For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் சூறாவளி பிரசாரம்! மின்சார பிரச்சனையை கையிலெடுத்து காங்கிரசை விளாசிய மோடி!!

By Mathi
|

சென்னை: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கோயம்புத்தூரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். தமிழகத்தின் முதன்மையான மின்சார பிரச்சனையை கையிலெடுத்து பேசிய இதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று சாடினார். அதேபோல் திமுக, அதிமுக அரசுகளையும் மோடி குறைகூறிப் பேசினார்.

கோயம்புத்தூரில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மோடி நேற்று பேசியதாவது:

மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் மோடி பதவிக்கு வரக்கூடாது என்று நினைக்கின்றனர். பொதுவாக தேர்தல் எனில் மக்களை சந்தித்து ஓட்டுக்கேட்டு, நாட்டுக்கு செய்யப்போகும் வளர்ச்சித்திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிடுவர்.

ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவ்வாறு செய்யவில்லை. மோடி ஆட்சியில் அமரக்கூடாது என்பது மட்டுமே அவர்களது தேர்தல் அறிக்கையாக உள்ளது.

நடுங்கும் காங்கிரஸ்

நடுங்கும் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சிக்கு பயம், நடுக்கம் வந்துவிட்டது. மோடி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் நிலை என்னவாகும் என்று நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தல் களம், சீரியஸாகி கொண்டிருக்கிறது. ஊழலில் ஊறிப்போனவர்களை விரட்டும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ரிமோட் கண்ட்ரோல் அரசு வேண்டாம்..

ரிமோட் கண்ட்ரோல் அரசு வேண்டாம்..

மத்தியில் அமையக்கூடிய அரசு, நல்ல அரசாக வலிமையான அரசாக இருக்க வேண்டும். பலவீனமான அரசு வேண்டாம்; 'ரிமோட் கன்ட்ரோலால்' இயக்கப்படும் அரசு வேண்டாம். டில்லியில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியது. இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போதும், மத்திய அரசு துாங்கிக் கொண்டிருந்தது. பெண்களை பாதுகாக்காத அரசு இருந்து என்ன பயன்? போராட்டக் களத்தில் குதித்தவர்களை, தண்ணீரை பீய்ச்சி அடித்து, சமாளிக்கப் பார்த்தது.

ரூ1000 கோடியில் ஒரு பைசா கூட..

ரூ1000 கோடியில் ஒரு பைசா கூட..

பெண்கள் பாதுகாப்புக்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கியும், பெண்களுக்காக ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை.

கோவை, திருப்பூர் தொழில்துறை நசிவு

கோவை, திருப்பூர் தொழில்துறை நசிவு

தமிழகத்தில் கோவை, திருப்பூரில் உள்ள தொழில்துறைகள் என்ன நிலையில் உள்ளன என மத்திய மாநில அரசுகள் சிந்தித்தனவா? இப்பகுதி தொழில் வளர்ச்சிக்கு எதாவது திட்டமிட்டார்களா? வேலைவாய்ப்பை பெருக்கினார்களா? எதுவுமே இல்லை. தொழில் துறையை முடக்கி, வேலைவாய்ப்பை இழக்க செய்துள்ளனர். இது நியாயமா?

20 ஆயிரம் மெகாவாட் மின் திட்டம் முடக்கம்

20 ஆயிரம் மெகாவாட் மின் திட்டம் முடக்கம்

நாட்டில் மக்கள் மின்சாரமின்றி தவிக்கின்றனர். ஆனால், 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்தை காங்கிரஸ் அரசு முடக்கி வைத்துள்ளது. இதனால் இந்தியா இருண்ட கண்டமாகிவிட்டது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், நிலக்கரி சுரங்கங்கள் அபரிமிதமாக உள்ளன. அப்படி இருந்தும் மின் உற்பத்தி முடங்கியுள்ளது. தமிழகத்தில் எல்லா வளமும் நிறைந்துள்ளது. காற்று, சூரிய சக்தி, நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். பதவி நாற்காலியில் தொடர்வதையே உன்னத குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள். இது நாட்டின் துர்பாக்கியம். இளைஞர்கள்தான், இந்தியாவின் சொத்து. இளைஞர்களுக்கு எதிர்காலம் ஏற்படுத்தாமல் போனால் இந்தியாவுக்கே எதிர்காலம் இல்லை.

எந்த பிரச்சனையும் வராது

எந்த பிரச்சனையும் வராது

மின் வெட்டு, குடிநீர் பிரச்னை, வேலையின்மை என்று எந்தப் பிரச்னையும் இல்லாத நிலை ஏற்படும். நீங்கள் ஒவ்வொருவரும், ஏப்ரல் 24ந் தேதி, எவ்வளவு சோதனைகள் வந்தாலும் வாக்குச் சாவடிக்கு சென்று, கட்டாயம் வாக்களிக்க வேண்டும். வலிமையான ஆட்சி அமைவதற்காக, நான் விடுக்கும் வேண்டுகோள் இது தான்'

சேலத்தில் மோடி

சேலத்தில் மோடி

முன்னதாக சேலத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த போதிலும், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளுக்கு கூட அவர்களால் தீர்வு காண முடியவில்லை. மாறாக பிரச்னைகளை அதிகப்படுத்திய அவர்கள், இப்போது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப் போவதாகக் கூறுகின்றனர்.

