For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையை தடுக்காவிட்டால் போராட்டம்: ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சுங்கச்சாவடிகளில் வசூலிக்கும் கட்டணக் கொள்ளையை தடுக்காவிட்டால் மக்களை திரட்டி பாமக போராட்டம் நடத்தும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tollgate issue: Ramadoss' warning to centre

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா, வாணியம்பாடி ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளிடம் கூடுதல் கட்டணம் கேட்டு சுங்கச் சாவடி நிர்வாகம் நெருக்கடி கொடுத்ததால் அப்பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் 12 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தங்க நாற்கர சாலைத் திட்டத்தின்கீழ் சென்னையிலிருந்து பல நகரங்களுக்கு தரமான நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டபோது, அவை சீரான பயணத்திற்கு வழிவகுக்கும் என மக்கள் நம்பினர். அச்சாலைகளில் பயணம் செய்ய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தவும் தயாராக இருந்தனர். ஆனால், நெடுஞ்சாலைகளை அமைத்து, பராமரித்து அதற்கான கட்டணத்தை சுங்கச்சாவடிகளின் மூலம் வசூலிக்கும் பெருநிறுவனங்கள், தங்களின் விருப்பம் போல சுங்கக் கட்டணத்தை உயர்த்தி, கிழக்கிந்திய கம்பெனியை விட மோசமாக மக்களைச் சுரண்டுகின்றன.

தமிழகத்திலுள்ள நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கான சுங்கக் கட்டணம் வரைமுறையின்றி திடீர் திடீரென உயர்த்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதில் எந்தவித வெளிப்படைத் தன்மையும் கடைபிடிக்கப்படுவதில்லை. அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் செலுத்தப்படும் சுங்கக் கட்டணம் கடந்த 2011ஆம் ஆண்டில் ரூ.37 கோடியாக இருந்ததாகவும், இப்போது ரூ.118 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் சுங்கக் கட்டணம் 320 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத உயர்வாகும். பொதுமக்கள் பயன்படுத்தும் சேவைக்கான கட்டணத்தை உயர்த்துவதாக இருந்தால், அது குறித்து மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், சுங்கச் சாவடி நிர்வாகங்களும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் இதையெல்லாம் மதிக்காமல் நினைத்த நேரத்தில் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. இப்போக்கு தடுக்கப்பட வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காக செலவிடப்பட்ட தொகையை சுங்கச்சாவடி நிர்வாகம் குறிப்பிட்ட காலத்தில் வசூலித்து முடித்து விட்டால், அதன்பின் சுங்கக் கட்டணத்தை 40 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்பது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதியாகும்.

சுங்கச் சாவடி நிர்வாகங்களின் கட்டணக் கொள்ளை தொடர்ந்தால், அதற்கு எதிராக பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் வாய்ப்புள்ளது.

இதை தவிர்க்க சுங்கக் கட்டணக் கொள்ளையை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலை சுங்கக் கட்டண ஒழுங்குமுறை ஆணையத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் சார்பில் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Ramadoss told that if centre doesn't solve tollgate issue then his party will protest seeking a solution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X