For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணா பிறந்த நாளன்று பூவிருந்தவல்லியில் மதிமுக மாநாடு- வைகோ அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் செப்டம்பர் 15ம்தேதி, அண்ணா பிறந்தநாள் விழாவும், மதிமுக மாநாடும் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் தலைமைத் தளகர்த்தராக உலவிய காஞ்சி தந்த பெருமகன் சுயமரியாதை யையும், தன்மானத்தையும் பகுத் தறிவு உணர்வுடன், படித்தவர் முதல் பாமரர் வரை புகட்டிய மறுமலர்ச்சி நாயகன், இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஜனநாயக ஒளியைப் பரவச் செய்த வித்தகராய் உயர்ந்தார். அவரால் வார்ப்பிக்கப்பட்டவர்கள் நாம். அதனால்தான் ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் நாளை தமிழர்களின் பொன்னாள் எனக் கொண்டாடி மகிழ்கிறோம்.

MDMK to celebrate Arigar Anna's birth anniversery on September 15

கட்சி பெயரில் மறுமலர்ச்சி

1994ல் நம் இயக்கத்துக்குப் பெயர் சூட்டும்போதே, அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் பெயருடன், காஞ்சி நகரில் அவர் அமைத்த மன்றத்தின் பெயரில் உள்ள மறுமலர்ச்சியை இணைத் தோம். கழகத்தின் கொடியை அமைக்கிறபோது, காலப்போக்கில்தான் நிர்மாணித்த இயக்கக் கொடியில் சிவப்பு வண்ணம் அதிகரிக்கும் என்பதனைக் காட்டும் விதத்தில் கழகப் பதாகையை வடிவமைத்தோம்.

இழப்புகளை ஏற்கிறோம்

அறிஞர் அண்ணாவின் இலட்சியங்களை வென்றெடுக்க நம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளோம் அதன் காரணமாகத்தான், தமிழ் ஈழ விடுதலையை நெஞ்சில் ஏந்தி போராடி வருகிறோம். அதனால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் அதிகம். ஆனால், மகிழ்வோடு மனநிறைவோடு ஏற்கிறோம்.

1994ல் முக்கடல் சந்திக்கும் கன்னியாகுமரியில் இருந்து, பல்லாயிரக்கணக்கான தோழர் களோடு 1600 கிலோ மீட்டர் தொலைவு, 51 நாட்கள் மேற் கொண்ட எழுச்சி நடைப் பயணத்தை செப்டம்பர் 15 அண்ணன் பிறந்த நாளில் தலைநகர் சென்னையில் நிறைவு செய்தோம். இதன்பிறகு ஆண்டுதோறும் பிரமாண்டமாக விழா எடுத்துவருகிறோம்.

தேர்தல் தோல்வியால் சாய்க்க முடியாது

தேர்தல் தோல்விகளும், சரிவுகளும் நாம் ஏற்கனவே சந்தித்தவைதான். கொள்கைகளையும், லட்சியங்களையும் உயிராகக் கொண்டு இயங்கும் ஓர் இயக்கத்தைத் தேர்தல் தோல்விகளால் சாய்த்து விட முடியாது. வைரம் பாய்ந்த வீறுகொண்ட நெஞ்சினர் லட்சக் கணக்கில் துளியளவும் சுயநலம் இன்றி உழைக்கின்றனர். இது தொண்டர்கள் கட்டிய மாளிகை. அதனைக் காப்பவர்களும் அவர்கள்தானே!

தேர்தலில் தோற்றது கவலைதான்

இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் உயர்நிலைக் குழுவினரும், மாவட்டச் செயலாளர்களும், கழக முன்னணியினரும் கழகத் தொண்டர்களினுடைய எண்ணங்களைப் பிரதிபலித்து வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று தேர்தலைச் சந்தித்தோம். நாம் வெல்வோம் என்ற நம்பிக்கை உங்களுக்கு மட்டும் அல்ல; நடுநிலையாளர்களுக்கும், நாட்டின் பல்வேறு தரப்பினருக்கும் கூட ஏற்பட்டது என்பது உண்மை யாகும். அதனால் தேர்தல் தோல்வி கண்மணிகளின் மனதில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியதும் உண்மைதான்.

போராட்டக்காரனுக்கு தோல்வியில்லை

ஆனால், விழுந்ததைவிட வேகமாக எழும் மனவலிமை நமக்கு இருந்ததால், நாங்கள் பிறவிப் போராளிகள்; போராட்டக் காரனுக்குத் தோல்வி இல்லை என்று அறிவித்துவிட்டு, தேர்தல் முடிவு வந்த மறுதினமே மே 17 ம் நாள் வடசென்னையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை உணர்ச்சிகரமான நிகழ்வாக நடத்தினோம். தேர்தல் தோல்வி குறித்து அதற்கு மேல் நாம் கவலைப்படவில்லை.

