For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயத்தை சீரழிக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிற்களின் கள ஆய்வுக்கு தடை விதிக்க ராமதாஸ் கோரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

PMK urges Centre to ban GM crops field trail
சென்னை: அரிசி உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டால், அது இந்திய மண் வளத்தையும், உழவர்களின் எதிர்காலத்தையும் சீரழிப்பதற்கே வழிவகுக்கும். அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மரபணு மாற்றப்பட்ட அரிசி, கடுகு, கொண்டைக்கடலை, பருத்தி, கத்தரி ஆகியவற்றை வயல்களில் பயிரிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது.

மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்ஸ் எண்ணெயை இறக்குமதி செய்யவும் இக்குழு அனுமதித்திருக்கிறது. இம்முடிவு பேரதிர்ச்சியையும், வேளாண்மையின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்துகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கள ஆய்வுக்கு அனுமதிப்பது தொடர்பாக கடந்த 4 மாதங்களில் இக்குழு நான்கு முறை கூடி 60க்கும் மேற்பட்ட திட்டங்களை ஆய்வு செய்து முடிவெடுத்திருக்கிறது.

இந்தியாவில் பருத்தி தவிர மரபணு மாற்றப்பட்ட எந்த பயிரின் வணிக நோக்கிலான பயன்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், இத்தகைய கள ஆய்வுகளுக்கு அனுமதி அளிக்கும் விஷயத்தில் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? என்பது தெரியவில்லை.

இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிப்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து பரிந்துரை அளிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில்,‘‘ மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை கள ஆய்வு செய்ய அனுமதித்தால், அது விதைகளையும், சுற்றுச்சூழலையும், உணவு வழங்கல் சங்கிலியையும் சிதைத்துவிடும்.

அது மட்டுமின்றி, மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள ஆய்வை கண்காணிக்க முறையான ஒழுங்குமுறை அமைப்பு இல்லை. எனவே, இத்தகைய கள ஆய்வுக்கு தடை விதிக்க வேண்டும்''என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவசரமாக இப்பயிர்களின் கள ஆய்வு க்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது.

நாட்டின் உணவுத் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிப்பதற்கான ஒரே தீர்வு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிப்பது தான் என்ற கருத்து அறிவில் சிறந்த சிலரால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உணவுத் தேவை குறித்த அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் அருமருந்து அல்ல என்பது உலகெங்கும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி பல காலமாக பயிரிடப்படும்போதிலும், பருத்தி உற்பத்தியில் எந்த விதமான புரட்சியும் நடந்து விடவில்லை என்பதிலிருந்தே இதை உணர முடியும். இதற்குப் பிறகும் மரபணு மாற்ற பயிர்களின் ஆய்வுக்காக வாதாடுபவர்களை இந்திய விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாத, பன்னாட்டு விதை நிறுவனங்களின் பாதுகாவலர்களாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

அரிசி உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டால், அது இந்திய மண் வளத்தையும், உழவர்களின் எதிர்காலத்தையும் சீரழிப்பதற்கே வழிவகுக்கும். விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பயனும் ஏற்படாது. அதேபோல், மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்ஸ் எண்ணெயில் தீங்கை ஏற்படுத்தும் அன்னிய மரபணுக்கள் கலந்திருப்பதால் அதை உட்கொள்வோரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படும் என்பது மறுக்க முடியாத ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மதிப்பீட்டுக் குழுவின் நடவடிக்கை மக்கள் நலனுக்கு எதிரானது; கண்டிக்கத்தக்கது ஆகும்.

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய பயிர்களுக்கு அனுமதி தரப்பட்டால் அது விவசாயத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரழிவை ஏற்படுத்திவிடும். கடந்த காலங்களில் பி.டி. கத்தரிக்காயின் வணிக நோக்கிலான பயன்பாட்டுக்கும், மற்ற பயிர்களின் கள ஆய்வுக்கும் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்த போது, அந்த நேரத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் அதற்குத் தடை விதித்து தங்களின் சமூக அக்கறையையும், அரசியல் துணிச்சலையும் வெளிப்படுத்தினர். அதேபோல் இப்போதும், அரிசி, கொண்டைக்கடலை, கடுகு உள்ளிட்ட பயிர்களின் கள ஆய்வுக்கும், சோயாபீன்ஸ் எண்ணெய் இறக்குமதிக்கும் அனுமதி தரும் மதிப்பீட்டுக் குழுவின் முடிவுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் தடை விதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திரமோடி நேரடியாக தலையிட்டு வேளாண்மையை பாதுகாக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK, an ally of BJP in Tamil Nadu, today urged the Centre to ban field trail of Genetically Modified Crops as it would be disastrous to agriculture.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X