For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தை அமாவாசை: ராமேஸ்வரம், திருச்செந்தூர், குமரியில் முன்னோர்களுக்கு வழிபாடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நீராடி ஏராளமான மக்கள் தமது முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை தினத்தில், இறந்த முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். ஒவ்வொரு மாதமும் செய்ய முடியாதவர்கள் தை, ஆடி மாதங்களில் வரும் அமாவாசைத் தினத்தில் புனிதத் தலங்களுக்குச் சென்று புனித நீராடி தர்ப்பணம் செய்வர்.

தை அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து காலசாந்தி பூஜை, தீர்த்தவாரி ஆகியன நடைபெற்றன.

காலைமுதலே ஏராளமானோர் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.

Tamil Nadu Gears Up For Thai Amavasya

குமரியில் குவிந்த கூட்டம்

கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அதிகாலை 4 மணி முதல் அங்கு புனித நீராடிய பக்தர்கள், கடற்கரையில் உள்ள பரசுராம விநாயகர் கோயிலில் வழிபட்டனர்.

தை அமாவாசையையொட்டி, பகவதி அம்மன் கோயிலில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, உசபூஜை, நிவேத்ய பூஜை, ஸ்ரீபலி, உச்சிகால பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்கக் கவசம், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு கோயில் வடக்கு வாசல் திறக்கப்பட்டு தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அம்மன் திருவீதி உலா

இரவு 8 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் வீதியுலா வருதல் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெற்றதும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தார். பின்னர், பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் உள்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தார். இதைத் தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு, அத்தாளபூஜை, ஏகாந்த தீபாராதனையுடன் விழா நிறைவு பெற்றது.

பாபநாசத்தில் புனித நீராடல்

தை அமாவாசை நாளான செவ்வாய்க்கிழமை, பாபநாசம் தாமிரபரணி ஆறு, அகஸ்தியர் அருவியில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தை அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் அருள்மிகு பாபநாசநாதர் சமேத உலகாம்பிகை அம்பாள் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கே நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
குழந்தை பாக்கியம்

தை அமாவாசையை முன்னிட்டு, காஞ்சிபுரம் அருகே விஜயராகவப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே திருபுட்குழியில் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோயில் உள்ளது. இது திருமங்கை ஆழ்வாரால் மங்களாஸாஸனம் செய்யப் பெற்று 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதில் தை அமாவாசையன்று வழிபாடு நடத்துவது மிகச் சிறந்தது.

அதன்படி குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமை காலை கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். கோயிலில் இருந்து வழங்கப்பட்ட வறுத்த பயறை வயிற்றில் கட்டிக் கொண்டு, விஜயராகவப் பெருமாளை வேண்டிக் கொண்டு நாள் முழுவதும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் கோயிலில் தங்கி வழிபாடு நடத்திச் செல்லும்போது, மறுநாள் காலை வறுத்தப் பயறு முளைவிடும் என்று நம்பப்படுகிறது.

இவ்வாறு முளைவிடும் பெண்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஏராளமான பக்தர்கள் வயிற்றில் பயறைக் கட்டுக் கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் செவ்வாய்க்கிழமை மாலை தெப்போற்சவம் நடைபெற்றது.இந்தத் தெப்போற்சவம் ஜனவரி 22-ஆம் தேதி வரை நடைபெறும்.

English summary
Over one lakh people from all over the country today visited Sri Ramanathaswamy temple in Rameswaram and offered worship at the temple after poojas to their forefathers on the auspicious Thai Amavasya day on Tuesday. A large number of devotees offered 'Tarpana' (pooja to forefathers) at the Agnitheertham seashore here and also at Kanyakumari and Tiruchendur seashore after a bath in the sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X