For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடைக்கானல்: கடும் நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு... சுற்றுலா பயணிகள் அவதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொடைக்கானல்: கொடைக்கானலில் விடிய விடிய பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் 10 இடங்களில் ராட்சத பாறை உருண்டு விழுந்துள்ளன.

நிலச்சரிவு காரணமாக சாலைகள் மண்ணுக்குள் புதைந்து போனதால் வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானல் தனித்தீவாக மாறியதால் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

Landslide

வடகிழக்குப் பருவமழை

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்குப் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. கொடைக்கானலில், கடந்த நான்கு நாள்களாக மழை பெய்தது. இதில் ஆங்காங்கே சிறு சிறு மண்சரிவு ஏற்பட்டது. ஞாயிறு இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தொடர்ச்சியாக கொடைக்கானலில் பலத்த மழை பெய்தது.

காட்டாற்று வெள்ளம்

அதனால், கொடைக்கானல் மலையில் உருவாகிய காட்டாறுகள், ஓடைகளில் வந்த மழை வெள்ளம் ஒன்றாகி பாறைகள் இடுக்குகளின் வழியாக அருவிகளாக சாலையில் விழுந்தன. அதனால், டம்டம் பாறை, பெருமாள் பாறை, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட காட் ரோட்டில் மண் அரிப்பு, நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலைகள் மண்ணுக்குள் புதைந்து, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

கடும் நிலச்சரிவு

டம்டம் பாறை புலிக்கோவில் அருகே 200 அடி தூரம் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலை மாயமானது. அதனால், கொடைக்கானலுக்கு நள்ளிரவு 1 மணி முதல் ஒட்டுமொத்த வாகனப் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. ரோட்டில் விழுந்த பெரிய பாறைகளால் ஆங்காங்கே சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மலைச்சாலை முழுவதும் ஆங்காங்கே புதிய நீரூற்றுகள், அருவிகள் ஓடுகின்றன.

வெள்ளத்தில்‘ஷூட்டிங்' வாகனம்

டம்டம் பாறை அருகே ஞாயிறு இரவு 12.15 மணிக்கு கன மழை பெய்தபோது, கொடைக்கானலில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு சமையல் செய்வதற்காக சென்னையில் இருந்து வேனில் இரு துணை நடிகர்கள், ஒரு பெண் சமையல்காரர், மூன்று ஷூட்டிங் உதவியாளர்கள் மற்றும் டிரைவர் உட்பட ஏழு பேர் வந்து கொண்டிருந்தனர். அப்போது மலையில் அருவி போல கொட்டிய மழை வெள்ளத்தில் சிக்கிய வேன் அரை கி.மீ. தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. வேனில் இருந்தவர்கள் அலறினர். நள்ளிரவு நேரம் என்பதால், அவர்களை காப்பாற்ற யாரும் இல்லை. அதிர்ஷ்டவசமாக அந்த வாகனம் சாலையோரத் தடுப்பு சுவர் மீது மோதி நின்றதால் அனைவரும் இறங்கித் தப்பினர்.

தீவாக மாறிய கொடைக்கானல்

வத்தலகுண்டிலிருந்து கொடைக்கானல் செல்ல இதுதான் பிரதான சாலை. இந்த சாலை வழி யாகத்தான் மதுரை, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து பஸ்கள், கார்களில் சுற்றுலாப் பயணிகள், கொடைக்கானல் வந்து செல்கின்றனர். இந்தச் சாலை துண்டிக்கப்பட்டதால் கொடைக்கானலில் தவிக்கும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் லாட்ஜ், ஹோட்டல் அறைகளில் முடங்கி உள்ளனர்.

தற்காலிக போக்குவரத்து

கொடைக்கானல் செல்வதற்கு வத்தலகுண்டு - கொடைக்கானல் சாலையை தவிர்த்து, திண்டுக்கல், சித்தரேவு, தாண்டிக்குடி, பண்ணைக்காடு வழியாகவும், பழநி வழியாகவும் இரு மலைச்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு துண்டிப்பு

பி.எஸ்.என்.எல். இன்டர்நெட் கேபிள் வயர்கள், மலைப்பகுதி செல்போன் டவர்கள் சேதமடைந்ததால் இன்டர்நெட், தொலைபேசி சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

மீட்புப் பணிகள்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாறை உருண்டு விழுந்த இடங்களில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பாறைகளை அப்புறப்படுத்தி, டம்டம் பாறையில் சாலை மண்ணுக்குள் புதைந்த இடத்தில் 10 ஆயிரம் மணல் மூட்டைகளை அடுக்கி பாதையை சீரமைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர்.

20 நாட்களாகும்

டம்டம் பாறை சாலையில் விழுந்த ராட்சத பாறை, மாயமான சாலைகளை புனரமைத்து போக்குவரத்தை மீண்டும் சீரமைக்க குறைந்தது 20 நாள்களுக்கு மேல் ஆகும் எனக் கூறப்படுகிறது.

பராமரிப்பு இல்லாத சாலை

‘கடந்த 15 ஆண்டுகளில் இப்பகுதியில் மட்டும் 13 முறை சாலை மண்ணுக்குள் புதைந்துள்ளது. மூன்று பாறைகள் உருண்டு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பட்ட பிறகு, இந்தச் சாலையை முழுமையாக பராமரிக்கவில்லை' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

English summary
Vehicular traffic on the busy Batlagundu-Kodaikanal road was affected on Monday following a landslide in heavy rain. According to the official sources, large stones rolled on to the road near Dum Dum Parai and blocked traffic. Removing the stones would take a few days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X