For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரேசில் கலந்து கொள்ள பைக்குகள் திருட்டு - மாஜி நீதிபதியின் பேரன் உள்பட 3 பேர் கைது

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக புதிய பைக்குகளைத் திருடிய 3 மாணவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கோடீஸ்வரர் வீட்டுப் பிள்ளைகள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபகாலமான நகைப் பறிப்பு சம்பவங்களைப் போலவே சேலத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டும் அதிகரித்துள்ளது. எனவே, திருடர்களைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் சேலம் போலீசார்.

மேலும், சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் சந்தேகத்திற்குரிய இடங்களில் போலீசார் சாதாரண உடையில் நின்று கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் சேலம் சீரங்கபாளையத்தை சேர்ந்த இம்ரான் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை என சேலம் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்திருந்தார். போலீசில் புகார் அளித்த போதும், தனிப்பட்ட முறையிலும் தனது மோட்டார் சைக்கிளை யாரும் ஓட்டிச் செல்கிறார்களா என இம்ரானும் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வந்துள்ளார்.

அப்போது, சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளை இரண்டு மாணவர்கள் ஓட்டிச் செல்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் இம்ரான். விரைந்து செயலாற்றி மாணவர்களை சுற்றி வளைத்த இம்ரான், அவர்களை அஸ்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.

போலீசாரின் விசாரணையில் பைக்கைத் திருடியதை ஒப்புக் கொண்ட மாணவர்கள், இச்செயலில் தங்களது கூட்டாளியான மற்றொரு மாணவன் குறித்தும் தெரிவித்துள்ளனர்.

விரைந்து சென்று போலீசார் அம்மாணவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஏற்கனவே இது போன்று இரண்டு மோட்டார் சைக்கிள்களைத் திருடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் 3 பேரும் பிளஸ்-2 முடித்து விட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

மாணவர்களை கைது செய்யப்பட்டதை அறிந்த அவர்களது பெற்றோர் சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையம் வந்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் உயர் போலீசாரை சந்தித்து தங்களது குழந்தைகள் தவறு செய்து இருக்க வாய்ப்பில்லை என்றனர். அப்போது போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம், நாங்கள் கைது செய்யவில்லை. மோட்டார் சைக்கிளை திருடி ஓட்டி சென்ற போது பொதுமக்களும், மோட்டார் சைக்கிளின் உரிமையாளரும் கையும் களவுமாக பிடித்து ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்துள்ளோம். கைதான மாணவர்களை ஜாமீனில் எடுத்து கொள்ளுங்கள் என கூறி பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்ட மாணவர்கள் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஹோமில் அடைக்கப் பட்டனர்.

கைதான 3 மாணவர்களும் வசதி படைத்தவர்களின் குழந்தைகள். ஒருவர் சென்னை ஹைகோர்ட்டில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவரின் பேரன். மற்றொருவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் உறவினர். மற்றொருவர் தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகியின் பேரன் ஆவார்.

மோட்டார் சைக்கிள்களை பழைய திருடர்கள் தான் திருடி வருகிறார்கள் என போலீசார் கருதி அவர்களை தேடிவந்தனர். ஆனால் படித்த மாணவர்கள் மோட்டார் சைக்கிளை திருடி வந்து இருப்பது போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பணக்கார வீட்டுப் பிள்ளைகளான அம்மாணவர்கள் ஏன் இவ்வாறு திருட்டுச் செயலில் ஈடுபட்டார்கள் என போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது :-

நாங்கள் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறோம். புதிய புதிய மோட்டார் சைக்கிளில் சென்று பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்பினோம். மோட்டார் சைக்கிள் வாங்கி தாருங்கள் என்று பெற்றோரிடம் கேட்டால் மறுத்து வந்தனர். இதனால் மோட்டார் சைக்கிளை திருடி பந்தயத்தில் கலந்து கொண்டோம்' எனத் தெரிவித்துள்ளனர்.

கைதான மாணவர்கள் வேறு வாகனங்களை ஏதும் திருடி உள்ளனரா? இவர்களுக்கு யாரும் உதவி செய்தனரா? என்றும் அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
In Salem three rich students were arrested for stealing bike to participate in bike race.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X