For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம் ஆத்மி வேட்பாளராக எழுத்தாளர் ஞாநி லோக்சபா தேர்தலில் போட்டி?

By Mathi
|

சென்னை: ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஞாநி (ஞாநி சங்கரன்) தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியில் நாடு முழுவதும் ஏராளமான பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார் உள்ளிட்டோரும் சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மியில் இணைந்தனர்.

இந்நிலையில் எழுத்தாளர் ஞாநி சங்கரன், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து 'தீவிர அரசியலில் ஈடுபடுவது பற்றியும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் ஆலோசித்து வருவதாக எழுதி வருகிறார்.

Writer Gnani will join Aam Admi Party?

அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், இப்போது நடக்கப் போகும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு மறுபடி நேரடி அரசியலில் ஈடுபடலாமா என்ற சிந்தனை தோன்றியிருக்கிறது. இந்தியாவில் காங்கிரஸ், பா.ஜ.க, தமிழகத்தில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய நான்கு கட்சிகளுக்கு எதிராக மாற்று உருவானால்தான் இந்திய தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்கள் வரமுடியும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. இன்றைய சூழலில் இப்படிப்பட்ட மாற்றுக்கான அறிகுறிகள் தென்படும் காலமாக இது எனக்குத் தோன்றுகிறது. அதற்கான என் பங்களிப்பாக, அந்த மாற்றத்தை நோக்கி இன்னும் பலரையும் உந்த உற்சாகப்படுத்தும் சக்தியாக இருப்பதற்காகவே நான் தேர்தல் களத்தில் இறங்குவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இதற்கு என் தற்போதைய உடல்நிலை இடம் தருமா என்ற ஒரு கேள்விதான் எனக்கும் என் மீது பெரும் அன்பு வைத்திருக்கும் நண்பர்களுக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி. வெற்றி தோல்விகள் பற்றி யாரும் பெரிதாக யோசிக்கவில்லை. அடுத்த கட்டத்துக்கு ஒரு விஷயத்தை நகர்த்திச் செல்ல இந்த முயற்சி உதவினால் போதும் என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால் என் உடல்நிலையில் இதெல்லாம் எனக்கு சாத்தியமா, தேவைதானா என்பதே கேள்வி.

உண்மையில் தேர்தல் களத்தில் இறங்குவது பற்றி நான் பரிசீலிக்கத் தொடங்கியதற்குக் காரணமே என் உடல்நிலைதான். இப்போதைய நிலையில் நான் இன்னும் அதிகபட்சம் ஏழெட்டு ஆண்டுகள் வரை செயல்திறனுடன் இருப்பேன். குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் என்பது எனக்கே என் உடல் சார்ந்து என்னைப் பற்றி இருக்கும் மதிப்பீடு ; கடும் வாழ்க்கைமுறையின் வழியே கொண்டிருக்கும் இலக்கு.

எஞ்சியிருக்கும் இந்த ஆண்டுகளில், எஞ்சியிருக்கும் என் சக்தியை, கடந்த 40 வருடங்களாக நான் அவாவிய பல்வேறு மதிப்பீடுகளுக்கான சூழல் உருவாக என்னாலியன்றதை செய்துவிட்டுப் போய்விடவேண்டும் என்றே விரும்புகிறேன். இனி எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு பணியும் ஏதோ ஒரு விதத்தில் நல்ல விதையாகவோ, அல்லது நல்ல செடிக்கு ஊற்றிய நீராகவோ மட்டுமே இருக்கவேண்டும் என்றும், புல்லுக்கு இறைத்த நீராகவோ, மிகச் சிலருக்கு மட்டுமே பயன்பட்ட மைக்ரோ செயலாகவோ இருந்துவிட வேண்டாம் என்றும் விரும்புகிறேன். அதனால்தான் இப்போதைய உடல்நிலையிலேயே ஒரு மாற்றத்துக்கான தேர் இழுத்தலில் சேர்ந்து கயிறு பிடிக்காமல், இன்னும் ஓரிரு வருடம் கழித்து இன்னும் தளர்ந்த நிலையில் ஜன்னல் வழியே தேர் நிற்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதில் அர்த்தம் என்ன என்ற கேள்வி தோன்றுகிறது.

சிலர் சொன்னார்கள் - தேர்தலில் நின்று ஜெயித்தால் சரி. அடுத்த மக்களவையில் சில முன்மாதிரிகளுக்கு உழைக்கும் வாய்ப்பு சில வருடங்கள் இருக்கலாம். தோற்றால் ? தோற்றால் என்ன ? எப்போதும் செய்யும் வேலைகள் இருந்து கொண்டே தானே இருக்கின்றன - எழுதுவதும், பேசுவதும், நாடகமும் படங்களும் தயாரிப்பதும். கடைசி வரை எப்படியும் அதை செய்யத்தானே போகிறேன் ?!

எந்த முடிவுக்கும் இன்னும் வரவில்லை. ஆனால் என் முடிவு இன்னும் சில வருடங்களில் நிச்சயம் தடுக்கமுடியாதது என்ற யதார்த்தம் இவ்வளவையும் யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது என எழுதியுள்ளார்.

English summary
Writer and Activist Gnani may join Aam Aadmi Party (AAP) and will contest upcoming lok sabha elections, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X