For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜேந்திர சோழன்.. முடிசூடிய 1000–மாவது ஆண்டு நிறைவு விழா!

Google Oneindia Tamil News

அரியலூர்: தோல்வியே காணாத ஒரே தமிழ் மன்னன், பல நாடுகளை வென்றெடுத்த ஒரே இந்திய மன்னன், சோழ ராஜ்ஜியத்தை சொர்க்க பூமியாக மாற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-ஆவது ஆண்டு விழா அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

சோழ மன்னர்கள் சுமார் 300 ஆண்டுகள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனர். இதில் ராஜராஜ சோழன் தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தார்.

அதன் பின்னர் அவரது மகன் ராஜேந்திர சோழன் கி.பி. 1014 ஆம் ஆண்டு மன்னராக முடி சூடி கொண்டார். மன்னரான பின்னர் புதிய தலைநகரை ஏற்படுத்தினார். கங்கை கொண்ட சோழபுரம் என்று அழைக்கப்பட்ட அந்த நகரிலிருந்தபடி பல வெற்றிகளைக் குவித்தார். சோழ ராஜ்ஜியத்தையும் வளம் கொழிக்கும் சொர்க்கபூமியாக மாற்றினார். 30 ஆண்டுகள் மகத்தான ஆட்சி புரிந்தார்.

தலைநகரை மாற்றியது ஏன்

தலைநகரை மாற்றியது ஏன்

தஞ்சையைத் தலைநகராக் கொண்டு சோழ ராஜ்ஜியம் தழைத்தோங்கியிருந்த நிலையில் வடக்கிலிருந்து அதாவது தற்போதைய கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அடிக்கடி படையெடுப்புகள் நடந்தன. இதனால் தமிழகத்தின் மத்தியப் பகுதியில் தலைநகரை மாற்ற முடிவு செய்தே கங்கை கொண்ட சோழபுரத்தில் புதிய தலைநகரை ஏற்படுத்தினார் ராஜேந்திர சோழன்.

கங்கையை வென்ற சோழன்

கங்கையை வென்ற சோழன்

இவரது ஆட்சிகாலத்தில் தான் வட இந்தியாவில் கங்கை வரை படையெடுத்து வெற்றியும் பெற்றார். கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக, தான் உருவாக்கிய தலைநகருக்கு கங்கை கொண்ட சோழபுரம் என்றும் பெயர் சூட்டினார். இந்த கங்கை கொண்ட சோழபுரம் தான் கி.பி. 11 ஆம் நூற்றாண்டுகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கே தலைநகரமாகவும் விளங்கியது.

மிகப் பெரிய தலைநகரம்

மிகப் பெரிய தலைநகரம்

கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரன் அமைத்த தலைநகரம் மிகப் பிரமாண்டமானதாக இருந்தது. எதிரிகள் அத்தனை சீக்கிரம் ஊடுறுவி விடாத அளவுக்கு பலத்த பாதுகாப்புடன் கூடிய கோட்டைச் சுவரைக் கட்டினார் ராஜேந்திரன். அருகிலேயே கொள்ளிடம் ஆறும் இருந்ததால் வளமைக்கும் குறைவில்லாமல் சொர்க்க பூமியாக திகழ்ந்ததாம் கங்கை கொண்ட சோழபுரம்.

மிகப்பெரிய சிவ ஆலயம்

மிகப்பெரிய சிவ ஆலயம்

தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தார். சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான்.

கோவிலின் கட்டுமானப்பணி

கோவிலின் கட்டுமானப்பணி

4 ஏக்கர் பரப்பளவில் 160 அடி உயரமுள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் கலை நயத்துடன் எண்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலின் கட்டுமானம் தற்கால பொறியாளர்களையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது. மேலும் தஞ்சைப் பெரிய கோவிலை விட இந்த கோவிலின் கட்டுமான நுனுக்கம்தான் மிகச் சிறப்பானது என்று கட்டடக் கலை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கடாரம் கொண்டான்

கடாரம் கொண்டான்

ராஜேந்திரசோழன் தனது பெரும் கடல் படையுடன் கடாரம் என்று அழைக்கப்பட்ட மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை வென்று சோழ பேரரசின் கீழ் கொண்டு வந்தார். கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது.

பிரம்மாண்ட கோட்டை

பிரம்மாண்ட கோட்டை

இந்த போர்களில் பிணைக் கைதிகளாக கொண்டு வரப்பட்ட வீரர்களை கொண்டு கங்கைகொண்ட சோழபுரத்தை எழில்மிகு நகரமாக மாற்றினார். சுமார் 260 ஏக்கர் பரப்பளவில் உட்கோட்டை என்ற இடத்தில் பிரமாண்ட கோட்டை அமைத்து அதற்குள்ளே மாளிகைமேடு என்ற இடத்தில் அரண்மனை அமைத்து ஆட்சிபுரிந்தார்.

ஏரி வெட்டிய சோழன்

ஏரி வெட்டிய சோழன்

அத்துடன் இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்கை வளம்பெற மேற்கு பகுதியில் சோழகங்கம் என்னும் மிகப்பெரிய ஏரியை வெட்டி இந்த பகுதியில் விவசாயம் செழிக்க செய்தார். இந்த ஏரிதான் பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. கங்கை வரை சென்று வென்று வந்தபோது அங்கிருந்து குடம் குடமாக கொண்டு வந்த தண்ணீரை இந்த ஏரியில் ஊற்றினார்களாம்.

