For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்த்ததுமே வாயில் எச்சில் ஊற வைக்கும் "பார்டர்" புரோட்டா....!

Google Oneindia Tamil News

-இசக்கிராஜன்

செங்கோட்டை: ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல்.. அந்த ஊரின் உணவுக்கு ஒரு ஸ்பெஷல் ருசி.. அதில் இந்த பார்டர் புரோட்டைவையும் சேர்க்கலாம்.

பசியோடு வருபவர்களுக்கு ருசியோடு பரிமாறி மனம் குளிர வைப்பவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்கிறார் வள்ளுவர்.

உணவகங்களில் உண்ண வரும் வாடிக்கையாளர்களை நன்றாக உபசரித்து நல்ல முறையில் அன்போடு பேசி தங்களது கடைகளில் உள்ள உணவு பொருட்களை சுகாதாரமான முறையில் பரிமாறி ருசியோடு வழங்கி மீண்டும் மீண்டும் வர தூண்டும் அளவுக்கு வாடிக்கையாளர்களை கவர உண்மையிலேயே பெரிய சமார்த்தியம் வேண்டும்.

மேலும் தாங்கள் ரசித்து உண்ட உணவினை, தங்களது குடும்பத்தினரும் ரசித்து சாப்பிட வேண்டும் என்று பலர் விரும்புவது வழக்கம். அப்படி விரும்பும் வாடிக்கையாளர்கள் உணவு பார்சல்களை வாங்கி கொண்டு செல்லும் விதமாக உணவகங்கள் அமைய வேண்டும். அப்படி வாங்கி செல்லும் பார்சல் உணவு கெட்டு போகாமலும் இருக்க வேண்டும். அதற்கு தகுந்தவாறு அதனை தயாரிக்க வேண்டும். அப்போதுதான் உணவகங்களை தேடி வாடிக்கையாளர்கள் ரெகுலராக வரத் தொடங்குவார்கள். தனது நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடமும் உணவகத்தை பற்றி பெருமை பொங்க சொல்வார்கள்.

பிரானூர் பார்டர் புரோட்டா கடைகள்

பிரானூர் பார்டர் புரோட்டா கடைகள்

அப்படி புகழ் பெற்ற உணவகங்கள் தமிழகத்தில் ஏராளமாய் உள்ளன. அதில் குறிப்பிடும்படியாக தென்னிந்தியாவிலேயே புகழ் பெற்று விளங்குபவை நெல்லை மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையான பிரானூர் பார்டர், செங்கோட்டை ஆகிய பகுதியில் உள்ள புரோட்டா கடைகள்தான்.

டண் டண் டணக் டணக்

டண் டண் டணக் டணக்

மாலை 5 மணியை தாண்டிவிட்டாலே குற்றாலத்தின் தென்றல் காற்றோடு கலந்து கம...கம...வென.. சால்னா வாசனையும், சேர்ந்தே வரும். கொத்து புரோட்டா போடும் சத்தமும் காதுகளைக் கவ்வ ஆரம்பிக்கும்.

தேசிய உணவு

தேசிய உணவு

காரணம் இம்மாவட்டத்துக்காரர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் புரோட்டாவும், சிக்கனும் ஓன்று. ஓட்டு மொத்த தென் மாநில புரோட்டக்களுக்குச் சவால் விடும் வகையில் உள்ளன இந்த பிரானூர் பார்டர் புரோட்டா கடைகள்.

எப்போதும் சீசன்தான்

எப்போதும் சீசன்தான்

குற்றால சீசன் காலத்தில் குற்றாலம் வந்து குளித்துவிட்டு வரும் மக்கள் கூட்டம், குளித்து முடித்ததும் குறி வைத்துப் பறக்கும் அடுத்த இடமாக இந்தக் கடைகள்தான் உள்ளன. இந்தக் கடைகளுக்கு மட்டும் ஆண்டு முழுவதுமே சீசன்தான்..

சாப்பிடாம போனா எப்படி

சாப்பிடாம போனா எப்படி

30 லட்சம் உல்லாச பயணிகள் குற்றாலம் வந்தால், அதில் 60 சதவீதம் பேர் இங்கு சாப்பிடாமல் செல்வது கிடையாது. அந்தளவுக்கு புகழ் பெற்றவை இந்த கடைகள்.

விஐபி முதல் விருமாண்டி வரை....

விஐபி முதல் விருமாண்டி வரை....

குற்றாலத்திற்கு வரும் விவிஐபிக்கள் முதல் சாமனியர்கள் வரை சாப்பிடாமல், பார்சல் வாங்கிச் செல்லாமல் போக மாட்டார்கள். பெரிய பெரிய விஐபிகள் கூட இந்தக் கடைகளின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

பிலால் கடை மேஜிக்

பிலால் கடை மேஜிக்

இந்தக் கடைகளில் ஒன்றான, பிலால் ஹோட்டல் உரிமையாளரான முகமது அனீபாவும், ரஹ்மத் ஓட்டல் நடத்தி வரும் இஸ்மாயிலும் அப்படி என்னதான் மாயஜாலம் செய்கிறார்களோ பூப் போல சின்ன தட்டு போன்ற புரோட்டாவும், நாவில் எச்சில் ஊற வைக்கும் சால்னா ருசியும் வாடிக்கையாளர்களை வலுக்கட்டாயமாக இழுக்கும். இந்த இரு கடைகளிலும் முழுக்க முழுக்க நாட்டு கோழிகளை வைத்துதான் சால்னா தயாரிக்கிறார்கள் என்பது கொசுருத் தகவல்.

