For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல உழைக்க வேண்டும்: ஜி.கே.மணி

|

சென்னை: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Work for the victory of NDA : G.K.Mani

மேலும் இது தொடர்பாக அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் வரும் 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக பாட்டாளி மக்கள் கட்சியை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டணியிலுள்ள கட்சிகளின் தொண்டர்கள் ஒரே குடும்பமாக இணைந்து களப்பணியாற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். ஐந்தாண்டுகளாக மக்களை சொல்லொண்ணாத் துயரத்திற்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கி வந்த காங்கிரஸ் & தி.மு.க. கூட்டணி அரசிடமிருந்து மக்களை மீட்கவும், தமிழ்நாட்டில் மக்களை மதிக்காமல் மனம் போன போக்கில் காட்டாட்சி நடத்தும் ஜெயலலிதாவுக்கு மக்களின் கோபத்தை வெளிப்படுத்தவும் கிடைத்துள்ள மகத்தான வாய்ப்பு தான் இந்த தேர்தலாகும்.

மத்தியில் கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சியும், அதில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்த தி.மு.க.வும் தமிழகத்தின் நலனை காற்றில் பறக்கவிட்டுவிட்டன. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை 6 ஆண்டுகளாக அரசிதழில் வெளியிடாமல் இழுத்தடித்த மத்திய அரசு, இறுதியில் உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கைக்குப் பிறகுதான் கடந்த ஆண்டு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அதன் பிறகு ஓராண்டாகியும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

சிங்களப்படையினரால் 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு, இப்போது கச்சத்தீவே நமக்கு சொந்தமில்லை; அங்கு தமிழக மீனவர்கள் எவரும் செல்லக் கூடாது என்று தடை போட்டு வருகிறது. அதேபோல் இலங்கை இனப்பிரச்சினை, முல்லைப்பெரியாறு அணை விவகாரம், சில்லறை விற்பனையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி என காங்கிரசும், தி.மு.க.வும் அங்கம் வகித்த மத்திய அரசு தமிழக மக்களுக்கு இழைத்த துரோகங்களைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.

கடந்த ஐந்தாண்டுகளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 31.25ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.26.36ம் உயர்த்தியதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களை வாழவே முடியாத நிலைக்கு தள்ளியதும் காங்கிரஸ் & தி.மு.க. அங்கம் வகித்த மத்திய அரசு தான். மத்திய ஆட்சியாளர்கள் கடந்த 5 ஆண்டுகளில் இழைத்த கொடுமைகளைவிட அதிக கொடுமைகளை கடந்த 3 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு செய்திருக்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, மக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற ஜெயலலிதா அடுத்த சில வாரங்களில் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கட்டண உயர்வு, விலை உயர்வு மற்றும் வரி உயர்வை மக்களின் தலையில் சுமத்தி பெரும் இன்னலுக்குள்ளாக்கினார்.

ஒளிமயமான எதிர்காலத்தை அளிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அவர், தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கியிருக்கிறார். தமிழகம் என்றாலே அமைதி, வளம், முன்னேற்றம் இல்லாத மாநிலம்; கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலம் என்பது தான் நினைவுக்கு வருகிறது. மத்திய அரசை அகற்றுவதுடன், தமிழகத்தில் இந்த நிலையை மாற்ற வேண்டிய மாபெரும் கடமையும், பொறுப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதன் மூலமாக மட்டுமே இதை சாதிக்க முடியும். இதற்காக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா, தேசிய முற்போக்கு திராவிட கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் உழைக்க வேண்டும்.

ஒரு கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கும்போது பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்காக உழைப்பதைவிட மூன்று மடங்கு அதிகமாக கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு உழைக்க வேண்டும். அதன்படி தமிழகத்திலுள்ள அனைத்து இடங்களிலும் வெற்றியை குவிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

புதுச்சேரி மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு தே.மு.தி.க., ம.தி.மு.க., கொ.ம.தே.க., ஐ.ஜே.கே., புதிய நீதிக் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்காக அந்தக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
The PMK president G.K.Mani requested his party cadres to work for National Democratic alliance victory in Tamilnadu's all thirty nine Lok shaba constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X