ஆனால், இந்தத் தேர்தல் வித்தியாசமானது. வாக்கு வங்கி அரசியல் இப்போது எடுபடாது. வெறுமனே வாக்குறுதிகள் கொடுப்பதைக் காட்டிலும் அவற்றை செயலில் காட்டுவதே மேலானது என்பதை மக்கள் விரும்புகின்றனர். ஊழலற்ற, சுத்தமான இந்தியா உருவாக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

கழிப்பிட வசதி இல்லையே...

கழிப்பிட வசதி இல்லையே...

சேலத்தில் 51% மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். மொத்த மக்களில் 73% பேர் மட்டுமே கல்வி அறிவு பெற்றுள்ளனர். ஆனால், நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆன நிலையிலும், இந்த சதவீதம் மிகவும் குறைவானது. மேலும், 65% மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. 55% வீடுகளுக்கு கழிவு நீர் வடிகால் வசதி இல்லை. ஆனால், நாங்கள் வாஜ்பாய் ஆட்சியில் முழு சுகாதாரத் திட்டம் கொண்டு வந்து, மக்களின் சுகாதார நலனுக்காக உழைத்தோம்.

60 மாதங்களில் செய்வோம்..

60 மாதங்களில் செய்வோம்..

பாஜக ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்யாத திட்டங்களை 60 மாதங்களில் செய்து முடிப்போம். வரும் 2022-ஆம் ஆண்டில் நாடு தனது 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, அனைத்து மக்களுக்கும் வீடு, தடையற்ற மின்சாரம், அருகில் பள்ளிகள், சுகாதார வசதிகளைப் பெற்றிருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

இரும்புத்தாது சந்தைப்படுத்துதல்

இரும்புத்தாது சந்தைப்படுத்துதல்

சேலம் உருக்காலை உலக அளவில் புகழ் பெற்றது. மலேசியாவின் இரட்டைக் கோபுரம், மெல்போர்ன் மைதானம் போன்றவை சேலம் இரும்பைக் கொண்டுதான் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இரும்புத் தாது அதிக அளவில் உள்ளது. ஆனால், அவற்றை நாம் ஏற்றுமதி செய்துவிட்டு, இங்குள்ள ஆலைகளுக்கான மூலப் பொருளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உள்ளது.

இதனால், உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரிக்கிறது. எனவே, ஐரோப்பிய நாடுகளுக்கு நமது உற்பத்தியை ஏற்றுமதி செய்ய முடிவதில்லை. எனவே, இங்குள்ள மூலப் பொருள்களைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே இரும்பு தயாரித்து, அவற்றைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், உருக்காலைகளை நவீனப்படுத்த வேண்டும்.

மரவள்ளி விவசாயிகள்..

மரவள்ளி விவசாயிகள்..

மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் சேலம் உலகிலேயே முன்னிலையில் உள்ளது. ஆனால், மரவள்ளி விவசாயிகளோ பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தரமான விதைகள், பூச்சிக் கொல்லி மருந்துகள் கிடைப்பதில்லை. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும் இதேபோல பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

நதிநீர் இணைப்பு

நதிநீர் இணைப்பு

நாடு முழுவதிலும் உள்ள நதிகளை இணைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம், தண்ணீர் வழங்கப்படும். மேலும், நவீன வேளாண் உத்திகள், ஆங்காங்கே மண் பரிசோதனை மையங்கள், பயிர்க் காப்பீடுத் திட்டங்கள், உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் பெருக்கப்படும். இந்தியா முன்னேற வேண்டுமானால் விவசாயிகள் முதலில் முன்னேற்றம் பெற வேண்டும்.

மின்பற்றாக்குறை

மின்பற்றாக்குறை

தமிழகம் இப்போது மின் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்சாலைகள் முடங்கியுள்ளன. இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதோடு, புதிய தொழில் வாய்ப்புகளும் மங்கியுள்ளன. எனவே, விவசாயிகளும், தொழில் முனைவோரும் பாஜக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

வேட்டி சட்டை கொடுத்த பிரேமலதா

வேட்டி சட்டை கொடுத்த பிரேமலதா

மேடைக்கு வந்த மோடிக்கு விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் சால்வை அணிவித்ததோடு, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை வழங்கினர். மோடிக்கு புரிய வேண்டும் என்பதற்காக விஜயகாந்த் மனைவி பிரேமலதா முதலில் ஆங்கிலத்தில் பேசினார். பின் அதை தமிழில் கூறினார்.