மோடி பதவியேற்பில் ராஜபக்சே

ஆனால், புதிதாக அமைந்த நரேந்திர மோடி அரசு, தமிழ் இனக் கொலைபாதகன் சிங்கள இராஜ பக்சேவைப் பதவிப் பிரமாணத்துக்கு அழைப்பு விடுத்தது என்று அறிந்த மாத்திரத்தில் துடிதுடித்துப் போனோம். இத்தனை ஆண்டுகள் எந்த ஈழ விடுதலை உணர்வை நெஞ்சில் ஏந்தினோமா, எத்தகைய உறுதி உணர்ச்சியை வேலூர் கொட்டடியில் கொண்டிருந் தோமோ, எந்த மான உணர்வுடன் மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு அறப்போர் படை நடத்திச் சென்றோமோ, எந்த உணர்வுடன் அடுக்கடுக்கான கிளர்ச்சிக் களங்களைக் கண்டோமோ அந்த உணர்வு குன்றிமணி அளவும் குன்றாமல், நரேந்திர மோடி பதவி ஏற்பு நாளன்றே ராஜபக்சே வருகையை எதிர்த்து, தலைநகர் டெல்லிக்கே சென்று கருப்புக் கொடி அறப்போர் நடத்தி, கைது செய்யப்பட்டோம்.

வீர வரலாறு நமக்கு மட்டுமே

குடியரசுத் தலைவர் மாளிகை விதானத்தில் நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகவும், மற்றவர்கள் அமைச்சர்களாகவும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், மாவீரன் பகத்சிங் அடைக்கப்பட்டிருந்த அறை உள்ளடங்கிய நாடாளுமன்ற காவல் நிலையத்திற்குள் நாங்கள் கைதிகளாக அடைக்கப்பட்டு இருந்தோம். இந்த லட்சிய வீர வரலாறு இந்திய அரசியலில் நமக்கு மட்டுமே உண்டு. வேறு வேறு அமைப்புகளாக திராவிட இயக்கத்தில் இருந் தாலும், உண்மையான உணர்வாளர்களின் உள்மனதில், ‘சபாஷ்! இவர்களாவது நமது முத்திரையைப் பதித்தார்களே' என்ற வாழ்த்து உணர்வுடன் பாராட்டினார்களாம்!

திராவிட இயக்கத்தை காக்கும் பெருவீரன்

பல திசைகளிலிருந்தும் தொடுக்கின்ற பாணங்கள் நஞ்சு தடவிய தாகவே இருக்கின்றன. யார் மீது? திராவிட இயக்கத்தின் அடித் தளத்தின் மீது; தமிழ் இனத்தின் உரம் மிக்க தன்மானத்தின் மீது. எனவே, திராவிட இயக்கத்திற்கு எங்கிருந்து ஆபத்து வந்தாலும், எவர் தாக்குதல் தொடுத்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அரசியல் லாப நட்டக் கணக்குப் பார்க்காமல் அவற்றை எல்லாம் எதிர்த்துக் களத்தில் நிற்கும் பெருவீரன்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நாற்திசையும் அறியும்படி கொள்கைப் பிரகடனம் முழங்கும் இடம்தான் நாளைய பூவிருந்த வல்லி மாநாடு!

பூவிருந்தவல்லி மாநாடு

பூவிருந்தவல்லி மாநாட்டு நடத்த ஆலோசனை கூறியவர், கழகத்தின் உயர்நிலைக் குழு உறுப் பினரும், திருவள்ளூர் மாவட்டச் செயலாளருமான இலட்சிய வேங்கை ஆருயிர்ச் சகோதரர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆவார். திருவள்ளூர் மாவட்டக் கழகமே திரண்டு வந்திருந்தது. எண்ணற்ற வாகனங்கள். மாவட்ட நிர்வாகி கள், ஒன்றிய-நகர செயலாளர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப் பினர்கள், அணிகளின் அமைப் பாளர்கள் வந்திருந்தனர். அந்த அணிவகுப்பைப் பார்த்த மாத்திரத்தில், மாநாட்டின் வெற்றி என் மனக் கண்ணில் தெரிந்தது.

மாநாட்டு பணி துவங்கியது

'செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, பூவிருந்த வல்லியில் மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு' என்ற வாசகங்கள் தெருக்கள்தோறும், சுவர்கள்தோறும் வண்ண எழுத்துக்களாகப் பிரகாசிக்க திருவள்ளூர் மாவட்டம் சல்லடம் கட்டிவிட்டது. வேலையை ஆரம்பித்து விட்டார்கள். தமிழகமெங்கும் உள்ள கழகக் கண்மணிகளிடம் நான் உரிமையோடு வேண்டுவதெல்லாம், பூவிருந்தவல்லி மாநாட்டை தமிழக மக்களின் சிந்தையில் சேர்க்கும் விதத்தில் விளம்பரப் படுத்துங்கள்; சுவர் எழுத்துக் களைப் பதியுங்கள்; இது தேவையான முக்கியமான பணி ஆகும்.

கேலி செய்வோர் திடுக்கிட வேண்டும்

நம் இயக்கத்தில் பிறந்த நாள் என்பது அண்ணா பிறந்த நாளுக்கு மட்டும்தானே நாம் விழா எடுக்கிறோம்! நம்மை எள்ளி நகையாடுவோர், ஏளனம் செய்வோர், இத்தோல்விக்குப் பின்னர் இயக்கம் இனி தழைக்குமா? என்ற கேள்வி எழுப்புவோர் மத்தியில், அவர்களே திடுக்கிடும் விதத்தில் நமது மாநாட்டை நடத்திட தயாராகி விட்டது, கழகத்தின் இலட்சிய வாதிகள் படை! என்ற எண்ணத்தை ஏற்படுத்துங்கள். நமது மாவட்டச் செயலாளர்கள் இதுகுறித்து மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பூவிருந்தவல்லி மாநாட்டினை வெற்றிபெறச் செய்ய வகுத்துத் தரும் திட்டங்களை செயல்படுத்திட அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
MDMK will celebrate Arigar Anna's birth anniversery on September 15, Vaiko told in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X