For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவண்ணாமலையில் தங்க தேரோட்டம்… குவிந்த பக்தர்கள்.. பேருந்து பற்றாக்குறையால் திணறல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமியும், பங்குனி உத்திரம், புத்தாண்டு தினத்தை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். புத்தாண்டினை ஒட்டி தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தை காணவும், கிரிவலம் வரவும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்த காரணத்தால் போக்குவரத்துக்கு பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டதாக புகார் எழுந்தது. பேருந்து வசதி செய்யக் கோரி பக்தர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tamil New year Golden car run Tiruvannamalai

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். சித்திரை மாத பவுர்ணமியான நேற்று கிரிவலம் வர காலையில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர்.

இந்த மாதம், பங்குனி உத்திரம், பவுர்ணமி, தமிழ்புத்தாண்டு தினம் என விசேச தினங்கள் ஒன்றாக வந்த காரணத்தால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

அதிகாலை நடைதிறப்பு

புத்தாண்டையொட்டி, கோயிலில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4 முதல் 4.30 மணி வரை ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு உஷ கால சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

தங்கரதம் புறப்பாடு

காலை 9 மணிக்கு தங்க ரதம் புறப்பட்டது. ஏராளமான பக்தர்கள் திரண்டு கோயில் மூன்றாம் பிரகாரத்தில் தங்க ரதத்தை இழுத்தும், ஸ்ரீஅருணாசலேஸ்வரரை வழிபட்டும் மகிழ்ந்தனர். காலை 9.15 மணிக்கு சம்பந்த விநாயகர் சன்னிதியில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சூரிய தரிசனம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருநேர் அண்ணாமலையார் கோயில் உள்ளது. இங்கு மூலவர் மலை உச்சியின் நேராக இருப்பதால் கார்த்திகை தீபத்துக்கும், மூலவருக்கும் ஒரே இடத்தில் நின்று தீபாராதனை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று திருநேர் அண்ணாமலையார் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிரிவலம்

நேற்று மதியம் தொடங்கி சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் செல்ல தொடங்கினர். கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. பவுர்ணமி நாட்களில் கிரிவல பக்தர்களுக்கு பாதுகாப்பாக 1500 போலீசார் ஈடுபடுவார்கள்.

தற்காலிக பேருந்து நிலையம்

சென்னை, புதுச்சேரி பக்தர்களுக்காக புதிய பைபாஸ் சாலை அருகே தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது.

கிரிவலத்துக்காக இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் இரவு முதல் படிப்படியாக குறைக்கப்பட்டது. செய்யாறு, வேலூரில் ஜெயலலிதா இன்று பிரசாரம் செய்வதால், தனியார் பஸ்கள் அனைத்தும் நேற்றிரவு முதலே திருப்பி விடப்பட்டதாக புகார் எழுந்தது.

சாலை மறியல்

இதனால் பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் தற்காலிக பஸ் நிலையங்களில் விடிய விடிய காத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் இன்று காலை 7.30 மணியளவில் திண்டிவனம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் சமாதானம்

இதுபற்றி தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், பக்தர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் பக்தர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எதிர்பாராத கூட்டம்

அதேசமயம், புத்தாண்டு, பவுர்ணமி கிரிவலம் இரண்டும் ஒரே தினத்தில் வந்த காரணத்தினாலும், பள்ளி விடுமுறை தொடங்கிவிட்டதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் எதிர்பாராத அளவிற்கு குவிந்த காரணத்தினாலுமே பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டதாக போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தனர்.

English summary
Thousands of devotees witnessed the trial round of the newly-built golden car at the Annamalayar Temple here on Monday. The car, which has been built at a cost of Rs 87 lakhs, using gold, copper and silver, was taken to the third prakaram of the temple, amid chants of ‘Annamalayanukku arogara’.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X