பாண்டியனை விரட்டி விரட்டி வென்ற ராஜேந்திரன்

பாண்டியனை விரட்டி விரட்டி வென்ற ராஜேந்திரன்

அதேபோல பாண்டிய மன்னர்கள், சோழர்களின் பராக்கிரமத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினர். இதனால் தங்களது மணிமகுடத்தை சோழர்கள் கைப்பற்றி விடாமல் தவிர்ப்பதற்காக இலங்கைக்குக் கொண்டு போய் பத்திரப்படுத்தினர். இதை பறித்து வர ராஜராஜ சோழன் முயன்றும் முடியவில்லை. ஆனால் ராஜேந்திர சோழன் மிகவும் சாணக்கியமாக செயல்பட்டு மணிமகுடத்தை பறித்துக் கொண்டு வந்தார். கூடவே சிங்கள மன்னர்களையும் போர் புரிந்து வென்றார்.

ராஜராஜனை விட வீரம் மிக்கவர்

ராஜராஜனை விட வீரம் மிக்கவர்

தந்தை ராஜராஜ சோழனை விட வீரம் மிக்கவர், மதியூகி என்று பாராட்டப்படுகிறார் ராஜேந்திர சோழன். தோல்வியே அறியாதவர் இவர். தோல்வியைச் சந்திக்காத, அதிக வெற்றிகளைக் குவித்த ஒரே இந்திய மன்னர் என்றும் போற்றப்படுகிறார்.

தாசியை மனைவியாக்கிய பெருமைக்குரியவர்

தாசியை மனைவியாக்கிய பெருமைக்குரியவர்

சாதாரண தாசி குலத்தைச் சேர்ந்த பெண்ணை கோவில் வாசலில் சந்தித்து அவரைப் பிடித்துப் போய் மணந்து அவருக்குரிய மரியாதைகளை, வசதிகளைச் செய்து கொடுத்தவரும் கூட. அவரது பெயர் பாவை. இந்த பாவையின் சிலை கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் இப்போதும் கூட உள்ளது.

ஆயிரமாவது ஆண்டு நிறைவு

ஆயிரமாவது ஆண்டு நிறைவு

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மாமன்னன் ராஜேந்திரன் அரியணை ஏறி 1000 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடல் கடந்தும் தமிழனின் ஆட்சியை நிறுவிய ராஜேந்திரனை கொண்டாடும் விதமாக கங்கை கொண்ட சோழபுரத்தில் இரண்டு நாட்கள் விழா நடைபெறுகிறது.

மலர் வெளியீடு

மலர் வெளியீடு

விழாவையொட்டி இன்று காலை மாமன்னர் ராஜேந்திர சோழன் அரியணை ஏறி ஆயிரமாவது ஆண்டு விழா மலர் வெளியீட்டு விழா நடந்தது. இதன் முதல் பிரதியை தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குனர் சுந்தரமூர்த்தி, குலோத்துங்கன் ஆகியோர் வெளியிட சென்னை கிறிஸ்தவ கல்லூரி தமிழ் துறை தலைவர் அசேந்திரன் பெற்றுக்கொண்டார்.

தமிழறிஞர்கள் கருத்தரங்கம்

தமிழறிஞர்கள் கருத்தரங்கம்

தொடர்ந்து காலை 10 மணி முதல் பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் சிறப்புகள், ஆட்சி முறைகள் குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கல்வெட்டு துறை முன்னாள் தலைவர் ராசு, என்ஜினீயர் கோமகன், மதுரை பாண்டிய நாட்டு வரலாற்ற பேரவை தொல்லியல் அலுவலர் சாந்தலிங்கம், ராசவேலு ஆகியோர் பேசினர்.

நாட்டியாஞ்சலி

நாட்டியாஞ்சலி

மாலை 6 மணிக்கு மங்கள இசை, பரதநாட்டியம் மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தீபச்சுடர் ஓட்டம்

தீபச்சுடர் ஓட்டம்

விழாவில் நாளை காலை 8 மணிக்கு தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு தீபச்சுடர் ஓட்டம் நடக்கிறது. இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைக்கிறார். தீப ஜோதியை எழுத்தாளர் பாலகுமாரன் ஏற்றி வைக்கிறார். இந்த ஓட்டத்தில் தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

தமிழறிஞர்களுக்கு மரியாதை

தமிழறிஞர்களுக்கு மரியாதை

இந்த தீபச் சுடர் ஓட்டம் மாளிகை மேடு பகுதியில் உள்ள அரண்மனையில் நிறைவடைகிறது. அங்கு தமிழ் அறிஞர்கள் பாராட்டப்பட்டு கோவிலுக்கு யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட உள்ளனர். இதனை தமிழ்நாடு அரசு திட்டக் குழு துணைத்தலைவர் சாந்தா ஷீலாநாயர் தொடங்கி வைக்கிறார்.

ஆயிரம் தீபங்கள்

ஆயிரம் தீபங்கள்

இதையடுத்து மாலை 6 மணிக்கு கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் 1000 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

English summary
Rajendra Chola I (Rajendra Chola the Great) was the son of Rajaraja Chola I and considered one of the greatest rulers and military leaders of the Tamil Chola Empire. He succeeded his father in 1014 CE as the Chola emperor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X