ஆடிட்டர் ரமேஷ் படத்துக்கு அஞ்சலி

ஆடிட்டர் ரமேஷ் படத்துக்கு அஞ்சலி

மோடி மாலை 5.46 மணிக்கு தன் பேச்சை துவங்கினார். முன்னதாக மறைந்த ஆடிட்டர் ரமேஷ் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பேச்சை துவங்கும் முன் வணக்கம் என்று தமிழில் கூறினார். பேச்சை 6.02 மணிக்கு முடித்த மோடி, 16 நிமிடங்கள் பேசினார்.

கிருஷ்ணகிரியில் மோடி

கிருஷ்ணகிரியில் மோடி

அதற்கு முன்னதாக கிருஷ்ணகிரியில் மோடி பேசியதாவது:

தேர்தலுக்கு முன்பாக நான் மத்திய அரசுக்கு எதிரான அலை வீசுவதாக கூறினேன். இப்போது அது சுனாமியாக மாறியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும். தற்போது நடக்கும் மக்களவை தேர்தல் கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் அல்ல. இது மக்களுக்கிடையிலான தேர்தல். கோடிக்கணக்கான மக்கள் போட்டியிடும் தேர்தல்.

கடந்த 10 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் தான் மிஞ்சியது. தற்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இனி டெல்லியில் நீடிக்காது. 10 ஆண்டு கால ஆட்சியில் செய்த தவறுகளுக்கு காங்கிரஸ் பதில் சொல்லியாகவேண்டும்.

1.5 கோடி பேருக்குத்தான் வேலை வாய்ப்பு

1.5 கோடி பேருக்குத்தான் வேலை வாய்ப்பு

ஆட்சிக்கு வந்த 100 நாளில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை கொடுப்போம் என்று கூறினார்கள். ஆனால் 10 ஆண்டில் 1.5 கோடி பேருக்கு தான் வேலைவாய்ப்பு கொடுத்துள்ளனர். பா.ஜ ஆட்சி காலத்தில் 6 கோடி பேருக்கு வேலை கொடுத்தோம். ஆனால் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக பொய்யான தகவலை அளித்து வருகிறது. 70 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்தை ஏற்படுத்தி தருவோம் என உறுதியளிக்கிறேன்.

365 நாளும் 24 மணிநேரமும் மின்சாரம்

365 நாளும் 24 மணிநேரமும் மின்சாரம்

குஜராத்தில் மின்வெட்டால் அங்கு மக்கள் பாதிக்கப்பட்டனர். நான் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் குஜராத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் மின்சாரம் கொடுக்கிறோம். மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.

மின் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்

மின் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்

ஆனால் தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு உள்ளது. தமிழகம் முன்னேற மின்சாரம் வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள் உணரவேண்டும். போதிய மின்சாரம் வழங்கப்படாததால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. நாடு முழுவதும் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

நிலக்கரி திருட்டு

நிலக்கரி திருட்டு

மின் பற்றாக்குறைக்கு காரணம் நிலக்கரி கிடைக்காதது தான். நிலக்கரியை கூட விட்டுவைக்காமல் காங்கிரஸ் கட்சியினர் திருடி விட்டனர். இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது கோப்பு காணாமல் போனதாக கூறினர். கரியை கூட விட்டு வைக்காத காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தால் அதை கூட இனி வங்கி லாக்கரில் தான் வைக்கவேண்டியிருக்கும்.

நதிநீர் இணைப்பு

நதிநீர் இணைப்பு

நாட்டின் வளர்ச்சிக்கு நதிகள் இணைப்பை பாரதிய ஜனதா வலியுறுத்தியது. ஆனால் அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் தடுத்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான். அதற்கு மாற்றாக மலர்ந்திருப்பது தான் தேசிய ஜனநாயக கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்கவேண்டும்.

9 ஆயிரம் கிராமங்களுக்கு குடிநீர்

9 ஆயிரம் கிராமங்களுக்கு குடிநீர்

நர்மதா நதியில் இருந்து 9 ஆயிரம் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கியுள்ளோம். அந்த குடிநீர் குழாய் அளவு எவ்வளவு என்பதை அறிய காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் காரிலேயே வலம் வந்து அறிந்து கொள்ளலாம். மக்களுக்கு குடிநீரும், மின்சாரமும் அடிப்படை தேவை. தமிழகத்தில் திமுக, அதிமுகவும் சிப்டு சிஸ்டத்தில் ஆட்சி நடத்துகின்றனர்.

ஒரு ஆட்சி வந்தால் மற்றொரு கட்சியினரை கைது செய்யும் போக்கு தான் நீடிக்கிறது. மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. தற்போது அமைந்துள்ள இந்த கூட்டணி வெற்றிக்கூட்டணி. வலுவாக உள்ள இந்த கூட்டணி வருங்காலத்திலும் தொடரும்.

இவ்வாறு மோடி பேசினர்.

கிருஷ்ணகிரி கூட்டத்தில் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

English summary
A day before 121 Lok Sabha constituencies are to vote in the fifth phase of the national election, the Bharatiya Janata Party’s (BJP) prime ministerial nominee Narendra Modi on Wednesday promised access to water and power to all farmers—a sizeable population—if the National Democratic Alliance (NDA) led by his party comes to power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X