For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: புதிய பயிர்காப்பீட்டுத் திட்டத்திற்கு பதிலாக தமிழக விவசாயிகள் நலன் கருதி பழைய பயிர்க்காப்பீட்டு திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

"வேளாண் தொழிலுக்குத் தேவையான பயிர்க் கடன் வழங்குதல், விதைகள் மற்றும் உரங்களை மானிய விலையில் வழங்குதல், விவசாய உபகரணங்களை மானிய விலையில் வழங்குதல் உட்பட பல்வேறு விவசாய உதவித் திட்டங்களின் மூலம் வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்தவும் முனைப்பான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

National Agricultural crop insurance program implement in TN: Jaya

மழையையே பெரிதும் நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் திட்டமாக விளங்குவது பயிர்க் காப்பீட்டுத் திட்டம். இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் அழியும் போது விவசாயிகளுக்கு ஏற்படும் பேரழிவை போக்கிடும் திட்டமாக தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்தத் திட்டத்தின்படி, காப்பீடு செய்யப்படும் தொகைக்கான காப்பீட்டுக் கட்டணம், அதாவது பிரிமியம், பயிர் மற்றும் பருவத்திற்கு ஏற்றாற் போல் இரண்டு விழுக்காடு முதல் 3.5 விழுக்காடு வரை இருந்தது. இந்தக் காப்பீட்டுக் கட்டணத்தில், 50 விழுக்காடு தொகையை தமிழ்நாடு அரசே செலுத்தி வந்தது. மீதமுள்ள தொகையை விவசாயிகள் செலுத்தி வந்தனர்.

இந்தத் திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பயிர் இழப்பீட்டுத் தொகை, காப்பீட்டு நிறுவனங்களால் வசூல் செய்யப்பட்ட காப்பீட்டுக் கட்டணத்திற்குள் இருந்தால் அந்தத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களே விவசாயிகளுக்கு வழங்கிவிடும்.

வழங்கப்பட வேண்டிய மொத்த இழப்பீட்டுத் தொகை காப்பீட்டுக் கட்டணத்தை விட கூடுதலாக இருந்தால், தேவைப்படும் அந்த கூடுதல் இழப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் சரிசமமாக பகிர்ந்து கொண்டு, காப்பீட்டு நிறுவனம் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கும். இந்தத் திட்டத்தை ஒரு முழுமையான காப்பீட்டுத் திட்டமாக கருத இயலாது என்றாலும், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடனான இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டமாகவே இருந்தது.

விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்த இந்தத் திட்டத்தை, மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் முந்தைய மத்திய கூட்டணி அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென ரத்து செய்து, அதற்குப் பதிலாக தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டம் என்னும் புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டம், திருத்திய தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம், வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் என்ற இரு அம்சங்களை கொண்டதாகும். திருத்திய தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அந்தந்த இடங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகையும், காப்பீட்டுக் கட்டணமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

உதாரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெற் பயிருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகை ஒரு ஹெக்டேருக்கு 6,440 ரூபாய் மட்டுமே. இதற்கான காப்பீட்டுக் கட்டணம் 3,349 ரூபாய் ஆகும். இதில், மத்திய, மாநில அரசுகள் தலா 1,256 ரூபாய் செலுத்த வேண்டும்.

மீதமுள்ள 837 ரூபாயை விவசாயி செலுத்த வேண்டும். இழப்பீடு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை முழுவதையும் காப்பீட்டு நிறுவனமே அளிக்கும். பயிர் இழப்பு ஏற்படும் நேரங்களில் தனது பங்காக வழங்கப்பட வேண்டிய தொகையை குறைக்கும் வகையில், இத்தகைய ஒரு பயனற்ற காப்பீட்டுத் திட்டத்தை முந்தைய மத்திய கூட்டணி அரசு அறிமுகம் செய்தது.

இந்தப் புதிய திட்டம், ‘குறைந்த இழப்பீடு, அதிக கட்டணம்' என்பதை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட திட்டம் என்பதை உணர்ந்த நான், உடனடியாக அப்போதைய பாரதப் பிரதமருக்கு 5.1.2014 அன்று கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், ஏற்கெனவே இயற்கைச் சீற்றங்களால் இன்னலுற்று கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு மேலும் கூடுதல் சுமையைக் கொடுக்கக் கூடியதாக புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் உள்ளது என்றும், இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் வேளாண் தொழிலை கடுமையாக பாதிக்கும் என்றும்; இந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய விவசாயிகள் முன்வருவது சந்தேகமே என்றும் தெரிவித்து; இந்தச் சுமையை விவசாயிகள் மேல் திணிக்காமல், இரண்டு விழுக்காட்டிற்கு மேல் உள்ள காப்பீட்டுக் கட்டணத்தை மத்திய அரசும், மாநில அரசும் சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என்றும் ஆலோசனை தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், முந்தைய மத்திய அரசு இந்தக் கருத்துருவை நிராகரித்துவிட்டது.

‘குறைந்த இழப்பீடு, அதிகக் கட்டணம்' என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கு பதிலாக, பழைய காப்பீட்டுத் திட்டமான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள விவசாயப் பிரதிநிதிகள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தற்போது மீண்டும் மத்திய அரசுக்கு ஒரு கருத்துருவை எனது தலைமையிலான அரசு அனுப்பி, அதன் அடிப்படையில், இந்த ஆண்டிற்கு மட்டும் பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே, வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைக் கருத்தில் கொண்டு, 2014 ஆம் ஆண்டு சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் பயிரிடப்படும் நெல் மற்றும் ரபி பருவத்தில் பயிரிடப்படும் இதர பயிர்களுக்கு புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டமான தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்குப் பதிலாக பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டமான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

English summary
Chief Minister Jayalalithaa said that the statement, National Agricultural crop insurance program has implement in Tamil Nadu formers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X