சத்தான சால்னா

சத்தான சால்னா

நாட்டுக் கோழிகளை ஓட்டு மொத்தமாகப் போட்டு வேகவைத்து சால்னா தயாரிப்பதால் கோழியிலுள்ள சத்துகள் அப்படியே சால்னாவிலும் கலக்கிறது. குற்றால அருவி நீரில் மருத்துவ தன்மை வாய்ந்த மூலிகை செடிகளின் குணங்கள் கலப்பது போல, இப்படி சால்னா தயாரிப்பில், தெவிட்டாத அளவுக்கு நாவிற்கு ருசியைக் கொடுக்கிறது.

செலவு ஜாஸ்திதான்.. ஆனால் டேஸ்ட் சூப்பராச்சே!

செலவு ஜாஸ்திதான்.. ஆனால் டேஸ்ட் சூப்பராச்சே!

இந்த சால்னா தயாரிப்புக்காக அதிக செலவு ஏற்படுகிறது. காரணம், முந்திரி பருப்பு, ஏலக்காய், கசகசா, கிராம்பு, சிறிய வெங்காயம் உள்ளிட்டவைகளை தனியாக சேர்க்கின்றனர்.

அப்படியே வீசி அடிச்சா.. பூப் போல புரோட்டா!!

அப்படியே வீசி அடிச்சா.. பூப் போல புரோட்டா!!

புரோட்டாவை பூப்போல மாற்றுவது எப்படி என கேட்டால், மாவை பிசைத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனை எண்ணெய் தடவி பின் சிறிது நேரம் கழித்து கல்லில் வீசி அடிப்பதால்தான் மென்மை கிடைக்கிறது என்கின்றனர்.

பார்சலுக்கு அலை மோதும் மக்கள்

பார்சலுக்கு அலை மோதும் மக்கள்

குற்றாலத்திற்கு வரும் அனைத்து அரசியல் புள்ளிகள், திரைப்பட படப்பிடிப்புக்கு இப்பகுதிக்கு வரும் நட்சத்திரங்கள் நேரிலும், பார்சல் மூலமும் பரோட்டா, சிக்கன், காடை, கவுதாரி, சாப்பாடு வாங்கி செல்வது உண்டு. தமிழகத்தின் பெரிய நடிகர்கள் முதல் இப்போதைய இளம் நடிகர்களும் இங்கு ஆள் அனுப்பி உணவு வாங்கி சென்று சாப்பிட்டுள்ளனர்.

தொடை.. துப்பாக்கி

தொடை.. துப்பாக்கி

இங்குள்ள நாட்டு கோழி சாப்பாடு அவ்வளவு பிரபலம். இங்கு போடப்படுகின்ற சிக்கன் சிக்ஸ்டி பைவ்க்கு ஆரம்பத்தில் தொடை, துப்பாக்கி என்று பெயர். அதுவே நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப சிக்கன் 65 ஆக மாறிவிட்டது. மேலும் ரோஸ்ட், ஆம்லெட், ஆப்பாயில், சிங்கிள் ஆப்பாயில், முட்டோ புரோட்டா, சிக்கன் புரோட்டா போன்றவைகளும் இங்கு பிரபலம்.

கடையைப் பார்த்தால் தானாகவே நிற்கும் வண்டிகள்

கடையைப் பார்த்தால் தானாகவே நிற்கும் வண்டிகள்

இக்கடைகள் தமிழக-கேரள எல்லையில் உள்ளது மட்டுமல்லாமல், தமிழகத்தில் வர்த்தக வாகனங்கள் நிறைந்த கரூர், நாமக்கல் போன்று நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வாகனங்களும் இங்கு நின்று செல்வது வழக்கம். இவ்வூரில் 150க்கும் மேற்பட்ட மர அறுவை ஆலைகளும் உள்ளன.

எல்லாம் கைப் பக்குவம்தான்...

எல்லாம் கைப் பக்குவம்தான்...

இந்த புரோட்டா சால்னா குறித்து பிலால் புரோட்டா கடை முகமது அனீபா, ரஹ்மத் புரோட்டா கடை உரிமையாளர் இஸ்மாயில் (இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது) ஆகியோர் கூறுகையில், எங்கள் கடை சால்னாவுக்குத் தேவையான மசாலா கலவைகளை எங்களது வீ்ட்டில் தயாரித்து தான் கொண்டு வருவோம் என்றனர். முகமது அனீபாவோ, எல்லாம் எனது மாஸ்டர் கை பக்குவம் என்கிறார்.

உஷ்.. அது மட்டும் ரகசியம்

உஷ்.. அது மட்டும் ரகசியம்

ஆனால் சால்னா தயாரிப்புக்கான சூட்சுமங்களை மட்டும் சொல்லாமல் புன் சிரிப்பு சிரிக்கின்றனர் இந்த இரு பாய்களும்.. சால்னா தயாரிப்பு ரகசியம் அந்தளவுக்கு பாதுகாக்கப்படுகிறது. அதனால்தானே பார்டர் பரோட்டா பேமஸ்.. அதுக்குத்தானே காசே...!

இந்த புரோட்டா, சால்னாவை ஒரு கை பார்ப்பதற்காகவே குற்றாலத்திற்குப் போய்ட்டு வரணும்வே ஒரு வாட்டி...!

English summary
Courtallam bound tourists never failed to taste these parotas. The famous border kadai parota has a very unique taste.. here is a story.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X