For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவாஜி கணேசன் குடும்பத்தை அவமதித்தவர்தானே கருணாநிதி - அமைச்சர்

Google Oneindia Tamil News

Minister slams Karunanidhi for his comment on film function
சென்னை: தன் குடும்ப உறுப்பினர்களை எல்லாம் முன் வரிசையில் அமரச் செய்து தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி, தமிழறிஞர்களை இழிவுபடுத்திய கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் அவருடைய குடும்பத்தினருக்கே மேடையில் இடம் அளிக்காத கருணாநிதி, பல முன்னணி திரைப்படக் கலைஞர்களை கீழே அமரச் செய்த கருணாநிதி, திரைப்படத் துறையையே கபளீகரம் செய்த கருணாநிதி, இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் குறித்து விமர்சிப்பது நகைப்புக்குரியதாக உள்ளது என்று தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத் தமிழர் பிரச்னையில் அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துபோக விட்டதோடு தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் சிறிதும் பரிசீலனை செய்யாத நிலையில் மத்திய அமைச்சர் அவையில் இனியும் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சரவையிலிருந்தும் தி.மு.க. உடனடியாக விலகுகிறது என்று அறிவித்துவிட்டு, தன் மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழர் நலத்தை மறந்து தன்னலத்தை முன்னிறுத்தி மூன்றே மாதங்களில் காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடைந்த கருணாநிதி, அழைக்காமல் பலரையும், அழைத்துப் பலரையும் என்ற தலைப்பில் தன்மானத்தைப் பற்றி பேசியிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதையும், இறுதி நாளில் இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு விருது வழங்கியதையும் பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, ஒரு விழா எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக சினிமா நூற்றாண்டு விழா விளங்கியதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். இதிலிருந்தே கருணாநிதியின் இந்த அறிக்கை வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையிலே, இது போன்ற விழாக்களிலே ஒருவர் தலைமை தாங்குவது தான் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை என்றும், ஆனால் இந்த மரபு இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கடைபிடிக்கப்படவில்லை; மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையிலே இடம் ஒதுக்கப்படவில்லை; சில கலைஞர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நடத்தியது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கேட்டுக் கொண்டதற்கிணங்க, முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த விழாவிற்கான அழைப்பிதழ்களை அச்சிடுவது, திரைப்படக் கலைஞர்களை அழைப்பது, முக்கிய விருந்தினர்களை அழைப்பது என அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தான் மேற்கொண்டது என்பதை கருணாநிதிக்கு முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மரபுகளைப் பற்றி கருணாநிதி பேசியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. பொதுவாக, குடியரசுத் தலைவரை யாராவது பார்க்க வேண்டும் என்றால், அவர் இருக்கும் இடம் போய் தான் பார்க்க வேண்டும். இது தான் நடைமுறை, மரபு. ஆனால், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைர விழாவில் கலந்து கொள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் சென்னைக்கு வருகை புரிந்த போது, தன்னை வந்து பார்க்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் மூலம் வற்புறுத்தி, அதன் பேரில், இந்தியக் குடியரசுத் தலைவரும் வேறு வழியின்றி, கருணாநிதியை அவரது துணைவியார் இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.

ஒரு வேளை இது போன்ற மரபு இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் போது கடைபிடிக்கப்படவில்லை என்று கருணாநிதி கூறுகிறார் போலும்! இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் நிறைவு நாளில் இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டதால், அந்த விழாவிற்கான வரைவு அழைப்பிதழ் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ஒப்புதல் பெறப்பட்ட பின்பே அச்சிடப்பட்டிருக்கும் என்ற விவரம் ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா? இதைத் தெரிந்து வைத்திருந்தும், வேண்டுமென்றே மரபு கடைபிடிக்கப்படவில்லை என்று கருணாநிதி கூறுவது குடியரசுத் தலைவரையே கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.

திரைப்பட விழாக்களில் தலையிடுவது, திரைப்படத் தொழிலில் தன் குடும்ப உறுப்பினர்களை நுழைப்பது, திரைப்பட கலைஞர்களை வைத்து பாராட்டு விழாக்களை நடத்துவது, துதிபாடிகள் முன் உலா வருவது, திரைப்படத் துறையிலுள்ள முன்னணி நடிகர்கள், நடிகையர்களை தன்னுடைய பாராட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறும், இலவசமாக கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுமாறும் வற்புறுத்துவது ஆகியவை கருணாநிதிக்கு தான் கை வந்த கலை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

சின்னத்திரை கலைஞர்கள் சார்பில் பாராட்டு விழா, தமிழ்நாடு திரைப்படத் துறை சார்பில் பாராட்டு விழா, நன்றி அறிவிப்பு விழா என பல்வேறு பாராட்டு விழாக்கள் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டன. அனைத்து திரைப்பட விழாக்களையும், திரைத் துறையைச் சார்ந்த மாநாடுகளையும் தன்னுடைய பாராட்டு விழாக்களாக மாற்றிக் காட்டிய பெருமை கருணாநிதியையே சாரும்.

இது போன்ற விழாக்களை நடத்துவதற்காக படப்பிடிப்பு பல நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதையும், திரைப்படத் துறையினரின் வருமானம் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டதையும் திரைப்படத் துறையினர் இன்னமும் மறக்கவில்லை என்பதை கருணாநிதிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

முதல்வர் ஜெயலலிதா திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவர் மீதும் அளவற்ற அன்பும், பாசமும், நேசமும் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும், அவர்கள் கவுரவிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள் என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்வதோடு, திரைப்படக் கலைஞர்களை காக்கா கூட்டம் என்று கருணாநிதி கூறியதை அவர்கள் இன்னும் மறந்துவிடவில்லை என்பதை இந்தத் தருணத்தில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

தன் குடும்ப உறுப்பினர்களை எல்லாம் முன் வரிசையில் அமரச் செய்து தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி, தமிழறிஞர்களை இழிவுபடுத்திய கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் அவருடைய குடும்பத்தினருக்கே மேடையில் இடம் அளிக்காத கருணாநிதி, பல முன்னணி திரைப்படக் கலைஞர்களை கீழே அமரச் செய்த கருணாநிதி, திரைப்படத் துறையையே கபளீகரம் செய்த கருணாநிதி, இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் குறித்து விமர்சிப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

தோளில் கிடக்கும் துண்டு என்பது பதவிக்கு சமம். இடுப்பில் உள்ள வேஷ்டி தான் மானம். கொள்கைக்காக துண்டை உதறிப் போட்டுவிட்டு போக தயங்க மாட்டோம். சுயமரியாதைக் கொள்கைகளுக்காக வேஷ்டியை இழக்க மாட்டோம் என்ற கொள்கையுடன் இருந்த தி.மு.க.வை, "வேஷ்டி போனாலும் பரவாயில்லை, துண்டு பறிபோய்விடக் கூடாது" என்ற நிலைக்கு மாற்றிக் காட்டிய தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, "துரோகம்" என்ற வார்த்தையைத் தவிர, சுயமரியாதைக் கொள்கை பற்றியோ, பகுத்தறிவு சிந்தனைகள் பற்றியோ, தன்மானம் குறித்தோ பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அமைச்சர்.

English summary
Tamil Nadu minister Rajendra Balaji has slammed DMK chief Karunanidhi for his comment on Indian film centenary function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X