For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின் தட்டுப்பாட்டை நீக்க புதிய திட்டங்கள்: சட்டசபையில் பட்டியலிட்ட முதல்வர் ஜெயலலிதா

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க பல புதிய மின் திட்டங்களை சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இன்று விதி எண் 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பு:

2011-ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தின் மின் தேவை 12000 மெகாவாட்டாக இருந்தது. ஆனால், மின் உற்பத்தி மற்றும் கொள்முதல் மூலம் 8,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்து வந்தது. அதாவது, 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை நிலவியது. இந்தப் பற்றாக்குறையினை போக்கும் வகையில், ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த அனல் மின் திட்டங்கள் முடுக்கி விடப்பட்டன.

நெய்வேலியில் இருந்து மின்சாரம்

நெய்வேலியில் இருந்து மின்சாரம்

தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் தேசிய அனல் மின் கழகத்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 500 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் அனல் மின் திட்டத்தின் மூன்றாவது அலகு வரும் ஆகஸ்ட் மாதம் வணிக ரீதியாக மின் உற்பத்தியைத் தொடங்கும். 500 மெகாவாட் திறன் கொண்ட தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் கூட்டு முயற்சித் திட்டத்தின் முதல் அலகு வரும் அக்டோபர் மாதத்திலும், 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாம் அலகு 2015 மார்ச் மாதத்திலும் வணிக ரீதியாக மின் உற்பத்தியை துவங்க இருக்கின்றன. இத்திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு 387 மெகாவாட் ஆகும்.

கூடங்குளத்தில் 562 மெகாவாட்

கூடங்குளத்தில் 562 மெகாவாட்

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகு 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனை 7.6.2014 அன்று எட்டியுள்ளது. இந்த அலகிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு 462 மெகாவாட் ஆகும். கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நான் பாரதப் பிரதமரைக் கேட்டுக் கொண்டதன் பலனாக, மத்திய அரசின் ஒதுக்கப்படாத அளவிலிருந்து தமிழகத்திற்கு 100 மெகாவாட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக, இந்த திட்டத்தில் தமிழகத்திற்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.

கூடங்குளம் இரண்டாம் யூனிட்

கூடங்குளம் இரண்டாம் யூனிட்

1,000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாம் அலகு இந்த ஆண்டு இறுதியில் மின் உற்பத்தியைத் தொடங்கும். இதில், தமிழகத்தின் பங்கு 463 மெகாவாட் ஆகும். மேலும், 2014-2015 ம் ஆண்டில் தலா 250 மெகாவாட் திறன் கொண்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி விரிவாக்கத் திட்டம் நிலை-2ன் இரண்டு அலகுகள் மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு 230 மெகாவாட் ஆகும்.

நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம்

நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம்

நடப்பு நிதியாண்டில் உற்பத்தித் தொடங்கவிருக்கின்ற புதிய மின் திட்டங்கள் மற்றும் நீண்ட கால அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் மற்றும் ஜுன் முதல் செப்டம்பர் வரை அதிக அளவில் கிடைக்கும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் உயர் மின் அழுத்தத் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் 1.6.2014 முதல் எனது தலைமையிலான அரசு நீக்கியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனைத்து நுகர்வோருக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.120 கோடியில் நீர்மின் நிலையம்

ரூ.120 கோடியில் நீர்மின் நிலையம்

இவற்றின் தொடர்ச்சியாக, பின்வரும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு கூறி ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் வருமாறு: இதுவரை, மேட்டூர் மற்றும் பாபநாசம் புனல் மின் நிலையங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. பெரியார் புனல் மின் நிலையம் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 1971ம் ஆண்டு தொடங்கப்பட்டு 43 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற கோவை மாவட்டத்திலுள்ள சோலையார் புனல் மின் நிலையம்-1-ன் இரு அலகுகளையும் புதுமைப்படுத்தி நவீனமயமாக்கும் பணி மற்றும் இவ்வலகுகளின் நிறுவுத் திறனை தலா 35 மெகாவாட்டிலிருந்து 42 மெகாவாட்டாக அதிகரிக்கும் பணி ஆகியவை 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

60 துணை மின் நிலையங்கள்

60 துணை மின் நிலையங்கள்

நடப்பு நிதி ஆண்டில் 60 துணை மின் நிலையங்கள் மற்றும் 2,500 சுற்று கிலோ மீட்டர் உயர் அழுத்த மின் வழித்தடப் பாதைகள் 5,284 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 60 துணை மின் நிலையங்களில், மூன்று 400 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள், ஒன்பது 230 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள், முப்பத்தெட்டு, 110 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள், பத்து 33 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் அடங்கும்.

சென்னைக்கு ரூ.338 கோடி திட்டம்

சென்னைக்கு ரூ.338 கோடி திட்டம்

இது தவிர, சென்னை மாநகரின் மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மேலும் இரண்டு 230 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் 338 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இவற்றில், மேற்கு மாம்பலத்தில் 92 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு துணை மின் நிலையமும், போரூரில் 245 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு துணை மின் நிலையமும் அமைக்கப்படும்.

சூரிய மின்சக்திக்கு முக்கியத்துவம்

சூரிய மின்சக்திக்கு முக்கியத்துவம்

மாநிலத்தின் தென் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சூரிய மின் சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை மின் தொடரமைப்பில் சேர்ப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 400 கிலோவோல்ட் துணை மின் நிலையம் 435 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரத்தில் 230 கிலோவோல்ட் துணை மின் நிலையம் 47 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்படும்.

28 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள்

28 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள்

மின் தொடரமைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் மின் பகிர்மானக் கட்டமைப்பை செம்மைப்படுத்தினால் தான் நுகர்வோருக்கு சீரான மின்சாரம் கிடைக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, இந்த நிதியாண்டில் 28,000 மின் விநியோக மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) 660 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்படும். எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் 30 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக நடப்பு நிதியாண்டில் மேலும் 10 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

English summary
Tamilnadu chief minister Jayalalitha announced new power projects in the state assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X