங்களாக நடைபெற்று வந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு விசாரணை கடந்த 17ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

பத்தாண்டுகளுக்குப் பின் தீர்ப்பு

இந்த வழக்கின் தீர்ப்பை தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி இன்று வழங்க உள்ளார். இந்தியாவையே உலுக்கிய இந்த தீ விபத்து வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து ஏராளமானோர் நீதிமன்றத்திற்கு வருகைதருவார்கள் என்பதால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

English summary
A decade after a raging blaze snuffed out the lives of 94 children of a private school in Kumbakonam, the stage is now set for the judgment in the case. The District and Sessions Court at Thanjavur, where the trial was held, will deliver the verdict on July 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X